HBD S.P.Jananathan : சாமானிய மக்கள் வழியாக திரையில் சர்வதேச அரசியலை பேசியவர்! இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த தினம்!
HBD Tamil Movie Director SPJ : சாமானிய மக்கள் வழியாக திரையில் சர்வதேச அரசியலை பேசியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த நாளில் அவர் குறித்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமா பெரும்பாலும் கமர்ஷியல் பாதையில் சென்றுதான் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும். மவுசு குறையாத மசாலா படங்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருப்பது தமிழ் சினிமாவின் சிறப்புதான். அதில் அரிதினும், அரிதாக சில இயக்குனர் தமிழ் சினிமாவை வேறு பரிமாணங்களில் காட்டுவார். அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய ஒரு முக்கியமான நபர். தமிழ் சினிமாவின் பேரிழப்பு என்றாலும் மிகையாகாது. ஒரு தனித்தன்மையான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி ஜனநாதன்.
அடிப்படையில் பொதுவுடைமை தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959ம் ஆண்டு மே 7ம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயக்குநராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் 'இயற்கை'. அழகான கடற்கரையோர காதல் கதை, கடலும், காதலும் நம்மை படத்தோடு வாழ வைத்துவிடும். முக்கோண காதலிலே வித்யாசமான காதலை கூறி நம்மை சோகத்தில் ஆழ்த்திவிடும் கதை. நடிகர் அருண் விஜய் நடிப்பில் கலக்கியிருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த குட்டி ராதிகா மற்றும் ஷ்யாமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
