RIP Bhavatharini: அன்பு மகளே என கடைசியாக அழைத்த இளையராஜா - உருக்கமான பதிவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharini: அன்பு மகளே என கடைசியாக அழைத்த இளையராஜா - உருக்கமான பதிவு!

RIP Bhavatharini: அன்பு மகளே என கடைசியாக அழைத்த இளையராஜா - உருக்கமான பதிவு!

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 07:17 PM IST

மகள் பவதாரிணியின் இறப்பு குறித்து இளையராஜா போட்ட டிவீட் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள் பவதாரிணியின் இறப்பு குறித்து இளையராஜா உருக்கமாக போட்ட டிவீட்
மகள் பவதாரிணியின் இறப்பு குறித்து இளையராஜா உருக்கமாக போட்ட டிவீட்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( ஜன.25) மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 47. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். பவதாரிணி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் மகள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார். பவதாரிணி கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸினஸ் செய்து வருகிறார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. முன்னதாக இவர், ‘ராசய்யா’ படத்தில் பாடகியாக அறிமுகமானார். மேலும் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோரது இசையிலும் பவதாரிணி பாடியுள்ளார்.

‘அழகி’ படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. மேலும், ‘உல்லாசம்’ படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த 'அநேகன்’ படத்தில் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி' பாட்டும் பவதாரிணியின் தனித்துவமான குரலுக்கு மிகப்பெரிய சான்றாகும்.

பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகள் பவதாரிணி குறித்து இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் உருக்கமானப் பதிவு ஒன்றைப் போட்டு, பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘அன்பு மகளே’ எனப் பதிவிட்டு, பிளாக் அண்ட் வொயிட்டில் பவதாரிணி சிறுமியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு இருக்கும் இளையராஜா ஏதோ ஒரு புகைப்படத்தைக் காட்ட, அதை சிறுமியாக இருக்கும் பவதாரிணி உன்னிப்பாகப் பார்த்துச் சிரிக்கிறாள்.

இந்தப் பதிவிற்குக் கீழே எக்ஸ் பதிவர் ஒருவர், ‘’இறைவனும் உங்கள் குருநாதர்களும் உங்களுக்கு மனஉறுதியைத் தர வேண்டும்’’ எனப் பதிவிட்டுள்ளார். இன்னொரு எக்ஸ் தளப் பதிவர், ‘’ தாயுடன் சேர்ந்த அன்பு மகள். இந்த உலகிற்காக உங்களை விட்டுச் சென்று இருக்கிறார்கள் ஞானியே'’ என உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.