அடுத்தடுத்து அதிர்ச்சி - மர்ம தேசத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு - அவரது முழுப்பின்னணி
அடுத்தடுத்து அதிர்ச்சி - மர்ம தேசத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு ஆகியுள்ளார்.
பிரபல எழுத்தாளரும் ஆன்மிகச்சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தர்ராஜன் காலமானார். அவருக்கு வயது 66.
இந்திரா செளந்தர்ராஜன் மதுரையில் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். குறிப்பாக, மர்மம், பேய், அமானுஷ்யம் சார்ந்த கதைகளை எழுதுவதில் வல்லவர். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தபோது உயிரிழந்தார். இன்று காலை பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழந்த நிலையில் நண்பகலில் இந்திரா செளந்தர்ராஜன் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இந்திரா செளந்தர்ராஜன்?:
இந்திரா செளந்தர்ராஜன் 1958ஆம் ஆண்டு சேலம் நகரில் நவம்பர் 13ஆம் தேதி பிறந்தவர். முழுநேர எழுத்தாளராக ஆவதற்கு முன், டி.வி.எஸ் குழுமத்தில் பணிசெய்தார், இந்திரா சவுந்தர்ராஜன். இவரது இயற்பெயர் பி.சவுந்தர்ராஜன். எழுதியது தான் இந்திரா சவுந்தர்ராஜன் என்னும் பெயரில் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முக்கியமான கதைகள் பலவும் மறுபிறவி, இயற்கைக்கு அப்பாற்பட்ட கதைகள், தெய்வீக சஞ்சலத்தால் உண்டாகும் ஃபேண்டஸி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
காஞ்சிபுரம் சங்கர மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய அனுபவங்களை ‘காஞ்சியின் கருணை’ என்ற நிகழ்ச்சியில் 300 எபிசோடுக்கு மேல் செய்தார், இந்திரா செளந்தர்ராஜன். இவரது பெயரை நாம் அடிக்கடி பார்க்கும் பக்கெட் அளவு நாவல்களில் பார்க்கலாம்.
பணியாற்றிய தொலைக்காட்சித்தொடர்கள் மற்றும் படங்கள்:
குறிப்பாக, கோட்டைபுரத்து வீடு, என் பெயர் ரங்கநாயகி, சித்தி,சிவமயம், ருத்ரவீணை, மர்மதேசம் ஆகிய தொடர்களில் கதை மற்றும் வசனத்தில், இந்திரா செளந்தர்ராஜனின் பங்கு முக்கிய இடம்பெற்றிருந்தது.
மேலும், சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு, கட்டில் ஆகியப் படங்களில் எழுத்துப் பணி செய்தார், இந்திரா செளந்தர்ராஜன். அதிலும், சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு படத்துக்கு திரைக்கதையையும் அமைத்தார். இவரது நாவல்களில் எங்கே என் கண்ணன், காற்றோடு ஒரு யுத்தம், திக் திக் திக் ஆகியவை புகழ்பெற்றவையாகும்.
மேலும் ரகசியம், விடாது கருப்பு, மாயவேட்டை, மந்திர வாசல், கிருஷ்ண தாசி, யாமிருக்க பயமேன், அது மட்டும் ரகசியம், அத்தி பூக்கள், ருத்ரம், புகுந்த வீடு, நாகம்மா, சிவ ரகசியம், ஜீ தமிழ், கங்கா சுப்பிரமணியபுரம் ஆகியத் தொலைக்காட்சித் தொடர்களிலும் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் எழுத்துப் பணி செய்திருக்கிறார்.
எழுதிய புத்தகங்கள்:
கல்லுக்குள் புகுந்த உயிர், நீலக்கல் மோதிரம், சோமஜாலம், நந்தி ரகசியம், மாயவிழிகள், நாகபஞ்சமி, சிவஜெயம், கோட்டைப்புரத்துவீடு, தோண்டத் தோண்டத் தங்கம், அஞ்சு வழி மூணு வாசல், உஷ், மகாதேவ ரகசியம், வைரபொம்மை, ஜீவா என் ஜீவா, விடாது கருப்பு, ருத்ரவீணை பகுதி1, 2, 3,4; ஆயிரம் அரிவாள் கோட்டை, அதுமட்டும் ரகசியம், மாயவானம், அப்பாவின் ஆத்மா ஆகியவை அவற்றுள் சில.
