HBD Shruti Haasan: உலக நாயகனின் செல்ல மகள் ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Shruti Haasan: உலக நாயகனின் செல்ல மகள் ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் இன்று!

HBD Shruti Haasan: உலக நாயகனின் செல்ல மகள் ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 28, 2024 07:12 AM IST

கமல்ஹாசன் அவர்களின் மகள் சுருதிஹாசன் அவர்கள் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பி பார்க்கலாம்.

ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள்
ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் (shrutzhaasanz / Instagram)

இன்றும் திரை உலகில் பல புதுமைகளை புகுத்தி வரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன கலைஞர், அரசியல்வாதி என்று பன்முகத்தன்மை கொண்ட நம்மவர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா தம்பதிக்கு மூத்த மகளாக 1986 ஜனவரி 28 ல் சென்னையில் பிறந்த ஸ்ருதி ஹாசன். இவரது சகோதரி அக்சராஹாசன் ஆவார். ஆரம்ப கால கல்வியை சென்னை அபாகஸ் மாண்டிசோரி பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் பள்ளியில் படித்தார். மனநலம் குறித்த மேற்படிப்பை மும்பையில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரியில் முடித்தார்.

தனக்கு ஆர்வமான இசை சம்பந்தப்பட்ட படிப்பை கலிபோர்னியா இசை கல்லூரியில் பயின்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்ற பழமொழி தமிழில் உண்டு. அதன் படி இவரது கவனம் தனது தாய், தந்தை சாதித்த திரைப்பட துறையை சுற்றியே வந்தது. எந்த இடத்துக்கு சென்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனது உடைகள், மேக்கப் என்று தன்னை மிகவும் ஸ்டைலிஷ் ஆக வைத்து கொள்வார். அவருடைய உயரத்துக்கும் மெலிவான உடல் வாகுக்கும் மிக அழகாக பொருந்திப் போகும் ஆடைகளை தேர்வு செய்வார். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுபவர். மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசுபவர். எந்த விமர்சனங்களையும் இன்முகத்துடன் ஏற்று கொள்பவர்.

இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000 ல் வெளிவந்த "ஹேராம்" என்ற திரைப்படத்தில் வல்லபபாய் படேல் மகள் வேடத்தில் சிறிய கதாபாத்திரத்தில் திரையில் தோன்றினார். இவரின் அடுத்த படமாக இந்தி படத்தில் சோகன் சா இயக்கத்தில் 2008 ல் வெளிவந்த "லக்" என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனாலும் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை. 2011ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற தமிழ் திரைப்படம் மூலமாக சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆனார். இந்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது.

இவர் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விடவும் இசை மீதான ஆர்வமே இவருக்கு அதிகம். அதனால் தான் அவர் அமெரிக்க நாட்டில் இசையை தேர்வு செய்து படித்தார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்.

ஸ்ருதி ஹாசன் படிக்கும் காலம் முதல் இன்று வரை எந்தவித படிவங்களிலும் மதம், சாதிய விவரங்களை நிரப்ப மாட்டார். கேட்டால் இந்தியன் என்று ஒரே வார்த்தையில் முடித்து கொள்வார். இவர் இசை மீது உள்ள திறனை இளையராஜா கண்டறிந்து இவரின் ஆறு வயதிலேயே தேவர் மகன் படத்தில் வரும் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலில் பாட வைத்தார். அந்த படத்திலும் கமல்ஹாசன் இருப்பார். 

தமிழ், தெலுங்கு, இந்தி என்று முப்பது பாடல்களுக்கு மேலும் பாடி உள்ளார். 2009 ல் இவர் பாடிய "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் குறிப்பிடத்தக்கது. இவர் குரல் மற்றவர்களிடம் இருந்து தனியாக தெரியும். இவர் தனது தந்தை நடித்த உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் இசை அமைப்பாளரானார். இதுதான் அவர் இசை அமைத்த முதல் படமும் கூட. இவரது கலைத்துறை வாழ்க்கையில் முதன் முதலில் நடித்ததும் பாடியதும் இசை அமைத்ததும் அவருடைய தந்தை கமல்ஹாசன் படங்களில் தான்.

மும்பையில் படிக்கும் போதும் வெளிநாட்டில் படிக்கும் போது கூட கமல்ஹாசன் மகள் என்று காட்டி கொள்ள மாட்டேன் என்பார். யாரும் கேட்டால் தனது தந்தையின் பெயர் ராமச்சந்திரன் என்றும் டாக்டர் ஆக இருக்கிறார் என்று சொல்வதும் அவர் பழக்கம். எந்த இடத்திலும் தனது திறமையை மட்டுமே நம்புபவர். இன்றும் தனியாக வாழும் போது கூட பொருளாதார ரீதியாக சிரமம் ஏற்படும் போது கூட தந்தை உதவியை எதிர்பார்க்காமல் தானே சமாளிக்க விரும்பும் பெண்ணாக இருப்பார். 

இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார். இரண்டு முறை பிலிம்பேர் விருதுகள், ஆறு முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து உள்ளார்.  இந்நிலையில் இன்று ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தந்தை தொட்ட உயரத்தையும் தாண்டி சாதிக்க வாழ்த்துகள் ஸ்ருதி ஹாசன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.