ரெங்கனுக்கே வெளிச்சம்.. ஆண்டாள் ஆலய அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!
ரெங்கனுக்கே வெளிச்சம்.. ஆண்டாள் ஆலய அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!
![ஆண்டாள் ஆலய அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா ஆண்டாள் ஆலய அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/16/550x309/srivalli_1734315108842_1734315117662.png)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நுழையவிடாமல் இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்துநிறுத்தி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி, டிசம்பர் 15ஆம் தேதி நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைக்கப்பட்ட திவ்யபிரபந்த பாசுரங்களுக்கு ஏற்ப பரதம் படித்தவர்கள் தங்களது பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்யபிரபந்தங்கள் தான் ஒலிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த இசையமைப்பாளர் இளையராஜாவை ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு சுவாமி தரிசனம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நுழைய முயன்றபோது, அங்கு இருக்கும் அந்தணர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார், இளையராஜா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இறைவனை பல பாடல்களில் பாடிய இசைஞானிக்கே இந்த கதியா என நெட்டிசன்கள் கொதித்து எழுந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
திரைத்துறையில் 50ஆவது ஆண்டை நெருங்கும் இளையராஜா:
திரைத்துறையில் 50ஆவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இளையராஜா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசையில் நல்ல பண்டிதம் பெற்றவர். ’தாய் மூகாம்பிகை’ திரைப்படத்தில் இவர் பாடிய ஜனனி ஜனனி ஜகம் நீ பாடலை, யாரும் அவ்வளவு உயிரோட்டமாகப் பாடமுடியாது. அப்படிப்பட்டவரை பிரமாணர் அல்லாதவர் என்னும் வட்டத்தில் சுருக்கி, அவரை அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுத்திருக்கின்றனர்.
முன்னதாக, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஆண்டாள் பற்றி பேசிய கருத்தை கவிஞர் வைரமுத்து சொன்னபோது, கவிஞர் வைரமுத்து பிரமாணர் அல்லாதவர் என்பதால், அவரை மன்னிப்புக்கேட்கச் சொல்லி ஆண்டாள் கோயிலின் ஜீயர்கள் பிரச்னை செய்தனர். இந்நிலையில்,தற்போது பிராமணர் அல்லாத இளையராஜாவுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.
நெட்டிசன்கள் கருத்து:
இதுதொடர்பாக ஆண்டவர் என்னும் நெட்டிசன் இட்ட பதிவில், ‘’ இளையராஜாவை கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றியமைக்கு கடும் கண்டனங்கள். அவர் ஆகம விதிகள் அறிந்தவர். அவர் தாண்டி சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு நடந்த இந்த செயல், இதனை செய்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்’’ என கருத்துரைத்து இருக்கிறார்.
அதேபோல் மற்றொரு நெட்டிசன், ’’இதேபோல் திருவண்ணாமலையில் கலெக்டருக்கு கோயில் உள்ளேயே காவல் துறை அனுமதிக்கவில்லை’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பலர் தொடர்ச்சியாக இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்