G. P. Muthu:‘விஜயகாந்த் போல் உதவுவேன்’ - நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஜி.பி.முத்து பேட்டி
விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் ஜி.பி.முத்து, அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும் டிக் டாக் பிரபலமுமான ஜி.பி.முத்து இன்று சென்னையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
டிக் டாக் என்னும் சமூக வலைதள செயலி மத்திய அரசால் தடை செய்யப்படுவதற்கு முன்பு, பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு நடித்து பிரபலம் ஆனவர்கள் பட்டியலில் முதன்மையானவர், ஜி.பி.முத்து. ஆரம்பத்தில் தச்சராகப் பணிபுரிந்து வந்த ஜி.பி.முத்து தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்க கடிதங்கள் மற்றும் பரிசுப்பொருட்களை அவரது ஊருக்கு அனுப்பத் தொடங்கினர்.
இதனை தனது ஃபேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பி, வைத்திருந்த கடிதங்களை தட்டுத்தடுமாறி ஜி.பி.முத்து, எழுத்துக்கூட்டி படித்துக் காட்டினார். அது நாளடைவில் அவரது அடையாளம் ஆனது. பின், தனதுபெயரில் யூட்யூப் தொடங்கிய ஜி.பி.முத்துவுக்கு எண்ணற்ற கடிதங்கள், அவரது இல்லத்தினை நோக்கி சென்றன.
அதில் பல கடிதங்கள் நக்கல் அடிக்கும் வகையிலும், அவரை கலாய்க்கும் வகையிலும் இருந்தன. இது யூட்யூப் பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. மேலும் சமூகத்தில் ஜி.பி.முத்துவுக்கு அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அது வருவாயாகவும் மாறியது.
இதன்மூலம் கிடைத்த புகழ் மூலம் விஜய் டிவியிலும் கலந்துகொண்டு ஒரு ரவுண்டு வந்தார். நாளடைவில் தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட், பம்பர், துணிவு ஆகியப் படங்களில் சிறுவேடங்களில் நடித்தார், ஜி.பி.முத்து. தவிர, பல்வேறு இடங்களில் கடை திறப்பு விழாவுக்கும் சென்று வருகிறார்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைந்து சில தினங்கள் ஆன நிலையில் நடிகர் ஜி.பி.முத்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’மறைந்த நடிகர் விஜயகாந்தினை போல தானும் உதவிகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். இருந்தாலும் என்னால் முடிந்தவரை உதவி வருகின்றேன். இனியும் உதவுவேன்’’ எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்