10 வருஷ போராட்டம்.. பாலுமகேந்திரா சார் ஆபிஸுக்கு காலையில் 3:30 மணிக்கு எழுந்து நடப்பேன்.. கெத்து தினேஷ் பேட்டி
10 வருஷ போராட்டம்.. பாலுமகேந்திரா சார் ஆபிஸுக்கு காலையில் 3:30 மணிக்கு எழுந்து நடப்பேன்.. கெத்து தினேஷ் பேட்டியளித்துள்ளார்.
10 வருஷ போராட்டம்.. பாலுமகேந்திரா சார் ஆபிஸுக்கு காலையில் 3:30 மணிக்கு எழுந்து நடப்பேன் என சினிமாவில் தான் சந்தித்த சவால்களைப் பகிர்கிறார், நடிகர் கெத்து தினேஷ்.
இதுதொடர்பாக சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனிடம் கொடுத்த பேட்டியின் தொகுப்பு இது..
சிறுவயதில் படிக்கும்போதே நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. என்ன மாதிரியான நடிகனாக வேண்டும் என்ற திட்டம் இருந்ததா?
பதில் - படிக்கும்போது புதிதாக நாம் என்ன செய்யப்போகிறோம் எனத் தோன்றியது. நடிகனாக எனக்கு முதலில் அந்த எண்ணம் இல்லையென்று நினைக்கிறேன். மிலிட்டரி போகணும்னு நினைச்சேன். ஒவ்வொன்றாக உடைந்துகொண்டே இருந்தது. அடுத்து இந்தியன் ஏர்போர்ஸ் போகலாம் அப்படின்னு சொல்லிட்டு, அதற்காக பரீட்சை எல்லாம் எழுதி, இரண்டாவது ரவுண்டில் போகமுடியலை. அடுத்து, 2001-ல் சேனல் ஆரம்பிக்கலாம் அப்படின்னு தோணுச்சு. அடுத்து எஃப்.எம். நடத்தலாம்ன்னு தோணுச்சு. எங்கப்பாவோட நண்பர் சொல்கிறார். உங்கள் பையன் ரொம்பக் கனவு காண்கிறான் எனச் சொன்னார். அப்பா, பொதுப்பணித்துறையில் கார்விங் துறையில் பணி செய்துகொண்டு இருந்தார். எனக்கான முழு சுதந்திரத்தை அப்பா கொடுத்து இருந்தார். அம்மா - அப்பா செய்த நல்லதுதான் சார்,நான் இந்த நிலையில் இருக்கக் காரணம்.
அப்பாவுக்கு என்னை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் கொண்டு வரணும்னு ஆசை. அப்போது என்னமாதிரி ஆகப்போறேன்னு தெரியாம இருந்தேன். மியூஸிக் டைரக்டர் ஆகிடலாம்ன்னு தோணுச்சு. பிறகு அதுக்கு ரொம்ப இன்புட்ஸ் தேவைன்னு புரிஞ்சுக்கிட்டேன். பிறகு, சினிமா இயக்கம் போயிடலாம்ன்னு தோணுது. அப்போது கேமரா பற்றி கத்துக்கணும்னு பாலுமகேந்திரா சார்கிட்ட போயிடலாம்ன்னு முயற்சி செய்தேன். இதற்காக தினமும் காலையில் ராயபுரத்தில் 3:30 மணிக்கு எழுந்து சாலிகிராமம் வரைக்கும் நடந்தே போவேன். பிறகு, ஒருநாள் நான் எடுத்த போட்டோவைப் பார்த்திட்டு ஆபிஸ் வரச்சொல்லிட்டார், பாலு மகேந்திரா சார்.
அடுத்து அங்குபோனால், அங்கு இருக்கிற ஒருத்தர் டைரக்ஷனுக்கு பெரிய கூட்டம் இருக்கு தம்பி. இப்போது நடிக்கிறதுக்குத் தான் ஆள் தேவைன்னு சொன்னவுடன், பிளஸ் டூ கால் டிக்கெட்டில் எடுத்த படத்தை பெரிசாக்கி, அதை எடுத்துக்கிட்டு பாலுமககேந்திராவின் உதவி இயக்குநர் வெற்றிமாறன் சாரிடம் கொண்டுபோய் கொடுத்தேன்.
