சென்சார் சொன்ன மாற்றங்கள்.. இறுதி வெர்ஷன் ரெடி - சென்சாருக்கு தயாரான கேம் சேஞ்சர்
சென்சார் குழு சொன்ன மாற்றங்களுடன் கேம் சேஞ்சர் படத்தின் இறுதி வெர்ஷன் ரெடியாகியுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி படத்தின் சென்சார் இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக நேரடியாக இயக்கியிருக்கும் தெலுங்கு படம் கேம் சேஞ்சர். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடித்துள்ளார். பாலிவுட் ஹீரோயின் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், நாசர், பிரகாஷ் ராஜ். ஜெயராம் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.
சென்சார் சொன்ன மாற்றங்கள்
அரசியல் ஆக்ஷ்ன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரம் மட்டும் இருக்கும் நிலையில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சென்சார் குழு சார்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கேம் சேஞ்சர் படம் தெலுங்கில் உருவாகியிருக்கிறது என்பதை படத்தின் டைட்டில் தெலுங்கிலும் தோன்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரம்மாநந்தம் பெயரின்போது டைட்டில் கார்டில் பத்மஸ்ரீ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரின் பெயருக்கு பின்னால் குறிப்பிடப்படும் இந்த கெளரவ பெயர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
