அன்பே சிவம் முதல் அயலான் வரை வீதி நாடக கலைஞன் பிரளயனின் திரையுலக பயணம்.. பா.ரஞ்சித்தையும் விட்டு வைக்காத வீதி நாடகம்!
வீதி நாடக கலைஞனாக சுழன்று கொண்டிருந்த பிரளயனை தமிழ் சினிமா அடையாளம் கண்டது மற்றும் கமல்ஹாசனால் திரைத்துறைக்கு அழைத்து வந்ததன் சுவாரஸ்யமான பின்னணியை நாம் விரிவாக பார்க்கலாம்.
அதிகாரத்தின் முகத்தின் முன் உண்மையை பேசும் வீதி நாடகக்கலை இன்றும் ஆங்காங்கே உயிர்ப்புடன் உலா வருகிறது என்றால் தன்னலமின்றி சுழன்று வரும் வெகு சில மனிதர்களே காரணம் அப்படியான மனிதர்களில் ஒருவர் தான் சென்னை கலைக்குழுவின் நிறுவனர் பிரளயன். வீதி நாடக கலைஞனாக சுழன்று கொண்டிருந்த அந்த மனிதனை தமிழ் சினிமா அடையாளம் கண்டது மற்றும் கமல்ஹாசனால் திரைத்துறைக்கு அழைத்து வந்ததன் சுவாரஸ்யமான பின்னணியை நாம் விரிவாக பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் வீதி நாடகத்தால் ஈர்க்கப்பட்டது குறித்தும் பிரளயன் மனம் திறந்துள்ளார்.
அன்பே சிவம் படத்தில் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்.. கமல் உங்களை அழைத்தாரா?
எனக்கு ஏற்கனவே கமலுடன் அறிமுகம் இருந்தது. அன்பே சிவம் படக் கதையில் இருவர் ஒன்றாக பயணம் செய்கிறார்கள். ஒருவர் விளம்பர படம் எடுப்பவர். இன்னொருவர் அதற்கு நேர் எதிராக ஒரு விஷயம் செய்பவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது. அவர் வீதி நாடகம் செய்பவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தனர். அதனால் வீதி நாடகம் குறித்து அறிந்து கொள்ள என்னை அழைத்தனர். காலையில் 10 மணிக்கு போன நிலையில் மாலை 7 மணி வரை அந்த டிஸ்கஷன் சென்றது. அடுத்து ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து போக வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் அவர்களுடைய கதையிலே சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
எங்கள் நாடகங்களை பார்க்க வேண்டும் என்றார்கள். 4 ஆவது நாள் நாடகங்களை போட்டு காட்டினோம். அதன் பிறகு அந்த படம் முழுவதும் கதை விஷயத்தில் வேலை செய்யும் ஒரு ஆளாக மாறி விட்டேன். அதில் ஒரு வீதி நாடக காட்சியை பாடலாக வைத்தனர். அந்த பாடலை எழுதிக் கொடுத்ததோடு அதை வடிவமைக்கும் வேலையில் ஈடுபட்டேன். அப்படிதான் வீதி நாடக கலை வழியாக திரைப்பட உலகில் நுழைந்தேன்.
கமலுடன் விருமாண்டி படத்தில் உங்கள் வேலை எந்த மாதிரி இருந்தது?
விருமாண்டி படத்தில் ஆரம்பத்தில் இருந்தே நான் வேலை செய்தேன். கதை, டைரக்சன் டிபார்ட்மெண்ட்டிலும் இருந்தேன். ஒன்றரை ஆண்டுகள் அந்த படத்தின் வேலைகளில் ஈடுபட்டேன். இதையடுத்து கமலுடன் தசாவதாரம் படத்திலும் வேலை செய்தேன். இதையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கதையில் மட்டும் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது.
இதை தவிர சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் ஆட்காட்டி பாடலுக்காக வேலை செய்தேன். ஆனால் ஒருவரின் தவறான புரிதலில் தொடங்கப்பட்ட வழக்கு காரணமாக அந்த பாடல் படத்தில் வெளியாகவில்லை. வழக்கில் சாதமான தீர்ப்பை தொடர்ந்து வெளிநாடுகளில் வெளியான போது பாட்டு இணைக்கப்பட்டது. இன்றும் அந்த பாடலை யூடியூப்பில் காணலாம்.
உங்கள் வழியாக திரைக்கு வந்தவர்கள் குறித்து சொல்ல முடியுமா..
நடிகர் பூ ராமு எங்களுடன் வீதி நாடகங்களில் இருந்தவர்தான். அவரை அன்பே சிவம் படத்தில் ஒரு சின்ன டயலாக் பேசினார். அடுத்து தவமாய் தவமிருந்து படத்தில் நடித்ததோடு.. பூ படத்தில் நடித்ததன் மூலம் நடிப்பில் தன்னை தக்க வைத்தார். விருமாண்டி படத்தில் கொத்தாளத்தேவன் மனைவியாக நடித்த சுஜாதா போன்றோரை அறிமுகப்படுத்தினோம். வேல ராம மூர்த்தியை நாம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் அவர் நாடகத்தில் நம்மோடு வேலை செய்தவர்தான்.
அயலான் படத்தில் உங்கள் பணி எப்படி இருந்தது?
சிவகார்த்தியனின் அயலான் படத்தில் கதையில் வேலை செய்தேன். அந்த ஏலியன் கேரக்டரில் முதலில் ஒருவரை நடிக்க வைத்தோம். அதை வைத்தே பின் ஏலியன் கேரக்டரை வடிவமைக்கும் போது முகபாவனைகளை வடிவமைப்பதிலும் பணியாற்றினோம்.
இயக்குநர் ரஞ்சித்துடன் கபாலி பட அனுபவம் எப்படி இருந்தது?
தென்னிந்திய மக்கள் நாடக விழா என்ற பெயரில் 5 நாட்கள் நாடகங்கள் நடத்தினோம். அப்போது தொடக்க நாள் நிகழ்வுக்கு வந்த ரஞ்சித் பேசும் போது தனது பள்ளிப்பருவத்தில் பார்த்த கடையாணி என்ற வீதி நாடகம் தன்னை ஈர்த்தாக கூறினார். பின்னர். ரஞ்சித்தின் கபாலி படத்தில் நான் வேலை செய்யும் சூழல் உருவானது. மலேசியாவில் கிரிமினல் நடவடிக்கையில் பாதிக்கப்படும் தமிழ் இளைஞர்களை At Risk Youths என்ற பெயரில் கவனம் கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வேறு விதமான தொழில்களை கொடுப்பார்கள். அந்த அமைப்பு என்னை அழைத்ததால் அவர்களுடன் பணியாற்றினேன். இதுகுறித்து நான் ரஞ்சித்திடம் கூறினேன். இதைத்தொடர்ந்தே கபாலி படத்தின் கதையில் பணியாற்றினேன். அது சிறப்பாகவே இருந்தது. தொடர்ந்து வரும் திரைப்படங்களில் பணியாற்றுவதோடு வீதி நாடக வேலைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்