தமிழ் செய்திகள்  /  Entertainment  /  I Belong To Thiruparangundram And 98 Percent People Hate Him Said Director Atlee After Receiving The Award

Atlee Emotional: 'திருப்பரங்குன்றப் பையன் நான்.. 98 % பேர் வெறுத்தாங்க.. தூங்கவிடாமல் செய்த கனவு' - கலங்கிய அட்லீ!

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 05:27 PM IST

Atlee Emotional:தானும் ஷாருக்கானும் ஒன்றாக இருந்த புகைப்படத்தைப் பார்த்து இரண்டு விழுக்காடு மனிதர்கள் தான் வாழ்த்தினார்கள் என்று இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.

இயக்குநர் அட்லீ குமார்
இயக்குநர் அட்லீ குமார் (ANI Picture Service)

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த வயதிலேயே இயக்குநர் ஆனவர்களில் முக்கியமானவர், அட்லீ. ஷார்ட் ஃபிலிம் மூலம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மனதைக் கவர்ந்து அவரின் உதவி இயக்குநராக ஆனவர், அட்லீ குமார். எந்திரன், நண்பன் ஆகியப் படங்களில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநாகப் பணிபுரிந்தார். 

அதன்பின், ராஜா ராணி என்னும் படத்தை எடுத்தார். அப்படம் மெளனராகம் என்னும் மணிரத்தினம் படத்தின் மறு உருவாக்கம் போல் இருந்தது என சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின், தெறி என்னும் படத்தை இயக்கியிருந்தார், அட்லீ. அப்படமும் சத்ரியன் படத்தின் சாயலில் இருந்தாக விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் இந்த இரண்டு படங்களும் வசூலில் குறையவில்லை. அதன்பின், மெர்சல், பிகில் என இவர் இயக்கிய படங்கள் ஹிட்டடித்தன. இருப்பினும், அவரது படத்தில் வரும் காட்சிகளை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு, நெட்டிசன்கள் எழுதுவதைத் தவிர்க்கவில்லை.

இந்நிலையில் ஷாருக்கானுடன் ஐபிஎல் பார்க்க சென்ற இயக்குநர் அட்லீயைப் பலரும் காப்பி மன்னன் என்றும்,  ஷாருக்கான் அருகில் நிற்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது; அவரை வைத்து படத்தை இயக்கமுடியுமா என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது அவற்றுக்குப் பதிலாக, நடிகர் ஷாருக்கானும் இயக்குநர் அட்லீயும் ‘ ஜவான்’ படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியானது. 

மேலும், பாலிவுட்டில் உச்ச நடிகராகத் திகழும் ஷாருக்கானை வைத்து, அட்லீ இயக்கிய திரைப்படமான ஜவான், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அட்லீயை வெறுத்தவர்களுக்கு எல்லாம் பதிலடியாக இருந்தது. 

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்கள் அனைத்துக்கும் என்.டி.டி.வி விருது பெறும் விழா மேடையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார், இயக்குநர் அட்லீ. 

ஆம். என்.டி.டி.வி 2023-24ஆம் ஆண்டுக்கான இந்தியன் விருதை அட்லீ பெற்றுக்கொண்டபின் அவர் பேசியதாவது, ‘’ தூங்கும்போது கனவு வரும். ஆனால், என்னுடையது எல்லாம் கனவே அல்ல. எந்த கனவு உங்களைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே நிஜக்கனவு.

இது என்னுடைய நீண்டகால கனவு. நான் இன்று இந்த விருதை என்னுடன் சேர்த்துக் கொண்டேன்.

நான் மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சார்ந்தவன் சரியா.. அங்கு இருந்து டெல்லி வந்து எனக்காக சில விஷயங்களைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் குறித்து நாங்கள் 2019ஆம் ஆண்டில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஷாருக்கான் சார் சென்னைக்கு வந்து என்னை சந்தித்தார். மேலும் அப்போது என்னை 2019ஆம் ஆண்டில் ஐபிஎல் மேட்ச் பார்க்க அழைத்துச் சென்றார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருக்கும் இடையே போட்டி நடந்துகொண்டு இருந்தது. அப்போது நாங்கள் ஒன்றாக இருப்பது போல், புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியில் வந்தது. அந்தப் பொதுவெளியில் வந்த புகைப்படம் குறித்து இரண்டு சதவீத நபர்கள் தான் என்னை வாழ்த்தினார்கள். 98 விழுக்காடு நபர்கள் என்னை வெறுத்தார்கள்.

அந்த வெறுப்பைக் கொப்பளித்தவரில் ஒருவர் சொன்னார், ’’நீ வந்து அவர் முன் நிற்க சரியான நபரா? நீ அவருடன் சேர்ந்து படத்தை இயக்கப் போகிறாயா?’’ எனப் பல்வேறு கேள்விகேட்டு காயப்படுத்தினார். 

அவரைப் போன்றவர்களுக்கு என் பதில், ‘’இந்த விருது தான் நாங்கள் உருவாக்கியது’’ என்று என்.டி.டி.வி இந்தியன் விருதைப் பெற்றதைத் தூக்கிக் காண்பித்தார், இயக்குநர் அட்லீ.

IPL_Entry_Point

டாபிக்ஸ்