கைமாறிய கோடிகள்..தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல்! கங்குவாவுக்கு நீடிக்கும் சிக்கல்
கடன் தொகையில் குறிப்பட்ட அளவை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கைமாறிய நிலையில், தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளது. இருப்பினும் கங்குவாவுக்கு கோரப்பட்ட தடை விவகாரத்தில் சிக்கல் நீடிக்கிறது.
சூர்யா நடிப்பில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக கங்குவா உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதையடுத்து இந்த படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைமாறிய கோடிகள்
இந்த வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பின் வழக்கறிஞர், "ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகையை, அந்த நிறுவனம் சார்பில் ரூ. 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்திவிட்டது. எனவே அந்த நிறுவனம் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட எந்த ஆட்சேபனையும் இல்லை.
அதேபோல் மீதி தொகையை நாளை செலுத்துவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது" என கூறினார்.
எனவே வாக்குறுதி அளித்தபடி நாளை பணம் செலுத்தினால் கங்குவா ரிலீஸில் எந்த தடையும் இருக்காது என தெரிகிறது.
கடன் தொகை செலுத்தவில்லை
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், "கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பல்வேறு படங்களை தயாரிக்க எங்கள் நிறுவனத்திடம் ரூ. 99 கோடி 22 லட்சம் கடன் வாங்கியது. இதில் ரூ. 55 திரும்ப செலுத்தாத நிலையில், அந்த நிறுவனம் தயாரித்துள்ள கங்குவா படத்தை வெளியட தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனால் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு தடை
ஏற்கனவே, கடந்த 31ஆம் தேதி ரிலையன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டெடி 2, எக்ஸ் மீட் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிக்காக என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 99 கோடி 22 லட்சத்து 49 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.
இதில், ரூ.45 கோடி அவர் திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.55 கோடியை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீத தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
அதேபோல் அவரது நிறுவன தயாரிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், நவம்பர் 7ஆம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது. அதேபோல் தங்கலான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது மீண்டும் கங்குவா ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
க்ரீன் சிக்னல்
தற்போது இந்த வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடனில் சில கோடிகள் கைமாறியிருக்கும் நிலையில், முதல் கட்டமாக தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள தொகையை செலுத்தும் பட்சத்தில் கங்குவா படமும் எந்த பிரச்னையும் இல்லாமல் திரைக்கு வரும்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 38 உலக மொழிகளில் திரைக்கு வருகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அவரது ரசிகர்களை மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.