பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இரு ரசிகர்கள் பலி!.. 10 லட்சம் அறிவிப்பு! -நடந்தது என்ன?
பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இரு ரசிகர்கள் பலியாகி இருக்கின்றனர். நடந்தது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்
புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சியின் போது அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சென்றார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரேவதி என்ற பெண்ணும், அவரது 9 வயது மகனும் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், அல்லு அர்ஜூனுக்கு மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பவன் கல்யாண் பங்கேற்ற கேம் சேஞ்சர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு ரசிகர்கள் உயிரிழந்து இருப்பது பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது.
என்ன நடந்தது?
ராஜமகேந்திரவரத்தில் நடைபெற்ற கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, காகிந்தா மாவட்டம் கைகோலுபாடுவைச் சேர்ந்த அரவா மணிகண்டா, தொக்கடா சரண் ஆகிய இருவரும் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர். நண்பர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பைக்கில் வீடு திரும்பும் போது, எதிர் திசையில் சென்ற வேன் மீது மோதினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்; ஆனால் அவர்கள் உயிர் பிழைக்கவில்லை. இது தொடர்பாக மேலும் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தில் ராஜு இரங்கல்
கேம் சேஞ்சர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு ரசிகர்களின் குடும்பங்களுக்கு ரூ .10 லட்சம் நன்கொடை அறிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ "தயாரிப்பாளர் தில்ராஜூ ரூ .10 லட்சத்தை அறிவித்து, நிகழ்வைத் தொடர்ந்து விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை உறுதியளித்து இருக்கிறார். இந்த கடினமான நேரத்தில் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்.’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது; வேதனையாக இருக்கிறது. என்னால் முடிந்த எந்த வகையிலும் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பேன்; அவர்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்குவதன் மூலம் அதனை தொடங்க விரும்புகிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.
ரசிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால், பெரிய நிகழ்வுக்கு ஒப்புக்கொள்வதில் சந்தேகம் இருப்பதாக பவன் கல்யாண் கூறியிருக்கிறார். இந்த நிகழ்வில் ராம் மற்றும் பவன் இருவரின் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கேம் சேஞ்சர் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்