Irfan's Gender Reveals Video: ’யூடியூபர் இர்பானின் சர்ச்சை வீடியோ!’ சுகாதாரத்துறை சார்பில் சைபர் கிரைமில் புகார்!
”Irfan's Gender Reveals Video: வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைமில் சுகாதாரத்துறை புகார் அளித்துள்ளது”
தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் இர்பான் மீது சைபர் கிரைமில் சுகாதாரத்துறை புகார் அளித்து உள்ளது.
யார் இந்த இர்பான்?
பிரபல யூடியூபரான இர்பானுக்கு பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து, அதனை வீடியோவாக வெளியிட்டு வருவதன் மூலம் பிரபலம் ஆனார்.
கடந்த ஆண்டு நடந்த திருமணம்
சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வரும் இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான சர்ப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். யூடியூபர் இர்பானுக்கும் ஆலியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இர்பானின் மனைவி கர்ப்பம்
இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் என்ன என்பது குறித்து யூடியூப் சமூகவலைத்தளத்தில் யூடியுபர் இர்பான் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக துபாய்க்கு சென்று தனது மனைவியின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து இர்பான் அறிந்து கொண்டுள்ளார்.
’இந்த வீடியோ எடுப்பது இந்தியாவுல இல்ல, இது வந்து துபாய், இந்தியாவில் இது அனுமதி கிடையாது. வெளிநாட்டில் இது சாதாரணம், நமது ஊரில் கூட இது சாதாரணமாக இருந்தது ஆனால் அதற்கு பிறகு இது நிறுத்தப்பட்டு விட்டது. 1993இல் நான் பிறக்கும்போது கூட நான் என்ன பாலியனம் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். ஆனால் அதற்கு பிறகு இதை அரசு தடை செய்தது’ என்று இர்பான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளார்.
சுகாதாரத்துறை நடவடிக்கை
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வலைஒளியாளர் (You tuber) திரு. இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும் அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து 19.05.2024 அன்று தனது Youtube Channal-ன் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.
மேலும், இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் திரு.இர்பான் அவர்களுக்கு 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திரு.இர்பான் அவர்களால் வலையொளி செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் , ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
டாபிக்ஸ்