ஐயையோ.. நெஞ்சம் தொட்ட பாடலை.. ஹீரோ பிளஸ் மியூஸிக் டைரக்டர்.. களம்கண்ட ஹாரிஸ் ஜெயராஜின் வாரிசு
ஐயையோ.. நெஞ்சம் தொட்ட பாடலை.. ஹீரோ பிளஸ் மியூஸிக்.. களம்கண்ட ஹாரிஸ் ஜெயராஜின் வாரிசு குறித்து அறிவோம்.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலஸும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் மத்தியில் வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான 'நெஞ்சம்தொட்ட பாடல.. நின்னுக்கேட்கும் முன்னால.. ஐயையோ' என மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.
தனது முதல் மியூசிக் வீடியோ குறித்து சாமுவேல் நிக்கோலஸ் பேச்சு:
பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், "ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப்பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன்.
'தேவ்' திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது 'ஐயையோ' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மிக்க மகிழ்ச்சி," என்றார்.
தனது நான்காம் வயது முதல் டிரினிட்டி இசைப் பள்ளியின் பாடத்திட்டத்தின்படி சாமுவேல் நிக்கோலஸ் இசையை கற்று வருவது குறிப்பிடத்தக்கது.
'ஐயையோ' பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத சனா மரியம் இயக்கியுள்ளார்.
தொழில்நுட்பக்குழு:
ஐயையோ பாடலின் ஒளிப்பதிவினை ஜாயித் தன்வீர் செய்ய, நடனத்தை ஆலிஷா அஜித் செய்திருக்கிறார்.
உடைகளை ஹர்ஷினி ரவிச்சந்தரும்; கலை இயக்கத்தை பிரதீப் ராஜும் செய்திருக்கின்றனர். மேலும், எடிட்/வி எஃப் எக்ஸ்: கிரியேட்டிவ் கிரவுட், சிவசுந்தர், சாய் முத்துராமன் இணைந்து செய்துள்ளனர்.
அதேபோல், ஒலி வடிவமைப்பினை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும், கலரிஸ்ட் பணியினை மனோஜ் ஹேமச்சந்தரும் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்து வந்த பாதை:
தமிழ் சினிமாவில் மின்னலே படம் மூலம் தனது தனித்துவமான இசையினை வழங்கிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், 90’ஸ் கிட்ஸ்கள் பலரின் ஃபேவரைட் இசையமைப்பாளராக இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எஸ்.எம். ஜெயகுமார் - ரேச்சல் ஜெயகுமார் தம்பதியினருக்கு, ஜனவரி 8, 1975ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
தனது மகன் ஹாரிஸ் ஜெயராஜை பெரிய பாடகராக ஆக்க வேண்டும் எனும் எண்ணம் அவரது தந்தை எஸ்.எம். ஜெயகுமாருக்கு இருந்தது. ஏனெனில் அவர், மலையாள இசையமைப்பாளர் ஷியாமிடம் கிடாரிஸ்ட் ஆகப் பணிபுரிந்தவர். இந்த இசைப் பாரம்பரியத்தின் காரணமாக, ஹாரிஸ் ஜெயராஜ் தனது ஆறு வயது முதல் கர்நாடக சங்கீதம் படிக்க அனுப்பப்பட்டார்.
அதேபோல், 13வயதுக்குள்ளாகவே, லண்டனின் புகழ்பெற்ற டிரினிட்டி இசைக்கல்லூரியில் 8 கட்ட பரீட்சையை மிக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றார், ஹாரிஸ் ஜெயராஜ்.
தனது 12 வயது முதல் ஒரு பிராப்பர் இசையமைப்பாளராக வேண்டும் என்னும் நோக்கில் எம்.எஸ். விஸ்வநாதனின் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணாவின்கீழ் கிடார் கலைஞராக தனது பயிற்சியைத் தொடங்கிய ஹாரிஸ் ஜெயராஜ், பல்வேறு மொழி இசையமைப்பாளர்களிடம் இசை புரோகிராமராகப் பணியாற்றியுள்ளார். 1987ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ராஜ்-கோடி, சிற்பி, ஆதித்யன், ஷியாம், ஓசேப்பச்சன், வித்யாசாகர் எனப் பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ்.
டாபிக்ஸ்