தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd Tmsoundararajan Lent His Voice To Actors And Thespians In The Tamil Film Industry Such As Mgr Sivaji

HBD T.M.Soundararajan: பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெற்ற விருதுகள் பட்டிலை இதோ பாருங்க!

Manigandan K T HT Tamil
Mar 24, 2024 06:00 AM IST

HBD T.M.Soundararajan: அவரது தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. எஸ்.பி.பியின் குரலை எப்படி ரசிகர்கள் கண்டுபிடித்துவிட முடியுமோ அதே போல், ‘அட இந்தப் பாட்டு டி.எம்.எஸ். பாடிய பாட்டாச்சே’ என்று இன்றும் சரியாக கணித்து விடுவார்கள் ரசிகர்கள்

பாடகர் டி.எம்.எஸ்
பாடகர் டி.எம்.எஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

மொத்தம் 10,138 பாடல்களை 3,162 திரைப்படங்களுக்காகப் பாடியவர். ஆன்மீகம், செமி கிளாசிக்கல், கர்நாடிக், கிளாசிக்கல், லைட் மியூசிக் என பாடல்களைப் பாடியிருக்கிறார் இந்த கான குரலோன்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக ஜொலித்துவந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்டோரின் படங்களில் அதிகம் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

அந்தந்த நடிகர்களின் குரலுக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் படைத்தவர். நடிகர்களுக்கு பாடுவது போன்றே உதட்டை அசைப்பதால் டி.எம்.எஸ்-தான் பாடியிருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக இருக்கும்.

சிறந்த தமிழ் உச்சரிப்பு

அவரது தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. எஸ்.பி.பியின் குரலை எப்படி ரசிகர்கள் கண்டுபிடித்துவிட முடியுமோ அதே போல், ‘அட இந்தப் பாட்டு டி.எம்.எஸ். பாடிய பாட்டாச்சே’ என்று இன்றும் சரியாக கணித்து விடுவார்கள் ரசிகர்கள்.

சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல், சுமார் 2,500 பக்திப் பாடல்களையும் டி.எம்.எஸ். பாடியிருக்கிறார். 1955 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை புகழின் உச்சத்தில் இருந்தார் டி.எம்.எஸ்.

முதல் மற்றும் கடைசி பாடல்

1946ம் ஆண்டு 24 வயதில் தனது முதல் பாடலைப் பாடினார். கடைசி பாடலை 88 வயதாக இருக்கும்போது பாடினார். திரையில் இவர் பாடிய முதல் பாடல் எம்.ஜி.ஆருக்காக ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தான் என்று கூறப்படுகிறது.

கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடலை இளம் பாடகர்களுடன் இணைந்து பாடினார்.

கடந்த 2013ம் ஆண்டு மே 25ம் தேதி அவர் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் உயிரிழந்தபோது அவருக்கு வயது 90.

சென்னையில் மந்தைவெளி பகுதியில் இறுதி வரை வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு அவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் சென்னையில் வசித்துவந்த மந்தைவெளி மேற்கு வட்டச்சாலை டி.எம்.செளந்தரராஜன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

விருதுகள்

கலா ரத்னம், கான ரத்னம், அருள் இசை சித்தர், நவரச பவ நளின கான வர்ஷினி, ஞானாமிர்த வர்ஷினி, சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை மேகம், கானக் குரலோன் என பல பட்டங்கள் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.

எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்நாள் சாதனையாளர் விருது, முதல்வர் ஜெயலலிதா அங்கீகார விருது, எம்ஜிஆர் கோல்டு மெடல், பெல்ஜியத்தின் கவுரவ டாக்டர் பட்டம், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை அங்கீகார விருது, தமிழக முதல்வர் மு. கருணாநிதி விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு டி.எம்.எஸ்.-ஐ கவுரப்படுத்தியுள்ளது. மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை கடந்த 2003ம் ஆண்டு இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.

எப்போதும் நெற்றியில் பட்டை, அதன் மீது வட்டமாக குங்குமம் அணிந்து தெய்வீகத் தன்மையுடன் இருக்கும் டி.எம்.எஸ் முகத்தையும் அவரது காந்தக் குரலையும் தமிழ் நெஞ்சம் என்றும் மறக்காது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்