HBD Haricharan: உனக்கென இருப்பேன் என தொடங்கிய பயணம்.. ‘டிரெண்ட் மாறினாலும் பழமைக்கு மரியாதை தரும் ஹரி சரண் பிறந்த நாள்’
Haricharan Birthday: திரைப்பட உலகில் முதலில் பின்னணி பாடியது பாலாஜி சக்திவேல் இயக்கிய "காதல்" திரைப்படத்துக்கு ஜோஷ்வா ஶ்ரீதர் இசையில் அமைந்தது. அமைந்த முதல் படத்திலேயே மூன்று பாடல்கள் முத்தாய்ப்பாக அமைந்த அதிர்ஷ்டகாரர். இந்த நல்ல வாய்ப்பு அவருக்கு பதினேழு வயதிலேயே கிடைத்தது.
Singer Haricharan Birthday: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ஹரிச்சரண் அவர்களின் 38வது பிறந்த நாளான இன்று அவரின் இசைப்பயணத்தை சற்று திருப்பி பார்ப்போம்.
பிறப்பு
1987 மார்ச் 20 அன்று சென்னையில் இசை குடும்பத்தைச் சேர்ந்த சேஷாத்திரி மற்றும் லதா தம்பதியரின் மகனாக பிறந்தவர். இவருடைய தாத்தா ஆலாபனா என்ற பெயரில் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஏழு வயதிலேயே தனது பாட்டி ஶ்ரீமதியிடம் கர்நாடக இசை பயின்றவர். சேதுமகாதேவன், நாராயணன் சாமி, பிரபாவதி ஆகியோரிடம் கற்று இசையில் புலமை பெற்றார்.
இவர் திரைப்பட உலகில் முதலில் பின்னணி பாடியது பாலாஜி சக்திவேல் இயக்கிய "காதல்" திரைப்படத்துக்கு ஜோஷ்வா ஶ்ரீதர் இசையில் அமைந்தது. அமைந்த முதல் படத்திலேயே மூன்று பாடல்கள் முத்தாய்ப்பாக அமைந்த அதிர்ஷ்டகாரர். இந்த நல்ல வாய்ப்பு அவருக்கு பதினேழு வயதிலேயே கிடைத்தது.
ரசிகர்களை அவரது குரலால் கட்டிப் போட்டு வைத்திருப்பவர். அவரது தந்தையின் ஆசையை இதன் மூலம் நிறைவேற்றியவர். கர்நாடக இசை மீது அதிகம் ஈர்ப்பு உள்ளவர். திரைப்பட பின்னணியில் தனித்து தெரிபவர். தெளிவாக தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பவர். பல இசை நுணுக்கங்களை கையாள்பவர். ரசிகர்கள் ரசனைக்கு மரியாதை தருபவர். பாடுவதில் அவருக்கென்று தனி ஸ்டைலிஷ் பின் பற்றுபவர். தனது குரலால் நம்மை சொக்க வைப்பவர்.
எத்தனை டிரெண்ட் மாறினாலும் பழமைக்கு மரியாதை தருபவர். "செந்தமிழ் தேன் மொழியாள்" என்ற பாடலை இன்றும் விரும்பி பாடுபவர். நா.முத்துக்குமார் எழுதிய "உனக்கென இருப்பேன்" என்று பாடிய பாடலில் உள்ள உருக்கம் யாரும் தர முடியாது. கும்கி பாடலான "அய்ய்யய்ய்யோ ஆனந்தமே" கேட்கும் போது நமக்குள்ளேயே காதல் உணர்வுகள் வந்து விடும். வெஸ்டர்ன், கிளாசிக்கல், கஜல் என்று எல்லா இசையிலும் பயணம் செய்பவர்.
