Rahul Tiky: 'குடிச்சு குடிச்சே இப்படி ஆகிட்டாரு.. எல்லாரும் ஒதுக்கிட்டாங்க..' ராகுல் டிக்கி மனைவி உருக்கம்
Rahul Tiky: என் புருஷன் குடிச்சு குடிச்சு இப்படி ஆகிட்டாரு.. ஒன்றரை வருஷம் அவரோட வாழ்ந்துருக்கேன். ஆனா என்ன எல்லாரும் ஒதுக்கிட்டாங்க என ராகுல் டிக்கியின் மனைவி ஆதங்கமாக பேசியுள்ளார்.

Rahul Tiky: இன்ஸ்டாகிராமில் சினிமா காட்சிகள், இண்டர்நெட்டில் வைரலாகும் வசனங்களை தனக்கே உரித்தான பாணியில் பேசியும், நடித்தும் வீடியோ வெளியிட்டு மக்களை சிரிக்க வைத்து வந்தவர் ராகுல் டிக்கி.
ராகுல் டிக்கி மரணம்
இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல, யூடியூப், பேஸ்புக் போன்ற அனைத்து சமூக ஊடகங்களிலும் இவரது வீடியோக்கள் எல்லாம் பயங்கர வைரல். இவர் சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு செய்தியை அறிந்த அவரது பின்தொடர்பாளர்கள் பலரும் சோகமடைந்தனர். அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
ராகுலின் 2ம் மனைவி
இந்நிலையில், உயிரிழந்த ராகுல் டிக்கியின் 2ம் மனைவி தேவிகா செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோவில், ஈரோட்டைச் சேர்ந்த அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ராகுலுக்கு அறிமுகமாகியதாக கூறினார்.
பின் நெருங்கிய நண்பர்களாக மாறிய இவர்கள் குடும்ப நண்பர்களாகி திருமணமும் செய்து கொண்டதாக கூறினார். ராகுலுக்கு முதலில் ஒரு திருமணம் ஆகி இருந்தது எனக்குத் தெரியாது. அந்தப் பெண்ணுடன் 6 மாதம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் இதெல்லாம் கல்யாணத்திற்கு பின் தான் தெரியும்.
ஒன்றரை வருட வாழ்க்கை
ஆனால், என்னை ராகுலின் மனைவி என மற்றவர்கள் முன் சொல்வதை விரும்பாத அவரது அம்மா, எங்களை தனியாக போய் வாழச் சொன்னார். அதற்கு முன் நானும் ராகுலும் அவரது வீட்டில் 1 வருடம் 3 மாதம் தங்கி இருந்தோம். நான் தற்போது ஈரோட்டிற்கு வந்தே 3 மாதங்கள் தான் ஆகிறது.
ராகுலுக்கு கடவுள் நம்பிக்கை மிகவும் அதிகம். ராகுலுக்கு பட வாய்ப்புகள் எல்லாம் வரும் என்பதற்காக தான் தனியே குடித்தனம் வந்தோம். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா தான் வாழ்ந்தோம். அவர் மாதிரி யாரும் என்ன பாத்துக்க முடியாது.
குடிப்பழக்கம் தான் பிரச்சனை
ஆனா, பிரச்சனையே குடி பழக்கத்துனால தான். சின்ன வயசா இருக்கும் போதே அவரோட அம்மா கை கால் வலிக்குதுன்னா நீ குடிச்சிக்கோன்னு சொன்னதால அவரு வீட்டுலயே நல்லா குடிப்பாரு. நாளுக்கு நாள் அது ரொம்ப அதிகமாகிடுச்சு. குடிச்சிட்டு ரொம்ப புலம்புவாரு. எனக்கு ஏன் இப்படி ஆகுதுன்னு தான் கேப்பாரு.அவருக்கு, படம், வண்டின்னா ரொம்ப இஷ்டம்.
நான் தான் காரணம்ன்னு சொல்றாங்க
கள்ளக்குறிச்சில அவரு டான்ஸ் கிளாஸ் போயிட்டு வந்தப்போ தான் அவர நான் கடைசியா பாக்குறேன். திங்கக்கிழமை அவரு மாலை போடுறதா இருந்தது. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.
நான் கல்யாணம் ஆகி எங்க அம்மா வீட்ல தங்குனதே இல்ல. எப்போவும் அவரோட தான் இருப்பேன். இப்போ பொங்கல் வந்துருக்கு. அவரும் இங்க இல்லாததுனால எங்க அம்மா வீட்டுக்கு வந்தேன். ஆனா இப்படி ஆகிடுச்சு. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்ன்னு சொல்லிட்டாங்க.
என்கிட்ட எதுவும் சொல்லல
அவரு இறந்துட்டாரு. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்ல. அவரோட உடம்ப எரிச்சிடலாம்ன்னு சொன்னேன். அது அவங்க அம்மாக்கு பிடிக்கல. அதனால என்கிட்ட அவரோட உடம்ப என்ன பண்ணுறாங்கன்னே சொல்லல.
ராகுலோட அம்மா முஸ்லீம். அப்பா இந்து. அவரு அம்மா திடீர்ன்னு முஸ்லீம் முறைப்படி தான் உடம்ப அடக்கம் பண்ணனும்ன்னு சொல்லிட்டாங்க. என்ன தொட விடல, அழுக விடல. எனக்குன்னு யாருமே இல்லாம போயிட்டாங்க என ஆதங்கமா பேசினார். மேலும், அவர் தான் என்னை விட்டுட்டு போயிட்டாரு. அவங்களாவது என்கூட ஆதரவா இருக்கலாம் இல்ல எனவும் கேள்வி எழுப்புகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்