Gnanvelraja vs Ameer: ‘சூர்யாவ செட்டிலேயே அவ்வளவு தப்பா.. பேச்சுவார்த்தை அப்பவே’ - சூர்யா - அமீர் மோதல்!- ஞானவேல்!
தனக்கும் சிவகுமார் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட பிளவிற்கு ஞானவேல் ராஜாதான் காரணம் என்று அமீர் குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு ஞானவேல் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “ 2016 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரைக்கும் இந்த பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பில் இருந்து மட்டும்தான் விளக்கம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் இந்த விவகாரம் பற்றி எந்த ஒரு பேட்டியிலும் நான் பேசியது கிடையாது. அப்படி பேசாமல் இருந்ததற்கான காரணம், சிவ குமார் ஐயா. முன்னதாக அமீர் சில பிரபல youtube சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த பேட்டியில் பல விஷயங்கள் தவறாக புனையப்பட்டிருந்தது. இதனையடுத்து நான் இந்த விவகாரம் குறித்து சிவகுமார் சாரிடம் பேசினேன். அப்போது அவரிடம், அமீர் என்னைப் பற்றி பேசுவது கூட எனக்கு பரவாயில்லை. உங்களை பற்றி, அண்ணன் சூர்யாவை பற்றி,கார்த்தியை பற்றி தவறாக பேசியிருக்கிறார். இதற்கு நான் விளக்கம் கொடுத்தாக வேண்டும் என்று சொன்னேன்.
அதற்கு சிவகுமார் சார் என்ன இருந்தாலும், அவர் உன்னுடைய இயக்குனர். அவரைப்பற்றி நீ பொதுவெளியில் தவறாக பேசக்கூடாது. இன்னொன்று, நீங்கள் பொதுவெளியில் சென்று நீங்கள் ஒருவரை ஒருவர், நான் நல்லவன் என்று சொன்னீர்கள் என்றால், யாருக்கு அதை நிரூபிக்க விரும்புகிறீர்கள்.
நீ உன்னுடைய தொழில் கவனம் நல்லவனாக கவனம் செலுத்து. 15, 20 வருடங்கள் செல்லட்டுமே, உன்னுடன் எப்படியான ஆட்கள் பயணிக்கிறார்கள், நீ திரைத்துறையில் எப்படி ட்ராவல் செய்கிறாய் என்பதை பார்த்து நல்லவன் யார் என்பதை உலகம் முடிவு செய்து கொள்ளும்.
ஆகையால் நீ, நல்லவனுக்கான வாழ்க்கையை வாழ வேண்டுமே தவிர, உன் இயக்குநரை ஒரு இடத்தில் கூட காயப்படுத்தி பேசிவிடக் கூடாது என்று சொன்னார். பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 16 வருடங்கள் ஆன நிலையில், அந்த படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டோம். அப்போது எனக்கு அமீர் சாரிடம் பேச வேண்டும் என்பது போல தோன்றியது.
நான் அவரை போனில் அழைத்துப் பேசினேன். அப்போது அவர் என்னிடம் நான் சந்தோஷமாக இல்லையே என்று சொன்னார். இதனையடுத்து நான் அவரிடம் உங்களை நான் நேரில் வந்து பார்க்கிறேன் என்று சொன்னேன்.
நடிகர் சூர்யாவிற்கு அமீர் நந்தா படத்தில் பழக்கமானார். அப்போது சூர்யாவிற்கு லைன் ஒன்றை அமீர் சொல்ல அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனை படம் செய்யலாம் என்று சூர்யா சொல்லி, அமீரை இயக்குநராக கமிட் செய்தார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நந்தா படத்தில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை குறிப்பிட்டு, வேறொரு பெரிய இயக்குனரை வைத்து படம் செய்யலாம் என்று ஆலோசனை சொல்கிறார்கள்.
ஆனால் சூர்யா அண்ணாவோ இல்லை, அமீருக்கு நான் வாக்கு கொடுத்து இருக்கிறேன். அவர் படத்தில் நடித்துவிட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தார். ஆனால் அமீர் சார் இன்று வரை அதை ஒரு நேர்காணலில் கூட சொன்னது கிடையாது. என்னவோ, இவர்தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது போல பேசிக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் போது சூர்யாவை அமீர் நடத்திய விதம் தவறாக இருந்தது.
அந்த படம் முடியும்பொழுது சூர்யாவிற்கும், அமீருக்குமான பேச்சுவார்த்தை முற்றிலுமாக உடைந்து போனது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சூர்யா வரவில்லை. இதுதான் நடந்தது.
ஆனால் சூர்யா சார் அதைப்பற்றி எங்குமே பேசியது கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்தும் கூட, அமீர் அப்படியே பேசிக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு விஷயங்கள் நடந்த பின்னரும் நானாக அவரை தேடிச் சென்றேன். கிட்டத்தட்ட 8 மணி நேரம் என்னிடம்பேசினார். அதில் ஆறு மணி நேரம் திட்டி தீர்த்தார். நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கடைசியாக ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.
நான், சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஐயா எல்லோரும் கெட்டவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். எங்கள் எல்லோருடனும் இன்றும் வியாபாரம் செய்ய கலைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் உங்களைப் பார்த்தாலே எல்லோரும் தெறித்து ஓடுகிறார்களே ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு பதில் பேசவில்லை அப்படியே அமைதியாகி விட்டார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்