MGR Kalai Arasi: விண்வெளியில் பயணித்த எம்ஜிஆர்.. வேற்றுகிரகவாசிகளுடன் ஒரு பயணம்.. முதல் சயின்ஸ் பிக்ஷன் தமிழ் படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mgr Kalai Arasi: விண்வெளியில் பயணித்த எம்ஜிஆர்.. வேற்றுகிரகவாசிகளுடன் ஒரு பயணம்.. முதல் சயின்ஸ் பிக்ஷன் தமிழ் படம்!

MGR Kalai Arasi: விண்வெளியில் பயணித்த எம்ஜிஆர்.. வேற்றுகிரகவாசிகளுடன் ஒரு பயணம்.. முதல் சயின்ஸ் பிக்ஷன் தமிழ் படம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 19, 2024 05:50 AM IST

1963 ஆம் ஆண்டு கலையரசி என்ற முதல் விண்வெளி திரைப்படமானது எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வெளியானது. இந்தியாவிலேயே இதுதான் முதல் விண்வெளி திரைப்படம் என்ற கருத்தும் உலவி வருகிறது. இந்த திரைப்படத்தை ஏ.காசிலிங்கம் என்பவர் இயக்கி இருந்தார்.

கலை அரசி
கலை அரசி

இதுவரை இந்தியாவை பொருத்தவரை தமிழ் சினிமா என்பது ஒரு முக்கிய இடத்தில் இருந்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நூற்றாண்டுகளை கடந்து தமிழ் சினிமா வாழ்ந்து வருகிறது என்றால் அது வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் எந்த குறையும் இருக்காது.

இந்த நெடுந்தூர பயணத்தில் தமிழ் சினிமா கூறாத கருத்துக்களே இல்லை. அப்படி பார்க்கும் வகையில் இன்று வரை தொழில்நுட்பம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் திரைப்படங்கள் என்றாலே ஹாலிவுட் அளவிற்கு யாராலும் செய்ய முடியாது என்ற கருத்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அவரவர் பார்வையில் இப்படி ஒரு கருத்து தோன்றினாலும் தமிழ் சினிமா அதையும் விட்டு வைக்காமல் தன்னுடைய தடத்தை பதித்துள்ளது என்று கூறினால் பலருக்கும் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

தமிழ் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாத கலைஞன் எம்ஜிஆர். ஒரு நடிகர் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து அதற்கு ஏற்றார் போல் திரைப்படங்களை கொடுத்து வருவது வழக்கம். ஆனால் அதனை மாற்றி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அப்படி ஒரு செயலை அன்றே எம்ஜிஆர் செய்திருக்கிறார். கத்தி சண்டை, வாள் சண்டை, குதிரை சவ்வாரி, இளவரசி, எதிரி நாடுகள் என வரலாற்று திரைப்படங்களாக நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் தனது பிம்பத்தை உடைத்து சயின்ஸ் பிக்சன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்து புதுமையான முயற்சியில் ஈடுபட்டார்.

1963 ஆம் ஆண்டு கலையரசி என்ற முதல் விண்வெளி திரைப்படமானது எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வெளியானது. இந்தியாவிலேயே இதுதான் முதல் விண்வெளி திரைப்படம் என்ற கருத்தும் உலவி வருகிறது. இந்த திரைப்படத்தை ஏ.காசிலிங்கம் என்பவர் இயக்கி இருந்தார்.

தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கும் வேற்று கிரகத்தில் கலையை வளர்க்க வேண்டும் என பூலோகத்தில் கலை அரசியாக வாழக்கூடிய ஒரு பெண்ணை கடத்தி வேற்று கிரகத்திற்கு கொண்டு செல்கின்றனர். கலை அரசியாக நடித்தவர் நடிகை பானுமதி. பானுமதி காப்பாற்ற காதலராக இருக்கும் எம்ஜிஆர் அந்த வேற்றுக்கிரத்திற்கு செல்கிறார். இதுவே இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஆகும்.

