Pa Ranjith: சரியான நேரத்தில் இந்தி படம், ஹீரோ குறித்து முறையாக அறிவிப்பேன் - இயக்குநர் பா. ரஞ்சித்
இந்தி படம் ஒன்றை இயக்க உள்ளேன். ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. சரியான நேரத்தில் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என இயக்குநர் பா. ரஞ்சித் இந்துஸ்தான் டைமஸ்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை கொடுத்துள்ளார். தனது படங்களில் அரசியலை சேர்த்து சமூக மாற்றத்துக்கு வித்திடும் இயக்குநராக இருந்து வருகிறார்.
இவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அனைத்து படங்களும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு விமர்சக ரீதியாகவும் பெரிதும் பேசப்பட்டது.
2024 தொடங்கி மூன்று மாதம் கூட நிறைவுபெறாத நிலையில் தனது தயாரிப்பிள் ப்ளூ ஸ்டார், ஜெ பேபி ஆகிய படங்களை வெளியிட்டுள்ளார். இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி நடிப்பில் இவர் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இதையடுத்து இந்துஸ்தான் டைமஸ்க்கு இயக்குநர் பா. ரஞ்சித் பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தி சினிமாவை இயக்கும் பா. ரஞ்சித்
நான் இந்தி படம் ஒன்றை விரைவில் இயக்க உள்ளேன். ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சரியான நேரத்தில் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்.
நான் இயக்கி முடித்திருக்கும் தங்கலான் வெள்ளையர்களின் காலனி ஆதிக்க காலத்தில் நடக்கும் சுவாரஸ்யம் மிக்க கதையாக உள்ளது. கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை மையமாக கொண்டிருக்கும் இந்த படம். தங்க சுரங்கத்தில் பணிபுரியும் ஒடுக்கப்பட்ட மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புவதும், அந்த மக்களில் ஒருவனாக இருப்பவன் தலைவனாக உருவெடுத்து அதை செய்து காட்டுவதும்தான் படத்தின் கதை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " சமூக அரசியல் மீது கவனம் செலுத்தவே திரைத்துறைக்கு நான் வந்ததற்கான முக்கிய காரணம். நாம் யார், எங்கிருந்து வருகிறோம், மக்களுக்கு தேவை என்ன என்பன போன்ற பல விஷயங்களை சினிமா மூலம் எடுத்து கூற வேண்டும்.
அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தவரை நான் திறந்த புத்தகமாகவே இருந்துள்ளேன். என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் எனது அரசியல் நிலை குறித்து நன்கு தெரியும். என்னிடம் பணியாற்றுபவர்களிடம் இதை ஒரு விதியாகவே பின்பற்றி வருகிறேன்" என்று கூறினார்.
சர்பட்டா 2 திரைப்படம்
பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்சிங் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம் சர்பட்டா.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டார் பா. ரஞ்சித். தற்போது அந்த படத்தின் இயக்க பணிகளில் இயக்குநர் பா. ரஞ்சித் பிஸியாக இருந்து வருகிறார்.
சர்பட்டா 2 படத்தின் மேக்கிங் விடியோ ஒன்றும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே தங்கலான் படத்தின் ரீலிஸ் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
தங்கலான் ரிலீஸ் எப்போது?
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தங்கலான் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த படம் தேர்தல் முடிவுக்கு பின்னர் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் படம் வெளியாகும் என தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்