நடிகன் ஆவேன் என நினைத்தது கிடையாது..கார்மென்ட்ஸ் கம்பெனி வைக்க நினைத்தேன்.. அம்மாவின் ரூ.25,000 கடன்.. சூர்யாவின் பேட்டி
நடிகன் ஆவேன் என நினைத்தது கிடையாது எனவும், கார்மென்ட்ஸ் கம்பெனி வைக்க நினைத்தேன் எனவும், அம்மாவின் ரூ.25,000 கடன் பற்றியும் நடிகர் சூர்யா மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
நடிகர் சூர்யா தான் நடிக்க வந்தது தன் தாய் வாங்கிய கடனை அடைக்க என்று சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக விளங்கிய சிவக்குமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் சமீபத்திய பேட்டிகளில் தான் ஒரு போதும் நடிக்க ஆசைப்பட்டது கிடையாது என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பாக பிங்க் வில்லா ஊடகத்துக்கு நடிகர் சூர்யா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’அம்மா வாங்கிய கடன் ரூ.25ஆயிரத்தை அடைத்துவிட்டு, கார்மென்ட்ஸ் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்பதுவே என் லட்சியமாக இருந்தது’’என்றார்.
சூர்யாவின் நடிப்பு பயணம்:
நடிகர் சூர்யா பிங்க் வில்லாவுக்கு கொடுத்த பேட்டியில், ’’தான் கார்மென்ட்ஸ் துறையில் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன். கார்மென்ட்ஸ் துறையில் பயிற்சியாளராகப் பணிசெய்த எனக்கு 15 நாட்களுக்கு ரூ.750 சம்பளம் கிடைத்தது. அப்படியே இருந்து இருந்தால் மூன்று ஆண்டுகளில் எனக்கு மாதம் ரூ.8ஆயிரம் கிடைத்திருக்கும்.
கார்மென்ட்ஸ் கம்பெனி உருவாக்க ஆசைப்பட்டேன் - சூர்யா!
எனக்கு நான் அந்த கார்மென்ட்ஸ் துறையிலேயே இருந்து ஒரு கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உந்துதலும் இருந்தது. எனக்காக என் தந்தை சிவகுமார், என் தொழிலில் ரூ. 1 கோடி முதலீடு செய்வார் என நினைத்திருக்கிறேன். ஆனால், நான் நடிகனாக மாறுவேன் என்று ஒரு போதும் எண்ணியதில்லை.
ஒரு நாள் எனது அம்மா லட்சுமி, அப்பாவுக்குத் தெரியாமல் ரூ.25ஆயிரம் கடன் வாங்கிவிட்டதாகக் கூறினார். அப்போது எனது அம்மா சொன்னார், ஒரு போதும் நமது குடும்பத்தின் வங்கியிருப்பு ஒரு லட்ச ரூபாயையோ அல்லது ஒன்றரை லட்ச ரூபாயையோ தாண்டியதில்லை எனத்தெரிவித்தார். மேலும், எனது அப்பாவும் தனது சம்பளத்தை ஒருபோதும் கறாராக வாங்கியதில்லை எனவும், அது தானாக வரும்வரை காத்திருப்பார் எனவும் கூறினார். மேலும், அந்த தருணத்தில் என் அப்பாவுக்கும் தொடர்ச்சியாக ஆறு மாதங்களில் இருந்து 10 மாதங்கள் வரை நடிக்க எந்தவொரு வாய்ப்புமே வரவில்லை'’ என்று சூர்யா கூறியிருக்கிறார்.
சூர்யாவின் முதல் பட வாய்ப்பு அமைந்தது எப்படி?:
அப்போது ஒரு நடிகனின் மகன் என்பதால், தனக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வரும் என்றும், ஆனால், இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பலமுறை தன்னை நடிக்க அழைத்தபோது, தன்னுடைய அம்மாவின் கடனை அடைப்பதற்காக தான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சூர்யா, ’’தான் ஒருபோதும் சினிமாத்துறையில் இருப்பேன் என்று நினைத்துப் பார்த்தது கூட இல்லை என்றும், கேமரா முன் நிற்பேன் என்றும், நடிகராக நடிப்பேன் என்றும் எண்ணியதுகூட கிடையாது. நான் சினிமாத் துறைக்கு வந்ததே தன் அம்மா வாங்கிய ரூ.25ஆயிரம் கடனை தான் சம்பாதித்து கொடுத்துவிட்டு, ’தங்கள் கடனை அடைத்துவிட்டேன்; கவலைப்படாதீர்கள் என சொல்லவே வந்தேன். இவ்வாறு தான் தான் நடிகர் ஆனேன். இப்படி தான் சூர்யாவாக மாறினேன்’ என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் முதல் படமான ’நேருக்கு நேர்’ திரைப்படம் 1997ஆம் ஆண்டில் வெளியானது. மணிரத்னம் தயாரித்து, வசந்த் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். கதாநாயகிகளாக கௌசல்யா, சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இயக்குநர் சிவா இயக்கிய ’கங்குவா’ படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்திருக்கிறார். பாபி தியோல் மற்றும் திஷா பதானி ஆகியோரும் இதில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்