Salman Khan: சல்மான்கானை கொல்வதே எனது வாழ்நாள் லட்சியம் - பிரபல ரெளடி பேட்டி!
பிரபல ரெளடியான லாரன்ஸ் பிஷ்னோய் தன்னுடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் சல்மான் கானை கொல்வதே என்று பேசியிருக்கிறார்
கடந்த 1998 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சலமான்கான் ‘ஹம் சாத் சாத் ஹேன்’ படப்பிடிப்பின் போது புல்வாய் இன வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
புல்வாய் இன மானாது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக இருப்பதால் சல்மான் கான் வேட்டையாடியது சட்டப்படி குற்றமானது.
இந்த நிலையில் பிஷ்னோய் சமூகத்தினர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனினும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவரும், பாடகர் சித்து மூஸ் பாலா கொலை மற்றும் சல்மான்கானுக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான செய்திகளில் அடிக்கடி பிடித்தவருமான ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய் சல்மானை கொல்வதே என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று பேசியுள்ளார்.
இது குறித்து தனியார் சேனலுக்கு ஜெயிலில் இருந்து பேட்டியளித்த அவர், “ சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும். பிகானேரில் உள்ள எங்களது கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். சல்மான் கானை கொல்வதே என்னுடைய வாழ்நாள் குறிக்கோள். சல்மான்கானின் பாதுகாப்பை நீக்கினால் அவரை நான் கொன்று விடுவேன்.” என்று பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “ சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் இந்த விவகாரம் முடிவுக்கு வரும். சல்மான்கான் திமிர் பிடித்தவர். மூஸ் வாலாவும் அப்படித்தான்.ராவணனை விட சல்மான் கானின் ஈகோ பெரியது.” என்றும் பேசினார்.
தற்போது பதிண்டா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் அவர் கடந்த 4, 5 ஆண்டுகளாக சல்மானை கொல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.