படத்திலிருந்து நீக்கப்பட்ட குஷ்பு.. அதற்கு டைரக்டர் சொன்ன காரணம் என்னத் தெரியுமா?
நடிகை குஷ்பு சில ஆண்டுகளுக்கு முன் இந்தி படத்தில் நடிக்க இருந்த நடிகை குஷ்புவை வேண்டாம் என டைரக்டர் கூறி உள்ளாராம். அதற்கு அவர் சொன்ன காரணத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
தென்னிந்தியாவில் நடிகை குஷ்பு என்ற பெயரைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். குஷ்பு சுந்தர் 1980 களில் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இவர் 90 களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நட்சத்திரமாக புகழ் பெற்றார். இதையடுத்து அவர் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சியை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் பிஸியானார்.
பின், திரைப்படங்களைத் தயாரிப்பது, நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் மிகவும் பிரபலமாகவும் பிஸியாகவும் இருந்து வருகிறார் குஷ்பு. இந்நிலையில் அவர் விக்கி லால்வானியுடனான உரையாடலின் போது, தான் இந்தி படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ராம் தேரி கங்கா மைலி குறித்து குஷ்பு
விக்கி லால்வானியுடன் குஷ்பு பேசியபோது, " இயக்குநர் ராஜ் கபூர் என்னை ராம் தேரி கங்கா மைலி படத்தில் அறிமுகப்படுத்த விரும்பினார். அதற்காக ஒரு போட்டோ ஷூட்டும் நடத்தினோம். அந்த புகைப்படங்களை பார்த்த ராஜ்கபூர், 'இவள் என் கங்காவே தான்' என்றார்.
இதையடுத்து படப்பிடிப்பை விரைவாக முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. எனவே முதலில் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் தான் அங்கு என்னை வைத்து விபச்சார விடுதி காட்சியை படமாக்க நினைத்தனர். அப்போது இந்தப் படத்திற்கான கதைப்படி, நான் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பது போல அமைக்கப்பட்டிருந்தது.
அவளே ஒரு குழந்தை
இந்தக் காட்சியைப் பார்த்த ராஜ் கபூர் இந்த காட்சியை மறுபடியும் பரிசீலனை செய்யலாம் எனக் கூறினார். காரணம் என்ன என்றால் அந்த படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 14 வயது கூட முடியவில்லை. அப்படி இருக்கையில், நான் ஒரு குழந்தைக்கு தாயாக நடிப்பதா என அவர் யோசித்தார்.
அதனால் தான் என்னை வைத்து இந்தக் காட்சியை எடுக்க தயங்கினார். மேலும் அவர், 'அவளே ஒரு குழந்தை, அவள் கையில் ஒரு குழந்தை இருந்தால் அழகாக இருக்காது' என்று கூறிவிட்டார். இந்தக் காரணத்தால் என்னை அந்தப் படத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
மாபெரும் வெற்றி
பின், அந்தப் படத்தில் ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ் கபூர் மற்றும் மந்தாகினி ஆகியோர் நடித்தனர். இந்தக் காரணத்தால் தான் என்னால் படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக் கூறினார்.
ராம் தேரி கங்கா மைலி இறுதியில் ஆகஸ்ட் 1985 இல் வெளியிடப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் கபூர் இறப்பதற்கு முன்பு அவர் இயக்கிய கடைசி படம் இதுவாகும்.
குஷ்பு திரை வாழ்க்கை
குஷ்பு 1985 ஆம் ஆண்டில் மேரி ஜங் என்ற படத்தின் மூலம் முன்னணி நட்சத்திரமாக அறிமுகமானார். பின் கலியுக பாண்டவுலு (1986) என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தனக்கான பட வாய்ப்புகளுக்கு ஏற்ற இடம் தமிழ் சினிமா தான் என அறிந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
இதனால் அவர் அடுத்த 10 ஆண்டுகளில் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். அவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. இதையடுத்து அவர் சீரியலில் நடித்து வந்தார். பின் சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சுந்தர்.சி எடுக்கும் படத்தின் பாடல்களில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற அவர் சினிமாவில் 13 வருட இடைவெளிக்குப் பிறகு, 2021 இல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.