Game Changer: ரியல் கேம் சேஞ்சர் டி.என். சேஷன் பற்றி தெரியுமா உங்களுக்கு? சினிமாவை மிஞ்சும் சுவாரசியங்கள்..
Game Changer: ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் மதுரையின் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.என். சேஷனின் வாழ்க்கை கதையா? என்பது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸின் அபிமன்யு மாத்தூர் எழுதிய சிறப்பு கட்டுரை.
Game Changer: ராம் சரண்- கியாரா அத்வானி நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஷங்கர் இயக்கிய இந்த அரசியல் த்ரில்லர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், "தந்தை மற்றும் மகன்" என 2 வேடங்களில் நடித்து திறமையை நிரூபித்துள்ள ராம் சரண் தலைமை தேர்தல் அதிகாரியாக அரசியலை சுத்தப்படுத்த முயற்சிக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
டி.என்.சேஷன் கதையா?
இந்த படத்தின் டிரெய்லர் வெளியான நேரத்தில், பலரும் ‘இது முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என். சேஷனின் உண்மைக் கதையைப் போல இருக்கிறது என்று நினைத்தார்கள். டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது இந்திய தேர்தல் முறையில் பல சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். பதினான்கு ஆயிரம் வேட்பாளர்களை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்தார். அவரது வாழ்க்கை கதை சினிமா கதையை விடவும் அதிக சுவாரஸ்யமானது.
கேம் சேஞ்சர் கதை
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் ராம் நந்தனாக நடித்துள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பின் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். "மதுரையின் கலெக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு இடையே நடந்த சம்பவங்களை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக திரையில் கொண்டு வந்துள்ளார்" என்று இந்த படத்தின் விம்பரப்படுத்தலின் போது எஸ்.ஜே. சூர்யா கூறியிருந்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.என். சேஷன் ஆரம்பத்தில் மதுரையின் கலெக்டராக இருந்தார். இவரது பணி, இவரது சாதனைகள் அற்புதமானவை. 1990களில் தலைமை தேர்தல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படம் டி.என். சேஷனின் வாழ்க்கை கதையில் இருந்து ஈர்க்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால், படத்தில் பல கற்பனை அம்சங்கள் உள்ளன.
டி.என். சேஷன் யார்?
டி.என். சேஷன் 1932 இல் தமிழ்நாட்டில் (மெட்ராஸ் பிரசிடென்சி) பிறந்தார். 1953 இல் மெட்ராஸ் போலீஸ் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இந்த வேலையில் சேரவில்லை. 1954 இல் யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரின் 1955 ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அணுசக்தி ஆணையத்தின் செயலாளராக, விண்வெளித் துறையின் இணைச் செயலாளராக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் செயலாளராக, கேபினட் செயலாளராக (இந்திய சிவில் சர்வீஸின் உயர் பதவி) பணியாற்றியுள்ளார்.
அரசியல்வாதியுடன் மோதும் போக்கு
தனது பதவிக்காலத்தில் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தார். தனது பணி பாணியால் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 1970 இல் தமிழ்நாட்டின் தொழில், விவசாயத் துறை செயலாளராக இருந்தார். முதலமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்தபோது டெஹ்ரி அணை மற்றும் சர்தார் சரோவர் அணை கட்டும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்தார். கேம் சேஞ்சர் படத்திலும் இதுபோன்ற சம்பவங்களை ஒத்த பல காட்சிகள் உள்ளன. படத்தில் அப்பா கதாபாத்திரம் இரும்பு ஆலை கட்டுமானத்தை எதிர்க்கிறது. ராம் நந்தன் முதலமைச்சருடன் கருத்து வேறுபாடு கொள்கிறார்.
தலைமை தேர்தல் அதிகாரியாக டி.என். சேஷனின் சாதனைகள்
1990-96 காலகட்டத்தில் டி.என். சேஷன் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். தேர்தல் சீர்திருத்தங்களில் முக்கிய பங்கு வகித்தார். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, மக்களை மிரட்டுவது, தேர்தல் நேரத்தில் மது விநியோகம், பிரச்சாரத்திற்கு அரசு நிதி மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவது, வாக்காளர்களின் ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டுவது, பிரச்சாரத்திற்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்துவது, அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுத்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தல் செலவு வரம்பு போன்றவற்றை சேஷன் அறிமுகப்படுத்தினார்.
ராமன் மகசேசே விருது
இவரது தலைமையில் தேர்தல் ஆணையம் 1992 இல் பீகார் மற்றும் பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல்களை தைரியமாக ரத்து செய்தது. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் விவரங்களைச் சரிபார்த்தது. தவறான தகவல்களை அளித்த 14 ஆயிரம் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்தது. தேர்தல் சீர்திருத்தங்களுக்காக டி.என். சேஷனுக்கு 1996 இல் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது. கேம் சேஞ்சர் படத்திலும் ராம் நந்தன் தலைமை தேர்தல் அதிகாரியாக அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சிகளைத் தருகிறார்.
குடியரசு தலைவர் தேர்தலில் தோல்வி
டி.என். சேஷன் 1996 இல் தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், கே.ஆர். நாராயணனிடம் தோல்வியடைந்தார். 1999 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திநகரில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், எல்.கே. அத்வானியிடம் தோல்வியடைந்தார். இதன் பிறகு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தலைமைத்துவம் குறித்து பாடம் நடத்தினார். பின்னர் மசூரிக்குச் சென்றார். சென்னையில் 2019 இல் தனது 86வது வயதில் காலமானார்.
டாபிக்ஸ்