எல்லா பாட்டுக்கும் ரைட்ஸ் இருக்கு.. இளையராஜா குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த குட் பேட் அக்லி புரொடியூசர்ஸ்..
'குட் பேட் அக்லி'யில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அனுமதி பெற்றுத்தான் பாடல்களைப் பயன்படுத்தினோம் என தயாரிப்பாளர்கள் பதில் தெரிவித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இளையராஜா லீகல் நோட்டீஸ்
அந்த நோட்டீசில் அனுமதியின்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதற்கு 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர்கள் பதிலளித்துள்ளனர். அதில் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளோம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.
விதிகளின் படி அனுமதி
மீடியா ஃபேக்டரியுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இளையராஜா அனுப்பிய சட்ட நோட்டீஸ் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் யலமஞ்சிலி ரவிசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 'குட் பேட் அக்லி'யில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை என ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
''படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் இசை லேபிள்களிடமிருந்து பெற்றுள்ளோம். அந்த உரிமைகள் அனைத்தும் லேபிள்களுக்கே உரியது. எனவே, நாங்கள் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றினோம். அவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெற்றோம். விதிகளின்படிதான் செயல்பட்டோம்'' என ரவிசங்கர் கூறியுள்ளார்.
அந்த மூன்று பாடல்கள்
அஜித் குமார் நாயகனாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்கள் உள்ளன. இந்த மூன்று பாடல்களும் படத்தில் சிறிது நேரம் ஒலிக்கின்றன.
நாட்டுப்புற பாட்டு படத்திலிருந்து ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, விக்ரம் படத்திலிருந்து ‘என் ஜோடி மஞ்சக் குருவி’, சகல கலா வல்லவன் படத்திலிருந்து ‘இளமை இதோ இதோ’ ஆகிய பாடல்களை இந்த 'குட் பேட் அக்லி' படத்தில் படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இதனால், தனது அனுமதியின்றி தனது பாடல்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் எனக் கேள்வி எழுப்பிய இளையராஜா, ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இளையராஜாவும் லீகல் நோட்டீஸும்
தயாரிப்பாளர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான மன்னிப்பும் வேண்டும் என இளையராஜா கூறியுள்ளார். மேலும், அந்தப் படத்திலிருந்து உடனடியாக இந்தப் பாடல்களை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது இசையமைத்த பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதை ஏற்காத இளையராஜா, இதுபோலவே சட்ட நோட்டீஸ் அனுப்பி வருகிறார். கடந்த ஆண்டு மலையாளப் படமான மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்களுக்கும், கூலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வசூல் ரெக்கார்டு
இதற்கு மத்தியில் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஏப்ரல் 10 அன்று வெளியான இந்தப் படம் இதுவரை உலகளவில் ரூ.171.50 கோடி வசூலித்துள்ளது. இதனால் 2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக 'குட் பேட் அக்லி' இருக்கிறது.