எதையும் வித்தியாசமாக முயற்சி செய்பவர். சூழல் புரிந்து பாடுபவர். நிறைய ஏற்ற இறக்கங்களோடு பாடுபவர். கார்த்தியின் படத்தில் நிறைய பாடி இருக்கிறார். கார்த்திக்கு தனது குரல் பொருந்துவதாக கருதுகிறார். எந்த மொழியில் பாடினாலும் மொழியின் பொருள் உணர்ந்து பாடுபவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் நிறைய பாடி வருகிறார். பின்னணி பாடகராக மட்டும் அல்லாமல் நிறைய மேடைக் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். நிறைய பாடல்கள் ரகுமான் இசையில் பாடி இருப்பது கூடுதல் சிறப்பு.
யுவன் சங்கர் ராஜா, ரகுமான், பரத்வாஜ் , இமான், ஹாரிஸ் ஜெயராஜ், பிரேம்ஜி அமரன், தமன், மணி சர்மா, ஜி.வி.பிரகாஷ் என்று பலருடைய இசையில் இவருடைய பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடித்தவை. ரகுமான் இசையில் கோரஸ் குரல் கொடுத்து கொண்டு இருந்தவர் அவர் இசையில் முதல் பாடலை பாடி முடித்த போது "இத்தனை நாள் எங்கடா இருந்த" என்று ரகுமான் கேட்டதை இன்னும் சிலாகித்து பேசுகிறார்.
ரகுமான் அவர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவர் பவித்ரா என்ற பெண்ணை ஐந்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்தார். அவரும் மீடியா துறை சார்ந்தவர். 2015 ல் சிறந்த பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் ஏசியாநெட் விருது மலையாள மொழியில் பெங்களூர் டேஸ் படத்தில் பாடியதற்கு கிடைத்தது. 2016ல் பாகுபலி படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பாடிய பாடலுக்கு ஐபா உத்ஸவம் விருது பெற்றார். 2017 ல் தெலுங்கில் கிருஷ்ணகடி வீர பிரேமகதா பாடலுக்கு உத்ஸவம் விருது பெற்றார். திரைப்படம் தவிர்த்தும் தனி பாடல்கள் பாடியுள்ளார்.
"உனக்கென இருப்பேன்.. உயிரையும் கொடுப்பேன்.. உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்".. இந்த பாடலில் பிரிவின் வலிக்காக இவர் தந்த உருக்கம் நமது மனதையும் பிசையும் மர்மம் தான் இவர் குரலின் வசீகரம். அதுவும் இதுதான் அவரின் முதல்பாடல். தேசிய விருதுக்கு பரிந்துரை செய்த பாடலும் கூட..
" கண்ணோரம் காதல் வந்தால் தித்திக்கும்".. யுவன் இசையில் இந்த குரல் இளசுகள் மனதை கொள்ளை அடிக்கும்.
"துளி துளி துளி மழையாய் வந்தவளே.. சுட சுட மறைந்து போனாயே.. " பாடலில் வரும் துள்ளல் ஆகட்டும்..
'யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்..." பாடலில் குரலின் வசீகரம் பளிச்..
"பூக்களே சற்று ஓய்வு எடுங்கள்... அவள் வந்து விட்டாள்.." என்று கொஞ்சும் குரலாகட்டும்..
"போன உசுரு வந்துருச்சு.. உன்னை வாரி அணைக்க சொல்லிருச்சு.." வரிகளில் குழைவதாகட்டும்..
"அய்ய்யயய்யோ ஆனந்தமே.. நெஞ்சுக்குள்ள ஆரம்பமே.." குரலில் உற்சாகம் பொங்குவதாகட்டும்.. இதுதான் பாடகரின் வெற்றி. அந்த குரல் தான் காட்சிகளை உயர்த்தி பிடித்து உயிர் கொடுக்கும். அதை வெற்றிகரமாக இன்று வரை செய்து வரும் அவருக்கு காலம் இன்னும் நிறைய வாய்ப்புகளையும் தரும். வித விதமாக அவர் குரலில் இன்னும் நிறைய பாடல்களை பாட இந்த பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
டாபிக்ஸ்