Lover:"லவ்வர் படம் எப்படி இருக்கு?" - பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் சொன்ன முதல் விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lover:"லவ்வர் படம் எப்படி இருக்கு?" - பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் சொன்ன முதல் விமர்சனம்

Lover:"லவ்வர் படம் எப்படி இருக்கு?" - பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் சொன்ன முதல் விமர்சனம்

Marimuthu M HT Tamil
Feb 08, 2024 02:08 PM IST

லவ்வர் படத்தின் பிரிவியூ ஷோவைப் பார்த்தவர்கள், அப்படத்தினை பாராட்டியுள்ளனர்.

லவ்வர் படம் எப்படி இருக்கு? - பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் சொன்ன முதல் விமர்சனம்
லவ்வர் படம் எப்படி இருக்கு? - பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் சொன்ன முதல் விமர்சனம்

குட் நைட் படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த புதிய படத்திலும் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். ''லவ்வர்'' எனப் பெயரிடப்பட்டிருக்கும், இப்படம் நாளை (பிப்ரவரி 9ஆம் தேதி) திரையரங்கில் வெளியாகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையையும், பாடல்களை மோகன்ராஜனும் கொடுத்திருக்கின்றனர். அதேபோல் ஒளிப்பதிவு பணியினை ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பினை விக்ரமனும் செய்யவுள்ளனர்.

இப்படமும் ‘’குட்நைட்'' படத்தைப்போன்று ஒரு இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட படமாக வெளிவர இருக்கிறது. குறிப்பாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரச்னைகள், சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப்பேசும் ஒரு ரொமான்டிக் டிராமாவாக வெளிவரவுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மாடர்ன் லவ்-வில் நடித்த ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவா அருகே நடத்தப்பட்டுள்ளது. நாளை(பிப்ரவரி 9ஆம் தேதி) திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்தப் புதிய ட்ரெய்லரில் கடந்த 6ஆண்டுகளில் நாம் இருவரும் சேர்ந்து கொண்டாடாத உன்னுடைய முதல் பர்த் டே இதுதான் எனக் கூறுகிறார், அருண்.

சிறிது நேரத்தில் நாம் இருவரும் பிரேக் அப் செய்வது முதல் முறையா எனக் கேட்கிறார், அருண்.

இதனிடையே உடன் இருக்கும் திவ்யாவின் தோழி, காதலன் உடனடியாக ‘ஸாரி’ கேட்டதும் உடனடியாக சேர்ந்துவிடுவதா என பெண்ணின் ஈகோவை தூண்டிவிடுகிறார். அருணின் அம்மா, ’எப்போது உங்கள் இருவரின் திருமணம் குறித்து வீட்டில் பேசப்போகிறாய்?’எனக் கேட்க, தனக்கு கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது என்கிறார், திவ்யா. உடனே கோபமாக சுற்றும் அருண், ‘காசுக்குத்தான் எல்லாம் மரியாதை’என, காதலியுடன் பைக்கில் செல்லும்போது புலம்புகிறார். அடுத்த காட்சியில்,குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அருணின் அப்பா, ’அவனுக்கு வேலை இல்லை’ என்பதை திவ்யா முன்பு ஏளனமாகப் பேசுகிறார். இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. அப்போது, திவ்யா, பிரபல யூட்யூபரின் நட்பு கிடைத்து, சேர்ந்து அடிக்கடி வெளியில் போய் ஊர் சுற்றுகிறார். இதையறிந்து திவ்யாவிடம் சரமாரியாகக் கோபப்படுகிறார், மணிகண்டன்.

இறுதியில் காதலி திவ்யா மாறிவிட்டதாக குற்றச்சாட்டினை வைக்கிறார், அருண். ஆனால், திவ்யா ‘இதுதான் தான்’ எனச்சொல்கிறார்.

இறுதியில் சேர்கின்றனரா, இல்லையா என்பதே படத்தின் கிளைமேக்ஸ் எனச் சொல்கிறது ட்ரெய்லர். இப்படத்தில் அருணாக நடிகர் மணிகண்டனும், திவ்யாவாக ஸ்ரீகெளரிபிரியாவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஸ்னீக் பீக்கும் வெளியாகி வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பிரிவியூ ஷோ, சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் திரை விமர்சகர்களுக்குப் போட்டு காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல யூட்யூப் திரை விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, ‘லவ்வர் படத்தை நிஜத்திற்கு மிக நெருக்கமாக எடுத்த இயக்குநருக்கு வாழ்த்துகள். பல இடங்களில் மணிகண்டனின் நடிப்பு எரிச்சலை உண்டாக்கினாலும், சிரிப்பை உண்டாக்கவும் அவர் தவறவில்லை. இந்தப் படம் முக்கியமான படம் மற்றும் இப்படத்துக்குப் பின் ரிலேஷன்ஷிப் தொடர்பான ஆரோக்கியமான வாதங்கள் நடைபெறவாய்ப்புள்ளது’ என்றார்.

 

பொழுதுபோக்கு உற்றுநோக்காளர் ரமேஷ் பாலா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ‘லவ்வர்’படத்துக்கு 5க்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘காதலன் மீது அதீத அன்பு வைத்துள்ள பொசிசிவ் காதலன். தனக்கு என்று ஒரு இடம் தேவைப்படும் எனத்தேடி அலையும் காதலி. இவர்கள் இருவரும் தங்களுக்கிடையேயான பிரச்னைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்ள முடியுமா அல்லது நிரந்தரமாக பிரிந்தார்களா என்பதுதான் படம். முதல் காட்சியிலிருந்தே படம் ஈர்க்கிறது. கிளைமாக்ஸ் நம்பும் படியாகவுள்ளது’ என்றார்.

மேலும் அவர், ''நடிகர் மணிகண்டனின் நடிப்பு அருமையாக உள்ளது. நடிகை ஸ்ரீகௌரிப்ரியாவின் நடிப்பு அற்புதமாக உள்ளது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு உயிர்நாடியாகவுள்ளது. இயக்குநர் பிரபு வியாஸ், இன்றைய இளைஞர்களுக்கான யதார்த்தமான காதல் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். மொத்தத்தில் படம் வெற்றியைப் பெறுவது உறுதி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

காதலர் தினத்தை டார்கெட் செய்து, படம் வெளியாவதால், நிறைய இளசுகளைக் கவர்ந்திழுத்து இப்படம் ஹிட்டடிக்கும் என சொல்கின்றனர், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக்கைப் பார்த்த ரசிகர்கள். அதேபோல் மணிகண்டனின் ஸ்கிரிப்ட் செலக்‌ஷனையும், படத்தின் வசனங்களையும் சுட்டிக்காட்டி வாழ்த்துகின்றனர், நெட்டிசன்கள்.

இப்படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.