நாம் அதைப் பற்றி பேச வரவில்லை. வேற்று கிரகத்திலிருந்து வரக்கூடியவர்கள் பறக்கும் தட்டில் பறந்து வந்து பானுமதியை கடந்து செல்வார்கள். மீண்டும் அந்த கிரகத்திற்கு எம்ஜிஆர் பறக்கும் தட்டின் மூலம் சென்று அங்கே இறங்குவார். அங்கே செல்லும் எம்ஜிஆருக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

நம் பூமியில் இருப்பது போல அங்கே ஈர்ப்பு விசை அந்த அளவிற்கு கிடையாது. அந்த கிரகத்தில் கால் வைத்த உடனே எம்ஜிஆர் மிதந்து பொறுமையாக கால் வைப்பார். தற்போது தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் ஸ்லோமோஷன் காட்சிகளுக்கு எந்த குறையும் இல்லாமல் அப்போது எடுக்கப்பட்டிருக்கும்.

எம்ஜிஆர் உருவத்தைப் போலவே வேற்றுக்கிரகத்திலும் கோமாளியாக ஒரு எம்ஜிஆர் வாழ்ந்து வருவார். ஒரே ஃபிரேமில் இருவரும் சந்திக்கும் காட்சி அமையும். அப்போது ஒரு எம்ஜிஆர் ஸ்லோமோஷனில் நடந்து வருவார், மற்றொரு எம்ஜிஆர் சாதாரணமாக நடந்து வருவார். அப்போது இந்த இரண்டு காட்சிகளையும் ஒரே திரையில் காட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

பின்னர் வேற்றுக் கிரகத்தில் இருக்கும் எம்ஜிஆர் ஒரு காலணியை கொடுத்து இதை அணிந்து கொண்டால் சாதாரணமாக நடக்கலாம் என கொடுப்பார். இது கற்பனையாக இருந்தாலும் தனது சொந்த கற்பனையை வைத்து இயக்குனர் இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது. கட்டாயம் இது குறித்து அவர் நன்கு அறிந்த பிறகு எடுத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் இரண்டு எம்ஜிஆரும் உணவருந்தும் பொழுது விண்வெளியில் இருக்கும் எம்ஜிஆர் நாங்கள் மொத்த சத்துக்களையும் இந்த ஒரு உணவில் எடுத்துக் கொள்வோம் என மாத்திரை போன்ற ஒரு சிறிய உருண்டையைக் காட்டுவார்.

ஏனென்றால் உண்மையில் விண்வெளியில் உணவு அப்படித்தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து முழுமையான தெளிவு பெற்ற பிறகு இயக்குனர் இந்த கதை களத்தில் இறங்கி இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

1963 ஆம் ஆண்டு மனிதன் விண்வெளிக்குச் செல்லக்கூடிய கதையை இந்த திரைப்படம் கூறியது. 1969 ஆம் ஆண்டு நிலவில் மனிதன் கால் பதிப்பதற்கு முன்பாகவே கலைஞர்கள் தங்களது கற்பனையால் அண்டத்தையே வலம் வந்து விட்டனர்.

கற்பனையாக இருந்தாலும் உண்மையாக விண்வெளி செல்வதற்கு முன்பாகவே, நம்மை அதுவும் குறிப்பாக தமிழர்களை கலையரசி திரைப்படம் விண்வெளிக்கு அழைத்துச் சென்று விட்டது.

பறக்கும் தட்டு, புவியீர்ப்பு விசை, வேற்றுகிரக மனிதர்கள், சிறந்த தொழில்நுட்பம் என விண்வெளி கதைக்களத்தை கொண்டு கலையரசி மக்கள் மத்தியில் களமிறங்கினாலும், இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. எம்ஜிஆரை வீரனாக கண்ட ரசிகர்களுக்கு இந்த படத்தில் கோமாளி கதாபாத்திரத்தில் வரும் எம்ஜிஆரை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. அதேசமயம் திரைக்கதை சற்று சுமாராகத்தான் இருக்கும்.

தற்போது வரை பலரும் நடிக்க தயங்கும் படைப்புகளில் சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களும் உண்டு. படம் தோல்வியை கண்டிருந்தாலும் காலம் கடந்தும் கொண்டாட கூடிய மிக முக்கிய படைப்புகளில் கலை அரசி சிறப்பான இடத்தில் இருந்து வருகிறது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.