Rail Movie Public Review: ரயில் படம் எப்படி இருக்கு? வடக்கன் அல்லது ரயில் படம் பற்றி மக்களின் கருத்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rail Movie Public Review: ரயில் படம் எப்படி இருக்கு? வடக்கன் அல்லது ரயில் படம் பற்றி மக்களின் கருத்து

Rail Movie Public Review: ரயில் படம் எப்படி இருக்கு? வடக்கன் அல்லது ரயில் படம் பற்றி மக்களின் கருத்து

Marimuthu M HT Tamil
Updated Jun 21, 2024 03:21 PM IST

Rail Movie Public Review: வடக்கன் எனத் தலைப்பிடப்பட்டு, பின்னர் ரயில் என மாறிய படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் ‘ரயில்’படத்தினை பார்த்த மக்களின் ரிவியூ மற்றும் கருத்துகளைப் பார்க்கலாம்.

Rail Movie Public Review: ரயில் படம் எப்படி இருக்கு? வடக்கன் அல்லது ரயில் படம் பற்றி மக்களின் கருத்து
Rail Movie Public Review: ரயில் படம் எப்படி இருக்கு? வடக்கன் அல்லது ரயில் படம் பற்றி மக்களின் கருத்து

வைரல் ஆன டீஸர்:

இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அப்போது, இப்படத்தின் தலைப்பு ‘வடக்கன்’ என வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீஸரில் 'வடக்கனுங்கள எல்லாரையும் அடிச்சு பத்துவோம்.. வடக்கன் நாயே, உன்ன கொல்லாம விட மாட்டேன்.. பிழைக்க வர்றவன்.. இந்த ஊரு வடையை திங்க மாட்டானா’’ போன்ற வெறுப்பை கக்கும் வசனங்கள் இடம்பெற்றதாகப் பலரால் விமர்சிக்கப்பட்டது.

அதன்பின், படத்திற்கு ’வடக்கன்’ எனப்பெயர் வைக்க சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இப்படத்தின் தலைப்பு ‘ரயில் என்று’ மாறியது. 

படத்தில் பெரும்பாலும் அறிமுக நடிகர்களே நடித்து இருக்கின்றனர். படத்தின் கதையின் நாயகனாக குங்குமராஜ் என்பவரும், கதையின் நாயகியாக வைரமாலா என்பவரும் நடித்திருக்கின்றனர். மேலும் சக நடிகர்களாக கவிஞர் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசையினை எஸ்.ஜே.ஜனனி என்னும் புதுமுகமும் ஒளிப்பதிவினை தேனி ஈஸ்வரும் செய்துள்ளனர்.  

இந்த ’ரயில்’ படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடபுதுபட்டி, அல்லிநகரம், ஊஞ்சாம்பட்டி, அன்னஞ்சி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தலைதூக்கி வருவதை ஒட்டி எழும் பிரச்னைகள் குறித்தும் அதற்குண்டான தீர்வையும் இப்படம் பேசுவாதகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ’ரயில்’ படத்தினை பார்த்து வெளியே வந்த பொதுமக்கள் கூறிய கருத்துகளின் தொகுப்புகள் கீழே கொடுக்கப்படுகின்றன. 

ரயில் படம் பார்த்த மக்களின் முதல் கருத்து:

ரயில்’படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த முதல் நபர் ஒருவர் படம் குறித்துப் பேசுகையில்,  ‘ படத்தில் எல்லோருமே புதுமுகங்கள் நல்லா நடிச்சிருக்காங்க. வசனம் எல்லாம் சூப்பர்ணே’ என்றார்.

அதன்பின் வந்த இன்னொரு திரைப்பட ஆர்வலர், ‘’ எனக்கு இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் செகண்ட் ஆஃப் எல்லாம் கண்ணில் தண்ணி வந்துசிருச்சு. இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் அன்பை சொல்லியிருக்காங்க. வந்தேறிகள்னு சொல்றாங்கல்ல. அது எல்லாத்தையும் உடைச்சு, வடக்கிற்கும் தெற்கிற்கும் உண்டான இணைப்புப் பாலமா இருக்குது, பாஸ்கர் சக்தியோட டைரக்‌ஷன். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் காட்சிகள் ஆரம்பத்தில் இருந்து நல்லா இருந்துச்சு. மியூசிக் - பிஜிஎம் எல்லாம் நல்லா இருந்துது. அவங்க பெயர் தான் நினைவில் இல்லை. ஓவர் ஆல் ’ரயில்’ திரைப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது’’ என்றார். 

’ரயில்’ படம் பார்த்து வெளியே வந்த இன்னொரு நபர், ’’ சமீப நாட்களாக ரத்தவாடைகளும் துப்பாக்கிச் சத்தமும் கேட்ட திரையரங்கில் ஒரு மனித வாழ்வியலை மனிதத்தைப் பேசுகின்ற படம், ரயில். எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் இயக்கமும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ஜனனி மேடமோட இசையும் படத்துக்கு வலுசேர்த்து இருக்கு. எல்லோரும் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய ஒரு வாழ்வியல் திரைப்படம், ரயில்’ எனக் கூறிவிட்டுச் சென்றார். 

மேலும் ‘ரயில்’படம் குறித்துப் பேசிய இளம்பெண் ஒருவர், ‘’வடக்கன்ஸ் அப்படின்னா, நம்மளோட வேலைவாய்ப்பு எல்லாத்தையும் வாங்கிக்கிறான் என்பது மாதியும் அதிகபட்சம் அவங்களே இருக்காங்கறது மாதிரியும் தெரியுது. அது கான்செஃப்ட் கிடையாது. நம்மளோட சொந்தபந்தங்கள் எல்லாம் எப்படி துபாய்போயிட்டு பிழைக்கிறாங்களோ, அதுபோல் தான் இந்த இங்க வடமாநிலத் தொழிலாளர்கள் வருவதும் அப்படிங்கிறமாதிரி எடுத்திருக்காங்க. இதுவரவேற்க வேண்டிய விஷயம். ஃபேமிலியோடு வந்து பார்க்கணும். ஒவ்வொரு கேரக்டரும் இயல்பா நடிச்சிருக்காங்க’’ எனப் பேசி முடித்தார். 

மேலும் இதுபற்றிப் பேசிய ஒரு பெண், ‘’ படத்தின் நாயகிக்கும் வடக்கனாக இருக்கும் நபருக்கும் இருக்கும் உறவினை கண்ணியமாக காட்டிய இயக்குநருக்கு நன்றி. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வதுபோல் இருக்கிறது. இரண்டாம் பாதி சென்டிமென்ட் ஆக இருக்குது’’ என்றார்.

படம் பார்த்துப் பேசிய இன்னொருவர்,  ‘’ஒரு குடிகாரன் குழந்தையோட பாசத்தில் திருந்துறான் அப்படிங்கிற கிளைமேக்ஸ் உலுக்கி எடுத்திருச்சு’’ என்றார். 

  • பப்ளிக் ரிவியூ உதவி: நன்றி: ஸ்ருதி டிவி