Karakattakaran kanaka: அம்மாவின் இறப்பு; கைவிட்ட காதலன்.. வெந்து வேகாத அரிசி;வீட்டில் சிறை; நடிகை கனகா அழிந்த கதை!
கரகட்டக்காரன் படம் மூலமாக பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்த நடிகை கனகா தாய் இறந்த பின்னர் எப்படி நிலைகுலைந்து போனார் என்பது பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்
அவர் பேசும் போது, “கரகாட்டக்காரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் கனகாவிற்கு நாலாபுறமும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. கனகாவை அவரது அம்மா தேவிகா தான் அரண் போல இருந்து பாதுகாத்து வந்தார்.
திடீரென்று அவர் ஒரு நாள் இறந்து போனார். கனகாவிற்கு அம்மா தான் எல்லாமே. தேவிகாவின் இறப்பு கனகாவை நிலைகுலைய செய்து விட்டது. கமிட் பண்ண படங்களுக்கு அவரால் சரியாக செல்ல முடியவில்லை. எந்த விஷயத்திலும் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. வீட்டிலேயே கனகா முடங்கி விட்டார். மீண்டும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கனகாவிற்கு வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைக்கிறார்கள்.
இருப்பினும் தாயாரின் நினைவிலிருந்து கனகாவால் மீண்டு வர முடியவில்லை. திடீரென்று கனகா ஒரு நாள் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தன்னுடைய கணவர் பெயர் புருஷோத்தமன் என்றும் அவர் நியூயார்க்கில் இருப்பதாகவும் அறிவித்தார். உடனே பத்திரிகையாளர்கள் கணவரின் புகைப்படத்தை கேட்கிறார்கள். புகைப்படம் தர முடியாது என்ற அவர் சொல்லிவிட்டார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சொன்னது பொய் என்பது தெரிய வந்தது. அவர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. தன்னை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதற்காக அவர் அப்படி சொன்னாரா? இல்லை தன் பாதுகாப்பிற்காக ஒரு ஆள் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை.
கனகாவின் வீட்டில் சொத்து தகராறு என்றும் அவர் வீட்டின் ஒரு பகுதி எரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது. இதை தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அங்கு சென்றார்கள். அவரது வீட்டில் உள்ளே சென்று பார்த்த பொழுது வெந்து வேகாத அரிசி என வீடே அலங்கோலமாக கிடந்தது. அப்போது கோபமடைந்த கனகா உங்களை யார் இங்கெல்லாம் வரச் சொன்னது என்று கடிந்து கொண்டார்.
தேவிகா உதவிய தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய மகனை கனகாவுக்கு உதவியாளராக அனுப்பி வைத்தார். அவர் கனகாவுக்கு எல்லாமுமாய் இருந்து கிட்டத்தட்ட பழைய கனகாவை மீண்டும் கொண்டு வருவதற்கு அவர் முயற்சி செய்தார். இந்த நிலையில் தான் கனகாவின் மீது உதவியாளருக்கு காதல் முளைத்தது.
ஆனால் கனகாவிற்கு உதவியாளர் தன்னை தவறாக நடத்த முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கூப்பிட்டு கண்டித்ததோடு, காவல் நிலையத்தில் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டினார். இந்த நிலையில் அந்த உதவியாளர் கனகாவிடமிருந்து சென்று விட்டார். சில காலங்களுக்கு பிறகு அந்த உதவியாளர் தன்னை உண்மையாக நேசித்ததை கனகா புரிந்து கொண்டார். அம்மாவின் இறப்போடு, இந்த குற்ற உணர்வும் கனகாவை மிகவும் பாதித்துவிட்டது. மீண்டும் நிலைகுலைந்து போனார். மீண்டும் வீட்டுக்குள்ளேயே தன்னை சிறை வைத்து இருந்து கொண்டார்.” என்று பேசினார்