மூத்த பத்திரிகையாளர் ரவி பிரகாஷின் இரங்கல் பதிவு:
எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் காலமானது தொடர்பாக சக்தி விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் ரவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் எழுதியிருப்பதாவது, ‘’ குணச்சித்திர நடிகரும் பண்பின் உறைவிடமுமான டெல்லி கணேஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு, அதிர்ந்து, அதிலிருந்து மீளுவதற்குள் என் அன்பு நண்பர் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைந்தார் என்று தகவல்.
டெல்லி கணேஷ் அவர்களை நான் படங்களில் பார்த்து ரசித்ததோடு சரி. அவரின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு, மேற்கு மாம்பலத்தில் அவரின் நண்பர் ஒருவரின் இல்லத்தில் முக்கிய நண்பர்களை அழைத்து ஒரு சந்திப்பு உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ‘நட்பின் இலக்கணம்’ என்.சி.மோகன்தாஸ். அப்போதுதான் டெல்லி கணேஷை நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.
ஆனந்த விகடனில் இந்திரா சௌந்தர்ராஜனின் ‘இறையுதிர்காடு’ தொடர் வெளியாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தேன். அதே நேரம் சக்தி விகடன் இதழிலும் அவரின் ‘ரங்கராஜ்ஜியம்’ தொடரை வெளியிட்டேன். சுடரைப் பெரிதாக்கும் ஒரு சின்ன குச்சியின் உதவிதான் நான் செய்தது. ஆனாலும், அவர் என்னுடன் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் மறக்காமல் அவற்றுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். பின்பு, 'சக்தி சங்கமம்' என்னும் சக்தி விகடன் வாசகர்கள் சந்திப்புக்கும் அவரை அழைத்துக் கலந்துரையாடச் செய்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் பிரச்னையால் நான் அதிகம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது, என் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்துவிட்டு என்னுடன் நட்பில் இருக்கும் பிரபல எழுத்தாளர்கள் பலரும் உடனே என்னைத் தொடர்புகொண்டு மருந்துகள், மருத்துவ உதவிகள் பற்றிச் சொல்லி உதவினார்கள். வேறு ஏதேனும் உதவிகள் தேவையென்றாலும் தயங்காமல் தொடர்புகொள்ளச் சொன்னார்கள். அவர்களில் இந்திரா சௌந்தர்ராஜனும் ஒருவர்.
ஏதோ ஒருமுறை, இருமுறை அல்ல… தொடர்ந்து சில நாள்களுக்கொரு முறை என்னைப் போனில் தொடர்புகொண்டு, என் தேக நலன் எப்படி இருக்கிறது, எந்த மருத்துவரைப் பார்த்தேன், இப்போது என்ன மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன், உணவுக் கட்டுப்பாடு எப்படி என, நெருங்கிய உறவினர் போன்று அக்கறையுடன் விசாரித்துக்கொண்டிருந்தார்.
‘ஆரோக்கியமாகத்தானே இருந்தார், திடுமென என்ன ஆயிற்று அவருக்கு’ என நான் கவலையுடன் யோசித்துக்கொண்டிருந்தபோது, சற்று முன் ஒரு பிரபலம் போன் செய்து, தான் கேள்விப்பட்ட தகவலைச் சொல்லி அதிர்ச்சியூட்டினார். இந்திரா சௌந்தர்ராஜன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, பின் மண்டையில் அடிபட்டு இறந்துபோனதாக ஒரு பிரேக்கிங் நியூஸ் பார்த்ததாகச் சொல்லி வேதனைப்பட்டார் அந்தப் பிரபலம்.
‘நாம் எல்லோரும் க்யூவில் நின்றுகொண்டிருக்கிறோம். இந்திரா சௌந்தர்ராஜன் முந்திக்கொண்டு போய் டிக்கெட் வாங்கிவிட்டார்’ என அந்தப் பிரபலம் உண்மையான வருத்தத்துடன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி!
இன்னும் மூன்று தினங்களில், நவம்பர் 13-ல் அவரின் பிறந்த நாள். வாழ்த்துச் சொல்வதற்காகக் காத்திருந்த வேளையில் இந்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் இந்திரா.
ஏன் அவசரப்பட்டீர்கள் இந்திரா?!’’ என அவர் எழுதியிருக்கிறார்.
டாபிக்ஸ்