தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Indian 2 Movie Shooting In Final Schedule And Only Few Scenes Remaining For Shoot

Indian 2: முடியும் தருவாயில் இந்தியன் 2 - ரிலீஸ் எப்போது? முழு விபரம் உள்ளே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 28, 2024 04:22 PM IST

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடைசி சில நாள்கள் ஷுட்டிங் மட்டும் வடசென்னை பகுதியில் நடைபெறுகிறது.

 இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன்
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியன் 2 படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் 24ஆம் தேதி வெளியடவும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்தியன் 3 படத்தை உருவாக்குவது தொடர்பாகவும் வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுத் ப்ரீத் சிங் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் புரொமோ விடியோ ஒன்றும் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் தோன்றிய வயதான கேரக்டராக சேனாபதி கதாபாத்திரத்தில் இந்த பாகத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O படத்துக்கு பின்னர் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துடன் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர்.

அதேபோல் கமல்ஹாசன் இந்தியன் 2 அறிவிப்புக்கு பின்னர் விக்ரம் படத்தில் நடித்த நிலையில், அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனாதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அள்ளியது. அந்த காலகட்டத்திலேயே ரூ. 50 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி பேன் இந்தியா படமாக ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து 21 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 குறித்த அறிவிப்பை இயக்குநர் ஷங்கர் - கமல்ஹாசன் இணைந்து அறிவித்தனர். படத்தில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. 2019இல் தான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், லைக்கா புரொடக்‌ஷஸ் நிறுவனத்துக்கு இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் கைமாறியது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சிக்கல்கள், தாமதங்களுக்கு இடையே ஷுட்டிங் நடைபெற்று வந்த நிலையில், இறுதி கட்டத்தை எட்டி போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தயாராக உள்ளது.

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் முறையாக ஷங்கர் இயக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து ஆகியோர் திரைக்கதை எழுதுகிறார்கள்.

ரசிகர்களின் 7 ஆண்டு காத்திருப்புக்கு பின் இந்தியன் 2 இந்த ஆண்டில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்