Actor Sri: ‘ரொம்ப நாளாவே அவரை தொடர்பு கொள்ள முயற்சி பண்றோம்.. தயவு செஞ்சு யாராவது உதவி பண்ணுங்க’ -‘மாநகரம்’ தயாரிப்பாளர்
Actor sri: நாங்கள் உண்மையிலேயே ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் நல்வாழ்க்கையில் அக்கறை கொண்டிருக்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாங்கள் நீண்ட காலமாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். - ‘மாநகரம்’ தயாரிப்பாளர்!

Actor Sri: ஸ்ரீயை தொடர்புகொள்ள உதவினால் மகிழ்ச்சி என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
சினிமாவில் சிறப்பாக நடிக்கும் பல நடிகர்களும் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே மாறி பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து போகின்றனர். இது போன்ற நிலையில் இருக்கும் நடிகர்களை சக நடிகர்கள் உதவி செய்து தேற்றுவார்கள்.
தற்போது இதே போன்ற நிலையில் மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீக்கு வந்து விட்டதா என பலரும் கேள்வி எழுந்து இருக்கிறது. இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள்தான், இது கோலிவுட்டை பரபரப்பாகி வரும் அதே நிலையில், அவர் குறித்தான பல்வேறு யூகங்களுக்கும் வித்திட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மாநகரம், இறுகப்பற்று உட்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில், ‘நாங்கள் உண்மையிலேயே ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் நல்வாழ்க்கையில் அக்கறை கொண்டிருக்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாங்கள் நீண்ட காலமாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.
ஸ்ரீயைச் சுற்றி இவ்வளவு ஊகங்கள் உருவாகுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இந்த நேரத்தில் ஸ்ரீயை அணுகி அவரை நல்ல ஆரோக்கியத்திற்கு கொண்டு வருவதுதான் இப்போதைய முன்னுரிமை.
ஸ்ரீயை தொடர்பு கொண்டு மீண்டும் அவரை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்கு யாரேனும் எங்களுக்கு உதவினால் மிக்க மகிழ்ச்சி’ என்று பதிவிட்டு இருக்கிறார். முன்னதாக ஸ்ரீ நடித்த படங்களில் அவருக்கு முறைப்படியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஸ்ரீ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது, மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று என சில படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சில படங்களில் நடித்தாலும், அதில் அனைத்திலும் அவரது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது படத்தில் அப்பாவி இளைஞனாக காதல் வயப்படும் போதும், தன் காதலிக்காக செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போதும் என ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்து இருப்பார்.
மாநகரத்தில் கோவாக்கார இளைஞனாக, வில் அம்பு படத்தில் சுற்றித் திரிந்து கெத்து காட்டும் பையனாக என அசத்தியிருப்பார். இவர் இனி பல படங்களில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இறுகப்பற்று படத்திற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்க வில்லை. இதற்கிடையே, பிக்பாஸ் முதலாவது சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்று என்னால் இங்கு இருக்க முடியவில்லை எனக் கூறி அவராகவே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்