தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Goli Soda: 'ஹீரோ வேண்டாம்.. ஹீரோஸ் போதும்' வாயடைக்க வைத்த வாண்டுகளின் கோலி சோடா!

10 Years of Goli Soda: 'ஹீரோ வேண்டாம்.. ஹீரோஸ் போதும்' வாயடைக்க வைத்த வாண்டுகளின் கோலி சோடா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2024 08:00 AM IST

கோலிசோடா படத்தின் கதையில் வரும் எவரும் பெரிய நடிகர்கள் கிடையாது. பசங்க படத்தில் வந்த நான்கு குட்டி பையன்கள்தான் இந்த கோலிசோடாவில் அரும்புமீசை வளரும் பருவத்தில் அடுத்த பரிணாமம்.

கோலி சோடா
கோலி சோடா

2014 ஜனவரி 24... இதே நாளில் வெளிவந்த படம் கோலிசோடா. கோலி குண்டு விளையாடும் வயதில் இருக்கும் நான்கு விடலை பையன்கள் தங்களது வாழ்க்கையில் போராடி கிடைத்த வெற்றியை தவற விடும் போதும் அதை மீட்டெடுக்க நடக்கும் போதும் கோலிசோடா மாதிரி கொப்பளித்து சிதறி தெறிக்கும் ஆக்சன் ஸ்டோரி.

பரத் அவர்களின் ரப் நோட் புரொடக்ஷன் தயாரித்து லிங்குசாமி அவர்களின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட மாபெரும் வெற்றிப்படம்.

இந்த கதையில் வரும் எவரும் பெரிய நடிகர்கள் கிடையாது. பசங்க படத்தில் வந்த நான்கு குட்டி பையன்கள்தான் இந்த கோலிசோடாவில் அரும்புமீசை வளரும் பருவத்தில் அடுத்த பரிணாமம். இந்த நால்வரும் தாய் தந்தை பெயர் கூட தெரியாத பையன்கள். அவனுகளுக்கே பெயர் ஏதும் இல்லை.. பட்டபெயரோடு மூட்டை தூக்கி பிழைப்பவர்கள். 

மார்க்கெட்டில் பழக்கடை வைத்திருக்கும் பெண்மணி இந்த நால்வருக்கும் அடைக்கலம் தந்து நல்வழிபடுத்தும் காட்மதர் ஆச்சியாக சுஜாதா பாலகிருஷ்ணன் இயல்பாக நடித்திருப்பார். எத்துபல்லும் சோடா பாட்டில் கண்ணாடியுமாக சீதா என்ற பெண் ஏடிஎம் என்ற பெயரில் அமர்க்களம் செய்ய ஆச்சியின் மகளாக சாந்தினி அழகாக துறுதுறு என்று வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களோடு மயிலாக கலை இயக்குனர் விஜய் முருகன், மார்க்கெட் சங்க தலைவர் நாயுடுவாக மதுசூதனன், போதையில் கூட நியாயம் பேசும் இமான் அண்ணாச்சி என்று அளவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு திரைக்கதையை ஜாலியாகவும் பரபரப்பாகவும் கொண்டு சென்றிருந்தார் விஜய் மில்டன். 

ஆச்சிக்கும் பையன் களுக்கும் இடையே உள்ள அன்பையும் கருணையையும் விஸ்வாசத்தையும் ரசிகர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பல காட்சிகள். பட்டபெயரோடு திரியும் பையன்களுக்கு ஒரு அடையாளம் உருவாக்க ஆசைப்பட்டு ஆச்சி பசங்களுடன் பேசுவது அத்தனை இயல்பு. பேச்சு முடிவில் கோயம்பேடு மார்க்கெட்டில் நல்ல உணவுக்கான தேவை இருப்பதால் ஹோட்டல் தொழில் ஆரம்பிக்கும் முடிவுக்கு வருவதும் அதற்கான முயற்சிகளும் யதார்த்தம் ஆன சினிமாத்தனம் இல்லாத காட்சிகளாக படமெடுக்கப்பட்டிருந்தது.

