HBD Jayachandran: 'என்றைக்குமே இந்த ஆனந்தமே ' பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் இன்று!
"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" நமது காதல் நினைவுகளை தனது இனிய குரலால் நம்மை அசை போட வைக்கும் அற்புதமான பாடகர் பி.ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்த நாளில் அவரின் பாடல்களையும், அவர் குறித்த தகவல்களையும் புரட்டி பார்க்கும் பொழுது ஆனந்தம் நமது மனதை இயல்பாக தொற்றி கொள்கிறது.
"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" நமது காதல் நினைவுகளை தனது இனிய குரலால் நம்மை அசை போட வைக்கும் அற்புதமான பாடகர் பி.ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்த நாளில் அவரின் பாடல்களையும், அவர் குறித்த தகவல்களையும் புரட்டி பார்க்கும் பொழுது ஆனந்தம் நமது மனதை இயல்பாக தொற்றி கொள்கிறது. மலையாள தேசத்தில் இருந்து வந்தாலும் தமிழை அழகாக தனது உச்சரிப்பில் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து பாடல் வரிகளுக்கு உயிர் தந்தவர்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் அருகே உள்ள இரவிபுரம் பகுதியில் 1944 மார்ச் 3 அன்று கொச்சி அரசவை குடும்பத்தை சார்ந்தவரும் இசையில் தேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சானியன், சுபத்ரா குஞ்சம்மா ஆகியோர் மகனாக பிறந்தவர் ஜெயச்சந்திரக்குட்டன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள் உண்டு. சிறு வயதிலேயே திருச்சூர் அருகே குடும்பத்தினர் இடம் மாறியதால் ஆரம்ப கால கல்வியை இரிஞ்சாலக்குடா தேசிய பள்ளியிலும் கிறிஸ்து கல்லூரியில் விலங்கியல் பயின்று பட்டமும் வாங்கினார்.
அவரது தந்தையிடமும் ராமநாதன் என்ற இசை ஆசிரியரிடம் இசைப்பயிற்சி பெற்றார். அவரது மூத்த சகோதரர் சுதாகரன் இவருடைய இசைப்பயணத்துக்கு பாதை போட்டு கொடுத்தவர். அம்மாவின் ஆலோசனை படி ஆறு வயதிலேயே மிருதங்க கலைஞர் ஆக புகழ் பெற்றார். பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றவர். எட்டாம் வயது முதல் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாட ஆரம்பித்தார். சென்னையில் பணியில் இருந்த போது மேடையில் பாட ஆரம்பித்தார்.
1967 ல் மலையாள படங்களில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாள படங்களில் பாடியவர் தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தனது முதல் பாடலை பாடினார். 1973 ல் அலைகள் என்ற படத்தில் "பொன்னென்ன பூவென்ன" என்ற பாடல் முதல் தமிழ் பாடலாக அமைந்தது. மலையாள வாடை என்பது இல்லாமல் தமிழ் உச்சரிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியும் கமலும் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்தில் வரும் "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்" என்ற பாடல் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம்பெற வைத்தது.
இளையராஜா, சங்கர் கணேஷ், ராஜேந்தர், தேவா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர் என்று பலருடைய இசையில் இவரின் வசீகர குரலால் தொடர்ந்து ஹிட் பாடல்கள் தந்தார். எஸ்.பி.பி. மற்றும் ஜேசுதாஸ் கொடி கட்டி பிறந்த காலத்தில் தனது தனித்துவமான காந்தகுரலின் மூலமாக பாடலின் பொருளையும் தனது குரல் பாவனைகள் மூலமாகவும் ரசிகர்களை சொக்க வைத்தவர். மலையாளம், தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம்,இந்தி என்று பதினைந்தாயிரம் பாடல்களுக்கும் மேலே பாடி உள்ளார்.
அவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும் தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றுள்ளார்.1997 ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965 இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து கெமிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர்.
1965 இல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் நிதி திரட்டும் மேடை இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரன் குரலில் உள்ள வளத்தை கண்டறிந்து அவர்களுடைய குஞ்சாலி மரக்கார் என்ற மலையாளப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படி தான் மேடையில் பாடியவர் மற்ற நடிகர்களுக்காக பின்னனிப்பாடகராக திரைப்பட உலகில் கால் பதித்தார்.
ஆனாலும் ஜெயச்சந்திரன் பாடிய களித்தோழன் படம் முதலில் வெளியாகி விட்டது. 1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் உருவான பாடிய நீலகிரியுடே என்ற பாடல் முதல் கேரள அரசின் விருதை வாங்கி தந்தது. 1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் "சிவசங்கர சர்வ சரண்ய" என்ற பாடல் தேசியத் திரைப்பட விருதை பெற்றது. ஏ. ஆர். ரகுமான் இசையில் கிழக்குச்சீமையிலே படத்தில் அவரது பாடல் "கத்தாழம் காட்டுவழி" தமிழக அரசின் விருதைப் பெற்று தந்தது.
1973 ல் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இன்று எண்பது வயது தாண்டி 81 வயதில் பயணிக்கிறார். இசைத்துறையில் 75 ஆண்டு கால நீண்ட கால அனுபவம், திரையிசை பாடகராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பயணம். இவரை பாராட்டி நிகழ்ச்சிகள் நடத்த இன்று வரை எவர் அணுகினாலும் ஒத்துக்கொள்வது கிடையாது. அதேபோல் முன்பு வந்து புகழ் பெற்ற பாடல்களை இன்று "ரீமிக்ஸ்" என்ற பெயரில் வரும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர். அதே போல் ஆங்கில மொழி கலந்து பாடவும் மறுத்து விடுபவர். 80 வயதை கடந்தாலும் இவருடைய குரல் இன்னும் மார்க்கண்டேயர் மாதிரி இளமையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இவர் குறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.
டாபிக்ஸ்