Manoj Bharathiraja: மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி..
Manoj Bharathiraja: மறைந்த இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Manoj Bharathiraja: இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மார்ச் 25 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலை தகனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின்
நடிகர் மனோஜ் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாமலை
நடிகர் மனோஜ் உடலுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில், அண்ணாமலை நீலாங்கரை வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
விஜய்
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மனோஜின் உடலுக்கு நேரில் வந்து மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடந்தே சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எனது நண்பன் பாரதியின் மகனான மனோஜ் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போனேன். எனக்கு என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது. ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று காலம் விதித்த காரணத்தால் மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.
சூர்யா, சிவக்குமார்
முன்னதாக நடிகர் சூர்யா, மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார். பின், மனோஜின் மனைவிக்கு ஆறுதல் கூறினார். நடிகர் சிவக்குமாரும் காலை பாரதிராஜாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெங்கட் பிரபு
இந்தச் செய்தியைக் கேட்டு உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். நீ இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை. என் தம்பி மனோஜ் சீக்கிரமே போய்விட்டார். பாரதிராஜா மாமா குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
சந்தான பாரதி
நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி, மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
பிரபு
நடிகர் பிரபு பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று காலை நீலாங்கரை வீட்டிற்கு வருகை தந்தார்.
சீமான்
நடிகரும் இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், மனோஜின் உடலிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பின் பாரதிராஜாவின் முகத்தை தொட்டு கண்கலங்கி அழுது ஆறுதல் கூறினார்.
ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் தன் மனைவியுடன் வந்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, மனோஜ் அண்ணன் தன் வீட்டில் மதுரை ஸ்டைல் சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டார். அது கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.
நடிகர் கருணாஸ்
எங்கள் இயக்குநர் இமயத்தின் இமையாய் இருந்த தம்பி மனோஜ் அவர்களின் மரணம் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் . அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் திரு.பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