வியாபாரிகள் சங்க தலைவருக்கு சொந்தமான கடையை நாயுடுவிடம் ஆச்சி கேட்டு வாங்கி தர ஆச்சி மெஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கும் தொழில் மூட்டை தூக்கி திரியும் பையன்களுக்கு ஓர் அடையாளம் ஆக மாறுகிறது. நன்றாக ஹோட்டல் தொழில் போய் கொண்டு இருந்த இடத்தில் நாயுடுவின் கையாட்கள் மயில் கூட்டாளிகள் பிரச்சினை செய்து கடையை அடைக்க வைத்து விடுவார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாயுடுவும் பையன் களை தாக்கிவிட அடுத்து வரும் காட்சிகள் பரபரவென்று ஆக்சன் பிளாக் ஆக மாறி படம் முழுக்க செண்டிமெண்ட், காமெடி, அதிரடியாக படபடப்பை எகிற வைக்கும். 

திரைக்கதையை டாப்கியரில் கொண்டு போய் கடையை மீண்டும் திறப்பதில் வந்து நிற்கும் கதை. அத்தனை வேகம் . தேவையான இடங்களில் எல்லாம் பசங்க பாண்டிராஜ் வசனங்கள் படத்தை அடுத்த உயரத்துக்கு நகர்த்தும். அருணகிரி இசையில் "ஆலிவர் பியூட்டி " "ஜனனம் ஜனனம்" ஆகிய பாடல்களுடன் பின்னனி இசை யும்  இதமாக இருக்கும்.

மில்டனின் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது"- என்று ஒரு படத்தை முதல் படைப்பாக எடுத்தவருக்கு அதன் பின் எட்டு வருடங்கள் கழித்து எடுத்த இந்த படமே மில்டனுக்கும் வெற்றி படமாக அமைந்து இயக்குநர் என்ற அடையாளம் தந்தது. 

பரபரப்பை எப்போதும் கொண்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட் தான் கதையின் பெரும் பகுதி களம். செட் எதுவும் போடாமல் மார்க்கெட் உள்ளே படமும் எடுப்பது அத்தனை எளிதல்ல. அந்த மார்க்கெட் இயல்பு மாறாமல் எந்தவித செயற்கையும் இல்லாமல் டிஜிட்டல் கேமராவை அழகாக கையாண்டு காட்சிகளை தத்ரூபமாக எடுத்திருப்பது படத்தில் யதார்த்தத்தை கூட்டும்.

பெரிய நடிகர்கள் எவரும் இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் வெளிவந்த இந்த படம் சிறு நகரங்களில் ஐம்பது நாட்கள் கடந்தும் பெருநகரங்களில் நூறு நாட்கள் கடந்தும் பெரிய வெற்றியை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பதற்கு முக்கிய காரணம் திரைக்கதை மற்றும் இயக்கம் தான். நடித்த பையன்களையும் ஆச்சியையும் திரையரங்குகளுக்கு நன்றி சொல்ல அழைத்து சென்ற இயக்குனர் விஜய் மில்டன் எல்லா இடங்களிலும் சொன்ன வார்த்தை. ரசிகர்கள் நல்ல கதையை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என்பதுதான். 

உண்மையும் அதுதான். இந்த வெற்றியின் தாக்கத்தில் கோலிசோடா இரண்டையும் இயக்கி வெற்றி பெற வைத்தார் இயக்குநர். தற்போது கூட கோலிசோடா 1.5 ஒன்றரை என்ற பெயரில் வெப்சீரியலை இயக்கி வருகிறார். பத்து ஆண்டுகள் கடந்தும் கூட இன்னும் காட்டம் குறையாமல் கோலிசோடா கொப்பளித்து கொண்டு தான் இருக்கிறது.