தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dear Official Trailer: நியூஸ் ஆங்கராக ஜி.வி.பிரகாஷ்.. மீண்டும் ஒரு குறட்டை தொனி படம்.. ஸ்கோர் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Dear Official Trailer: நியூஸ் ஆங்கராக ஜி.வி.பிரகாஷ்.. மீண்டும் ஒரு குறட்டை தொனி படம்.. ஸ்கோர் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Marimuthu M HT Tamil
Apr 05, 2024 08:32 PM IST

Dear Official Trailer Released: ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் ஈர்த்துவருகிறது.

டியர் திரைப்படம்
டியர் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபகாலமாக கணக்கு வழக்கில்லாமல் எக்கச்சக்கப் படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர், இசையமைப்பாளராக இருந்து நடிகரான ஜி.வி.பிரகாஷ் குமார். வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகும் வகையில், விடாமல் படத்தில் நடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மார்ச் 22ஆம் தேதி, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான படம், ரிபெல். ஏப்ரல் 4ஆம் தேதியான நேற்று, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி ரிலீஸாகியிருக்கும் படம் கள்வன்.

இந்தப் படத்தின் வசூல் ரிப்போர்ட்டே முழுமையாக கிடைப்பதற்கு முன்பு, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் டியர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

டியர் படத்தை, தமிழில் ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்னும் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். செத்தும் ஆயிரம் பொன், மிகவும் எளிமையான எமோஷனலான காமெடி கலந்த படம் எனலாம்.

அதனை தனது இரண்டாவது படமான ’டியர்’ படத்திலும் கடத்த முயன்றிருக்கிறார், ஆனந்த் ரவிச்சந்திரன். இப்படத்துக்கு ஜகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ருகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தை, வருண் திரிபுறணேனி, அபிஷேக் ரமிசெட்டி, ஜி.பிருதிவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டியர் படத்துக்குண்டான பாடல்களை, விண்ணுலக கவி எழுதியுள்ளார்.

டியர் டிரெய்லரில் இருப்பது என்ன?: திருமணத்திற்குத் தயாராக, சென்னையில் இருக்கும் அப்பர் மிடில் கிளாஸ் ரக குடும்பப்பையன் ஒருவர், இன்ஜினியரிங் முடித்துவிட்டு டிவியில் நியூஸ் வாசிக்கும் நபராக பணி செய்துவருகிறார்.

இவரது அண்ணன் ஒருவர் கொஞ்சம் ஸ்டிரிக்ட் பேர் வழியாக காட்டப்படுகிறார். அண்ணியோ, தனது கணவர் போடும் ரூல்ஸ்களை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விக்கித் தவிக்கும் ஒரு சாதாரண குடும்பப்பெண்ணாக நடித்துள்ளார்.

அம்மாவாக ரோஹிணி நடித்துள்ளார். அடிக்கடி குடும்பப் பிரச்னைகளில் தலையிட்டு, நாட்டாமை செய்வது இவரது வேலைபோல தெரிகிறது.

அதற்கு நேர் எதிராக, திருமணத்திற்குத் தயாராக இருக்கும் பெண்ணாக காட்டப்படுகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்களது குடும்பம் குளு குளுவான மலைப்பிரதேசத்தில் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக இளவரசு, ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருக்கிறார்.

கல்யாணத்திற்குப் பின் முதல் இரவில், மனைவியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்னை இருப்பது, கணவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷூக்குத் தெரியவருகிறது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்னைகள் வருகிறது.

சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தில் கணவர் குறட்டை விட்டால் என்னவாகும் என்னும் அடிப்படையில் சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், டியர் படத்தில் மனைவி குறட்டை விட்டால் வரும் பிரச்னைகளைப் பற்றி படம் அலசுவது போல் தெரிகிறது.

எது எப்படியோ வெகுநாட்களுக்குப் பின், சமீப காலங்களாக தொட்டதெற்கெல்லாம் டைவர்ஸ் கேட்கும் தம்பதிகளுக்கு ஒரு குட் அட்வைஸ் சொல்லி, ஃபீல் குட் படமாக முடியும் எனத் தோன்றுகிறது.

‘’டியர்'' படத்தின் இன்று மாலை வெளியான நிலையில், அதனை யூடியூபில் கண்டுகளித்த பார்வையாளர்கள், பல்வேறு கமென்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், குட் நைட் மற்றும் அடியே ஆகிய இரண்டு படங்கள் கலந்த கலவை டியர் திரைப்படம் எனப்பதிவிட்டுள்ளார்.

படத்துக்குப் பெயர் ’குட் மார்னிங்’ என வைத்திருக்கலாம் எனப் பதிவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு நெட்டிசன், ‘’வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதி போய் இப்போ வெள்ளிக்கிழமை ஜீவி பிரகாஷ் வந்தாச்சு, அவ்வளவு படம் வெச்சு இருக்காரு போல’’ என கலாய்த்துள்ளார்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்