Ravi Mohan: ரவி மோகன் - ஆர்த்தியுடன் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை.. நீதிபதி அளித்த அதிரடி உத்தரவு
Ravi Mohan Divorce Case: மத்தியஸ்தர் அழைத்ததன் பேரில் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் விவாகரத்து வழக்கில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான்காவது முறையில் இருவரும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருந்த வரும் ரவி மோகன், தனது காதல் மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், " தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகர்தது வேண்டும். 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து இந்த சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மூன்று முறை சமரச பேச்சுவார்த்தை
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை இவர்கள் இருவரும் மூன்று முறைக்கு மேல் மத்தியஸ்தர் முன்பு ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர்.
விவாகரத்து வழக்கு விசாரணை
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்து பின்னர் விவாகரத்து வழக்கின் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
மனைவியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன்
முன்னதாக, தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வ அறிவித்தார். இந்த முடிவை அனைவரின் நலன் கருதியே எடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் விமர்சனங்களை முன் வைப்பவர்களுக்கு ஆர்த்தி தனது அறிக்கையின் மூலம் காட்டமான பதிலையும் அளித்து வந்தார். ஆனால், ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்தும், இயக்குநர் அவதாரம் எடுப்பது குறித்தும் அப்டேட்டுகளை வழங்கி வந்தார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிரதர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் தனக்கு எந்தவொரு சூழல் நிகழ்ந்தாலும் தனது ரசிகர்கள் தான் பக்கபலமாக இருக்கின்றனர் என்று பேசினார்.
ரவி மோகன் - பாடகி கெனிஷா உறவு குறித்த வதந்தி
ரவி மோகனின் இந்த முடிவுக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று ஒரு தரப்பும், தன்னிடம் ஆலோசிக்காமலேயே ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார் என ஆர்த்தியும் தெரிவித்து வந்தனர்.
பின் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேசிய ஜெயம் ரவி, விவாகரத்து குறித்து ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்றும்; கெனிஷா தனது நண்பர் என்றும், நாங்கள் இருவரும் இணைந்து ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க உள்ளோம் எனவும் ஜெயம் ரவி விளக்கமளித்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்