தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbdnambiar Villain In Screen World Hero In Real Life Today Is Nambiars Birthday

HBDNambiar: 'திரையுலகில் வில்லன்.. நிஜவாழ்வில் ஹீரோ' நம்பியார் பிறந்த தினம் இன்று

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 07, 2024 05:00 AM IST

படத்தை பார்க்கும் பலருக்கும் கிலி ஏற்படுத்தியவர் நம்பியார். படம் என்பதையும் மறந்து நம்பியாருக்கு சாபமிட்ட காலம் அது. அத்தனை வசைபாடுகளும் ஆகச்சிறந்த வில்லனாக தமிழ் திரைப்பட உலகம் நீண்ட காலத்திற்கு கொண்டாடியது அந்த காலத்தின் சரித்திரம். ஆனால் நிஜவாழ்வில் அமைதியான ஆன்மீக வாதி.

நடிகர்  எம். என். நம்பியார் பிறந்தநாள்
நடிகர் எம். என். நம்பியார் பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

வருடம் தவறாமல் சபரிமலை சென்று வருபவர். அவர் செல்வது மட்டும் அல்லாமல் பலருக்கும் குருசாமி ஆக இருந்து சபரிமலை பயணத்தை வழிநடத்தியவர். இன்று அவரின் 106 வது பிறந்த நாள். 

பிறப்பு

1919 மார்ச் 7ல் கேலு நம்பியார் மற்றும் மஞ்சேரி கல்யாணி தம்பதிகளின் மகனாக கேரளாவில் உள்ள கண்ணூரின் அருகே உள்ள கண்டக்கையில் பிறந்தவர் தான் எம்.என். நம்பியார் என்று அழைக்கப்பட்ட மஞ்சேரி நாராயணன் நம்பியார். குழந்தை பருவத்தில் தந்தை இறந்து விட ஊட்டியில் உள்ள தனது மூத்த சகேதரி வீட்டில் மைத்துனர் ஆதரவுடன் படித்து வந்தார். நடிப்பில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் நவாப் ராஜமாணிக்கம் நாடக குழு மதுரை பாலநாத வினோத கான சபாவில் பணியாற்றி வரும் காலங்களில் தான் பக்தராமதாஸ் என்ற படம்தான் முதல் பாடமாக 1935 ஆம் ஆண்டு நம்பியாரருக்கு அமைந்தது.

பத்து வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த புதிதில் சிறு சிறு வேடங்களில் நடித்து கொண்டே ஆர்மோனியம் வாசித்தும் கலைப்பயணத்தை துவங்கியவர். நடித்த முதல் படமான பக்தராமதாஸ் படமும் கூட நாடக வடிவில் இருந்து சினிமாவாக மாறியது தான். முதல் படத்தில் நகைச்சுவை வேடம்தான் செய்தார். 

1942 ல் நவாப் நாடக குழுவின் சார்பில் கேரளாவில் அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகம் தான் "ஶ்ரீ ஐயப்ப சரித்திரம்". இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் முதன் முறையாக ஐயப்பனை சபரிமலை சென்று தரிசித்தார். இப்படி ஆரம்பித்ததுதான் சபரிமலை பயணம். தொடர்ந்து சக்தி நாடகசபாவிலும் பணிபுரிந்தார். ஃமோசன் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இன்பசேகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். 

ஆனால் அந்த படம் ஒரு விபத்தின் காரணமாக வெளியாகவில்லை. புகழ் பெற்று விளங்கிய ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கம்பெனி ஆர்டிஸ்ட் ஆக வேலைக்கு சேர்ந்தார். 1946ல் வித்யாபதி என்ற படத்தில் நாராயண பாகவதராக நகைச்சுவை வேடத்தில் கலக்கினார். எம்.ஜி.ஆர் படமான ராஜகுமாரியில் நகைச்சுவை கலந்த வேடத்தில் நடித்த பிறகு வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. 1949ல் மாடர்ன் தியேட்டர் நிறுவனம் சார்பில் எல்லிஸ் டங்கன் இயக்கிய கலைஞர் கருணாநிதி வசனத்தில் எம். ஜி.ஆர். நடித்து உருவான மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தில் நம்பியாரின் நடிப்பு அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இதையடுத்து நிறைய படவாய்ப்புகள் அனைத்துமே மிக முக்கியமான கதாபாத்திரங்களை கொண்டு வந்து சேர்த்தது. தமிழ் தெலுங்கு தாண்டி ஜங்கிள் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சிதம்பர சாமியார் என்ற படத்தில் மட்டும் பதினோரு வேடங்களில் நடித்தவர். அந்த காலத்து முன்னனி ஹீரோக்களான எம்.ஜி.ஆருடன் ஒருபக்கம். மறுபக்கம் சிவாஜி கணேசன் படம் என்று அவருடைய லைன்அப் பட வரிசை பிரமிக்க வைத்தது. நாயகனாக சில படங்களில் நடித்துள்ளார். 

ஒருகாலத்தில் நகைச்சுவை நடிகர் ஆக நடித்தவர் காலப்போக்கில் வில்லன் ஆக மாறிப்போனார். வாள் சண்டை, குதிரையேற்றம் நன்கு கற்று அறிந்தவர். குறிப்பாக எம்ஜியார் படங்களில் வாள் சண்டை காட்சிகள் பிரசித்தி பெற்றவை. சர்வாதிகாரி என்ற படத்தில் எம்ஜிஆர் அவர்களுடன் நம்பியார் போட்ட வாள் சண்டை காட்சிகள் வெகுவாக கவர்ந்தது. அந்த படத்துக்கு பின்னர் அநேக எம்ஜியார் படங்களில் நிரந்தர வில்லனாக நம்பியார் மாறிப்போனார். மறுபுறம் சிவாஜி படங்களில் நடிப்பில் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான குணச்சித்திர வேடங்களில் மிரட்டுவார்.

கல்யாணி, கவிதா, வேலைக்காரி, கஞ்சன் போன்ற படங்களில் கதாநாயகன் ஆக நடித்த போதிலும் வரக்கூடிய எல்லா வகையான வேடங்களையும் ஏற்று நடித்தவர். தனது உறவினர் ருக்மணி அம்மாளை திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒருமகள் அவருக்கு பிறந்தனர். நம்பியார் நாடகமன்றம் என்ற பெயரில் நடத்தி வந்தார். 

வாழ்நாள் முழுவதும் சைவ உணவு உண்டவர். பிஸ்கட் கூட முட்டை கலந்து இருக்கும் என்று சாப்பிட மாட்டார். ஒரே நாளில் மூன்று படங்களில் கூட நடித்துள்ளார். தொழில் பக்தி உள்ளவர். 62 முறை சபரிமலை சென்ற இவர் அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன், ரஜினி என்று பல பிரபலங்களை தன்னோடு கன்னிச்சாமியாக அழைத்து சென்று வந்த மகாகுருசாமி. எம்ஜியார் முதல் இறக்கும் வரை பல தலைமுறை நடிகர்கள் உடன் நடித்தவர். அவளுக்கென்று ஓர் இடம், ஓவியம் ,வேலன், அலைகள் போன்ற தொடர்களிலும் நடித்தவர். 2006ல் வெளியான சுதேசி அவரின் கடைசி படமாக அறியப்படுகிறது.நோய்வாய் பட்ட நிலையில் 89 வது வயதில் 2008 நவம்பர் 19அன்று சென்னையில் காலமானார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்