தூள் கிளப்பும் ரேட்டிங்.. லக்கி பாஸ்கர் படத்திற்கு துல்கர் சல்மான் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு துல்கர் வாங்கிய சம்பளம் குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது
மகாநதி திரைப்படத்தில், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்து
தெலுங்கில் அறிமுகமானார் நடிகர் துல்கர் சல்மான். அறிமுகமான திரைப்படமே அமோக வெற்றி பெற,
இதற்கு அடுத்த படியாக அவர் கதாநாயகனாக நடித்து தெலுங்கில் உருவான சீதாராமம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி துல்கர் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. தீபாவளி ரேஸில் வெளியானாலும் சக படங்களோடு போட்டி போட்டு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
ஓடிடியில் வெளியானது.
வழக்கமாக எந்தப் படம் வெளியானாலும் வெளியான 30 நாட்களுக்குள், ஓடிடியில் நுழைந்துவிடும். அதன்படி, லக்கி பாஸ்கர் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வரும் என்று சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்கை போலவே ஒடிடி யிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்திற்காக துல்கர் சல்மான் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபிலிம் பீட் செய்தி தளம் வெளியிட்ட தகவலின் படி, பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் துல்கர் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்காக 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது.
ஹாட்ரிக் வெற்றி
தொடர்ந்து தெலுங்கில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டு வருகிறாராம்.
ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் பேனரின்கீழ் சூர்யதேவரா நாகவன்ஷி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோருடன் இணைந்து சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளது. வெங்கி அட்லூரி கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். ராம்கி, சூர்யா ஸ்ரீனிவாஸ், சச்சின் கேடேகர், சாய் குமார், சுதா, ரகு பாபு, ஹைப்பர் ஆதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
லக்கி பாஸ்கர் படத்தின் கதை என்ன?:
படத்தின் நாயகன் பாஸ்கர் குமார் ஒரு சாதாரண வங்கி ஊழியர். குடும்பப் பிரச்னை காரணமாக கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார். அவர் பணத்திற்காக ஆண்டனி என்ற நபருடன் கைகோர்த்து சட்டவிரோத பரிவர்த்தனைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதிக்கிறார். குறிப்பாக, வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ்கர் ஊழல்கள் அம்பலமாகுமா? பாஸ்கர் பணம் சம்பாதித்து குடும்பத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன? பாஸ்கர் எப்படி எல்லா பிரச்னைகளிலும் இருந்து மீண்டு வருகிறார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இப்படத்தில் இருக்கிறது.
தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் துல்கர் சல்மான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மலையாள படங்களைவிட டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
டாபிக்ஸ்