'சிகரெட்ட புடிச்சிட்டு நடந்து வந்தேன்.. சூப்பர் மச்சான்னு பாராட்டுனாங்க.. எனக்கு ஒன்னும் புரியல'- சிவராஜ் குமார்
ரஜினிகாந்த்- நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என நடிகர் சிவராஜ் குமார் கூறியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மெகாஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி காந்த், வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன், ரித்து உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படம் வருமா என பலரும் நெல்சனிடமும் ரஜினிகாந்த்திடமும் கேட்டுக் கொண்டே வந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 அப்டேட்
ஜெயிலர் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதனை நடிகை ரம்யா கிருஷ்ணன் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த வீடியோக்களும் போட்டோக்களும் வைரலானது.
சம்பவத்தை உறுதி செய்த சிவராஜ் குமார்
இந்த சமயத்தில், ஜெயிலர் 2 படத்தின் பேச்சு மீண்டும் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தான். அவர் தான் கூலி படத்தில் நடிக்க உள்ளதாகவும் விரைவில் எனக்கான காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஜெயிலர் 2 படம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் தொடர்கிறது. டைரக்டர் நெல்சன் இதைப்பற்றி என்னிடம் பேசினார். இப்போ தான் ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால், என் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என நினைக்கிறேன் என்றார்.
ரஜினி சாருக்காக தான்
நான் ஜெயிலர் படத்துல நடிப்பேன்னே நினைக்கல. அதுவும் இல்லாம இந்தப் படத்துல எனக்கு இவ்ளோ பெரிய ஹைப் கிடைக்கும்ன்னும் நான் நினைக்கல. நான் இந்தப் படத்த ரஜினி சாருக்காக தான் பண்ணேன். அவர் படத்துல நடிக்கிறாருன்னு தான் ஓகே சொன்னேன். சின்ன வயசுல இருந்தே ஒரு குடும்பம் மாதிரி பழகினதால ரஜினி சார் படத்துக்கு என்னால நோ சொல்லவே முடியல. அது ஒரு சின்ன நிகழ்ச்சியா இகுந்திருந்தா கூட நான் ஓகே சொல்லி இருப்பேன்.
கதை கூட கேக்கல
நான் அந்தப் படத்துக்கு கதை கூட கேக்கவே இல்ல. அவரு வந்து நின்னு என்ன தொட்டா போதும்ன்னு நெனச்சேன், அதுனால நான் அப்படியே வந்துட்டேன். நெல்சன் எனக்கு முழு கதையும் சொல்றேன்னு சொன்னாரு. நான் தான் வேணாம்ன்னு சொல்லிட்டேன். என்ன கேரக்டரா இருந்தாலும் நான் நடிக்குறேன்னு சொன்னேன். ஆனா, அந்தப் படத்துல என்னோட சீன் எப்படி வேலை செஞ்சதுன்னே சத்தியமா இப்போ வரைக்கும் தெரியல.
மச்சான்களின் வாழ்த்து
படம் ரிலீஸ் ஆன முதல் நாள் என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் போன் பண்றாங்க. என்னா மச்சான்.. என்னடா தூள் கிளப்பிட்ட அப்படிங்குறாங்க. நான் அப்படி என்னடா பண்ணேன். 2 சீன் தானடா வந்தேன்னு கேக்குறேன். அவங்களா என்ன இல்ல மச்சான். சூப்பர் மச்சான அப்படின்னு பாராட்டிட்டு இருக்காங்க. ஆஸ்திரேலியா, அமெரிக்காவுல இருந்து எல்லாம் போன் பண்றாங்க.
மனைவி விமர்சனம்
சத்தியமா இதெல்லாம் நடக்கும்ன்னு தெரியவே தெரியாது. இன்னைக்கு கூட என் மனைவி கேப்பாங்க. அந்தப் படத்துல நீ என்ன பண்ணு சொல்லு? நீ சிகரெட்ட பிடிச்சுட்டு நடந்து வந்த அவ்ளோ தான் அப்படின்னுவாங்க. ஆனா அது எல்லாம் இவ்ளோ பெருசா ஆகும்ன்னு தெரியலன்னு சொல்லுவாங்க.
நன்றி
ஒருவேளை அந்த சீன் என்ன நல்ல லுக்கா காட்டிருக்கலாம். அதுனால நான் கேமரா மேனுக்கு நன்றி சொல்லிக்குறேன். டைரக்டர் நெல்சனுக்கும் அனிருத்துக்கும் நன்றி சொல்றேன். அவங்க எனக்கு ரொம்ப அருமையான ஒரு பின்னணி இசை கொடுத்திருக்காங்க. அது நான் எங்க போனாலும் என் பின்னாடியே வருது. இது எனக்கு ஆச்சரியமா இருந்தாலும் ரொம்ப அருமையா இருந்தது. அதுனால நான் எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்" என்றார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இவரது பேச்சு தற்போது வைரலாகி வருவதால், இவரைப் போலவே இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்த அத்தனை பேரும் படத்தில் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதனை படக்குழு அறிவித்த பின் தான் தெரிந்து கொள்ள முடியும்.