அப்போது தனுஷ் சார் நடிக்கும் ‘அது ஒரு கனாக்காலம்’ திரைப்படம் எடுக்கப்போறாங்க. அப்போது ஒரு சின்ன ரோல் கொடுத்திருக்காங்க. என்னுடைய கூச்சத்தால், அந்தக் காட்சியை இன்னொருத்தர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்தடுத்து கொஞ்சம் முயற்சி செய்து 2004-ல் என்னுடைய முதல் வீதி நாடகத்தில் நடித்தேன். அடுத்து ஆடிசனுக்கு போய், மத்தவங்க நடிச்சதை நடிச்சு காட்டி வாய்ப்பு கேட்கிறது, ஸ்கிரிப்ட் எழுதுறதுன்னு கத்துக்கிட்டேன்.
அந்த காலத்தில் நடிப்புப் பயிற்சி செய்ய கூத்துப்பட்டறை மாதிரி நிறைய இடங்கள் இருந்தது. அங்கு போகச் சொல்லி யாரும் பரிந்துரை பண்ணலயா?
பதில் - வெற்றிமாறன் சார் கூட சொன்னார், கூத்துப்பட்டறைப் பற்றி. என் நண்பர்கள் சிலர் சொன்னாங்க. அங்குப் போய் நடிப்பு பிராக்டீஸ் செய்ய வாய்ப்புக் கிடைக்கல. லைட் செட்டிங்ஸ் செய்யிற வேலை தான் இருந்தது. பிறகு துறைசார் வல்லுநர்கள் வழிகாட்டுனாங்க. அப்போது எனக்குள் இருந்த தயக்கம் உடைஞ்சது. நம்பிக்கை கிடைச்சது.
நடிப்புப் பயிற்சி ஏன் அங்கு இருந்து உங்களுக்குக் கிடைக்கலை?
பதில் - நமக்கு முன்னோடி போனவங்க எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. அங்க நடிப்புப் பயிற்சி எடுக்கிறவங்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை எல்லாம் இருந்தது. அங்கு நடிக்கிறதைவிட, அதை வேடிக்கைப் பார்க்க கிடைத்த வாய்ப்பு அருமையாக இருந்தது.
யார் யார் நடிப்பை எல்லாம் கூத்துப்பட்டறையில் பார்த்து இருக்கீங்க?
பதில் - கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி சார், ஆனந்த் சாமி சார், பாபு அண்ணா, மினி ரமேஷ்(நடிகர் விமல்), பெரிய ரமேஷ். இப்போது அவங்க எல்லாம் பெரிய நடிகர்களாக இருக்காங்க. ஜெய்ராம் சார், சந்திரா அக்கா, ஜெய்குமார் அண்ணா, கில்லாளன் இப்படி நிறைய பேர் இருந்தாங்க. அவங்களோட நடிப்பைப் பார்த்திருக்கேன்.
என்ன மாதிரி நடிகன் ஆக நினைச்சீங்க?
பதில் - ஒரு கட்டத்தில் சின்ன சின்ன ரோல்கள் செய்தேன். எஸ்.பி.ஜனநாதன் சார் என்னுடைய ஆடிசன் பார்த்திட்டு, ‘ஈ’படத்தில் ஒரு நல்ல ரோல் கொடுத்தார். அட்டகத்திக்கு முன்னாடி, தசை நித்திஷ்ன்னு ஒரு படத்தில் ஹீரோவாகிட்டேன். ரொம்ப அழுத்தமான படம். ஆனால், அது ரிலீஸாகல. 10 வருஷப் போராட்டத்தில் ஒரு படம் ஹீரோவாக பண்ணியாச்சு. ஆனால், எதுவுமே இல்லை கையில். திடீர்னு ஒரு கால் வருது. அதுதான் ரஞ்சித் சார். அடுத்து தான் அட்டகத்தி கிடைச்சது.
நன்றி: டூரிங் டாக்கீஸ் யூட்யூப் சேனல்
டாபிக்ஸ்