ஸ்வீட்ஹார்ட் முதல் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் வரை.. இன்று மார்ச் 14 தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
Theatre Release Movies: வெள்ளிக்கிழமையான இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன? எந்தெந்த படங்களை யார் யார் இயக்கி இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட சுவராஸ்ய தகவல்கள் குறித்த ஓர் பார்வை.

தமிழ் சினிமா திரைத்துறையை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் குறிப்பாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த மாதம் முதல் வாரத்தில் ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்', விமலின் 'படவா', யோகி பாபு நடிப்பில் 'லெக் பீஸ்' உள்பட சில படங்கள் வெளியாகி இருந்தது. அந்தவகையில், இன்று (வெள்ளிக்கிழமை) மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்ய தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஸ்வீட்ஹார்ட்
ஸ்வைத் எஸ்.சுகுமார் எழுதி இயக்கி உள்ள காதல் நகைச்சுவைத் திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்'. இதில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளது மட்டுமின்றி அவரே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு பாலாஜி சுப்பிரமணியம், எடிட்டிங் தமிழ் அரசன் செய்துள்ளார். இப்படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
பெருசு
இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'பெருசு'. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அருண்ராஜ் இசையமைத்திருக்கும் இத்திரைப்படமும் திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகிறது.
வருணன்
தண்ணீர் சேமிப்பை மையமாகக் கொண்டு ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வருணன்'. இதில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா ஜோடியாக நடித்துள்ளனர். யாக்கை பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.
டெக்ஸ்டர்
தமிழ் மற்றும் மலையாளத்தில் 'டெக்ஸ்டர்' என்ற பெயரில் புதிய படம் உருவாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜு கோவிந்த், நாயகியாக யுக்தா பிரேமி நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூரியன் ஜி இயக்கி இருக்கிறார். இப்படமும் இன்று ரிலீஸாகிறது.
ராபர்
பெண்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராபர்'. கவிதா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனத்தை 'மெட்ரோ' இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். பாண்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மாடன் கொடை விழா
தங்கப்பாண்டி இயக்கத்தில் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது மாடன் கொடை விழா திரைப்படம். இப்படத்தை சிவப்பிரகாசம் உதயசூரியன் தயாரித்து உள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படமும் மார்ச் 14ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆபீசர் ஆன் டியூட்டி
அறிமுக இயக்குநர் ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ள படம் 'ஆபிசர் ஆன் டியூட்டி'. குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா செய்துள்ளார். மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழிலில் இன்று வெளியிடப்படுகிறது.
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
காதல் கதையை மையமாகக் கொண்டு கே.ரங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜிதா நடித்துள்ளார். இப்படத்தை வி மாணிக்கம் தயாரித்துள்ளார். நளினி, டெல்லி கணேஷ், சாம்ஸ், சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் மார்ச் 14 அன்று திரைக்கு வருகிறது.

டாபிக்ஸ்