HBD Sirkazhi Govindarajan: 'குரலுக்கு குரல் கொடுத்த மாயக்குரலான்' சீர்காழி கோவிந்தராஜன்!-hbd sirkazhi govindarajan today is sirkazhi govindarajans birthday - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Sirkazhi Govindarajan: 'குரலுக்கு குரல் கொடுத்த மாயக்குரலான்' சீர்காழி கோவிந்தராஜன்!

HBD Sirkazhi Govindarajan: 'குரலுக்கு குரல் கொடுத்த மாயக்குரலான்' சீர்காழி கோவிந்தராஜன்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 19, 2024 05:30 AM IST

பக்தி, வீரம், கம்பீரம், குழையும் காதல், தத்துவம், துயரம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் என்று எல்லா வகையான உணர்வுகளையும் நமக்குள் தனது குரலால் கடத்தி தலைமுறை கடந்தும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அற்புத பாடகர் சீர்காழி கோவிந்த ராஜன்.

 சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த நாள்
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த நாள்

பக்தி, வீரம், கம்பீரம், குழையும் காதல், தத்துவம், துயரம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் என்று எல்லா வகையான உணர்வுகளையும் நமக்குள் தனது குரலால் கடத்தி தலைமுறை கடந்தும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அற்புத பாடகர் சீர்காழி கோவிந்த ராஜன்.

அவர்கள் 1933 ஜனவரி 19 இன்று பிறந்த நாளில் அவரின் வாழ்க்கை பக்கங்களை புரட்டி நினைவு கூர்வோம்.

இளமை பருவம்

தமிழ் நாடு சீர்காழி யில் சிவ.சிதம்பரம் மற்றும் அவையாம்பாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். சீர்காழி வாணி விலாஸ் பாடசாலையில் பயின்றவர். தனது எட்டாவது வயதில் திரிபுரசுந்தரி கோயிலில் முதலாவது மேடையில் பாடினார். சிறு வயதிலேயே தியாகராஜ பாகவதர் பாடல்கள், கிட்டப்பா பாடல்கள், பக்தி கீர்த்தனை பாடல்களை ஆர்வத்தோடு பாடி வந்தார். நாடக சபையில் சேர்ந்த இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவரது தந்தை பழனியில் உள்ள தாய்மாமா பி.எல். செட்டியாரிடம் அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து துணை நடிகராக நடிக்கும் போது இசையமைப்பாளர் ராமநாதன் தொடர்பு ஏற்பட்டது. அவரின் ஆலோசனை படி இசை ஆர்வம் மிகுதியால் சென்னை இசைக்கல்லூரியில் பயின்றார். 1949 ல் இசை மணி பட்டம் பெற்றவர். சுவாமிநாத பிள்ளையிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். இவரை தனது குருவாக ஏற்று கொண்டார். இவரது ஆலோசனை படி இசையில் மேற்கொண்டு படித்து சங்கீதவித்வான் பட்டமும் பெற்றார். 

இவர் நடிப்பின் மீதும் ஆர்வம் இருந்ததால் சிறுவயதில் தேவி நாடகசபா, பாய்ஸ் நாடக கம்பெனிகளில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. இவருக்கு இருபதாம் வயதில் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சாஸ்திர சங்கீதம் படித்து விட்டு சினிமாவில் பாட தயங்கினார். தனது குரு சுவாமி நாதபிள்ளையிடம் தனது தயக்கத்தையும் குழப்பத்தையும் தெரிவித்தார். அவரோ சினிமாவில் பாடுவதால் நிறைய பேருக்கு நல்ல கருத்துக்களை பகிர வாய்ப்பு உள்ளதால் பாடச்சொல்லி உற்சாகப்படுத்தினார்.

இவ்வாறு தான் திரைத்துறையில் 1953 ல் ஜெமினி ஸ்டுடியோவுக்காக ஔவையார் படத்தில் ஆத்திச்சூடியும், சிரிப்புத்தான் வருகுதய்யா என்ற பாடலை பொன்வயல் படத்துக்காகவும் பாடினார். இதற்கு அடுத்த படியாக ரம்பையின் காதல் என்ற படத்தில் இவர் பாடிய "நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற பாடல் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. 

அடுத்து 1957ல் ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளியான சக்ரவர்த்தி திருமகள் என்ற படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாடல்கள் பாடிய போது திரைப்பட உலகின் மொத்த கவணத்தையும் தன் வசம் ஈர்த்தார். இந்த படத்தில் 13 பாடல்கள் இருந்தும் டி.எம்.எஸ் அவர்கள் ஒரு பாடலை கூட பாடாதது பேசுபொருளாக இருந்தது. எம்.ஜி. ஆர். தயாரித்த நாடோடி மன்னன் படம் உட்பட எம்.ஜி.ஆருக்காக பாடிய காதல், தத்துவம், கொள்கை என்று பல பாடல்களை பாடியுள்ளார். சுலோசனா அவர்களை மணந்தார். இவரது மகன் சிவ. சிதம்பரமும் பாடகராக உள்ளார்.

தமிழ் இசையின் ஜாம்பவான்களாக 1960-75 காலத்தில் டி.எம்.எஸ். சீர்காழியார் இனைந்து பாடிய பாடல்களும், போட்டி பாடல்களும் பிரசித்தம். இவர் எவரோடு இனைந்து பாடும் போதும் சீர்காழியார் குரல் தனித்துவமாக ஓங்கி ஒலிக்கும்.

மக்கள் திலகத்துக்கு பாடியது போலவே நடிகர் திலகத்துக்கு பாடிய பாடல்கள் ஏராளம். 1964 ல் வெளிவந்த கர்ணன் படத்தில் வரும் மொத்த கதையையும் சொல்லும் விதமாக அமைந்த கண்ணதாசன் வரிகள்." உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்ற பாடலை கம்பீரமாகவும் உருக்கமாகவும் நம்மை குரலில் மயக்கியிருப்பார் சீர்காழியார்.

"எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான்" "ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே" "ஆடி அடங்கும் வாழ்க்கையடா"

" பணம் பந்தியிலே" என்று பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தில் வரும் டைட்டில் சாங்"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்" பாடல் எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாதை அமைத்து கொடுத்தது. ஏ.பி. நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை படத்தில் நடித்தார். இவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதல் படத்தோடு மூடியும் விட்டார்.

விநாயகர் , முருகன் பக்தி பாடல்களை அதிக அளவில் பாடி உள்ளார். பல விருதுகளை பெற்ற இவருக்கு 1983 ல் பத்மஶ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

கடல் அலையோசை போல் உச்சத்தில் பாடும் இவரின் குரல் தென்றல் காற்று போல நம்மை வருடியபடி செல்வதும் ஆச்சரியம்.  இது தனது குரலால்  பல தலைமுறைகள் கடந்தும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழியாரால் மட்டுமே சாத்தியம். உடலால் உலகை விட்டு மறைந்தாலும் தனது குரலால் இன்னும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டேயிருப்பார். இனிமையான குரலாய் எப்போதும் எங்களோடு பயணிப்பார் எங்கள் சீர்காழியார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.