Ashok Selvan: ‘நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் தயாரிப்பாளர் கொடுக்கிற பணம்’: அசோக்செல்வன் பற்றிய ரகசியம் சொன்ன தயாரிப்பாளர்
Ashok Selvan: ‘நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் தயாரிப்பாளர் கொடுக்கிற பணம்’என அசோக்செல்வன் பற்றிய ரகசியம் சொன்ன தயாரிப்பாளர் திருமலையின் பேச்சு வைரல் ஆகியுள்ளது. எமக்குத்தொழில் ரொமான்ஸ் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Ashok Selvan: எமக்குத்தொழில் ரொமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் அசோக் செல்வன் வராதநிலையில், அவரை வெளுத்து வாங்கியிருக்கிறார், தயாரிப்பாளர் திருமலை. அந்த செய்தி வைரல் ஆகியுள்ளது.
சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் இணைந்து நடித்த படம், ‘எமக்குத்தொழில் ரொமான்ஸ்’. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் திருமலை படத்தின் நாயகன் அசோக் செல்வனை கடுமையாக விமர்சனம் செய்தார். அது வைரல் ஆகி வருகிறது.
’அந்த காலத்தில் தயாரிப்பாளருக்கு மதிப்புண்டு’:
அசோக் செல்வன் குறித்து பேசிய எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் தயாரிப்பாளர் திருமலை கூறியதாவது, '' ஒரு உச்சத்தைத் தொடக்கூடிய இயக்குநராக, ஒரு உச்சத்தைத் தொடக்கூடிய தயாரிப்பாளராக வரவேண்டும் என்பது தான் கனவு. நான் தயாரிப்பாளர் ஆவேன் என்பது ஒருநாளும் நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத தொழில். ஏனென்று சொன்னால், மறைந்த எனது குருநாதர் இயக்குநர் திரு. கே. சுபாஷ் அவர்களிடம், தொடர்ந்து 7 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன்.
நான் ஒரு இயக்குநராக வரும்போது ஜாக்கிரதையாக சினிமாவை கையாளவேண்டும் என்று தான் நான் அவரிடம் பயிற்சி எடுத்தேன். தற்போது இருக்கும் முதலமைச்சர் வரை, எனது குருநாதர் இயக்குநர் கே.சுபாஷ் அலுவலகத்துக்கு வராத ஆட்களே இல்லை. அதனால் இயக்குநராக வேண்டும் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். தற்போது 20 படங்களை தயாரித்தபிறகு தான், அவருடைய கஷ்டங்களை உணர்ந்தேன்.
மூன்று ஆண்டுகளாக நடந்த முன் தயாரிப்புப் பணிகள்:
’ஒரு இரவில் ஒரு வெற்றி வந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என என் இயக்குநர் சொல்வார். அந்தக் காலத்தில் தயாரிப்பாளருக்கு தனி மதிப்புண்டு. கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளரைத் தவிர, எல்லோருக்கும் மதிப்புண்டு.
சினிமா என்கிற தொழில் தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் இல்லை என்பதை தயாரிப்பாளர் ஆனபின் உணர்ந்தேன். ’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ என்னும் இந்தப் படத்தின் இயக்குநர் என்னிடம் முதலில் வந்து கதை சொன்னவுடன், 1 கோடி ரூபாய்க்குள் பண்ணிவிடலாம் என அவர் சொன்னவுடன் நானே பல தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரைத்தேன். யாரும் முன்வரவில்லை. இந்தப் படத்தை முடிப்பதற்காக மகேந்திர குமார் பண உதவி செய்ய முன்வந்தார். ஆனால்,மூன்று ஆண்டுகளாக சரியான நடிகரும் நடிகைகளையும் விடாமல் தேடவேண்டிய நிலைவந்தது.
’அன்றைக்கு நான் அவருக்கு கொடுத்த பணம் ரூ.31 லட்சம்’:
இந்தப் படத்தின் நடிகர் அசோக் செல்வன், அவரும் ஒரு படத்தைத் தயாரிச்சிருக்கார். அவருக்கு அதில் இருக்கும் பிரச்னைகள் தெரியும் என்பதால், பணத்தை அட்வான்ஸாக கொடுத்துட்டு, அவருடைய டேட்டுக்காக 7 மாதங்கள் வெயிட் பண்ணேன். அவரு டேட் கொடுத்தால், நடிகையின் டேட் கிடைப்பதில் பிரச்னை. இன்றைக்கு அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் இருக்கலாம். அன்றைக்கு அவருக்கு நான் கொடுத்த பணம் ரூ.31 லட்சம். வங்கி வட்டி போட்டால்கூட, ரூ. 1 கோடி வட்டி ஆகிடுச்சு. இன்றைக்கு ரூ.2 கோடி, ரூ.3 கோடி சம்பளம் சொல்றார். வாங்கட்டும். சந்தோஷம். ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால், எந்த நடிகரும் நடிகையும் கிடையாது.
’10 தயாரிப்பாளர்கள் செத்த பிறகுதான் ஒரு நடிகர் உச்சத்துக்குப் போகிறார்’:
இன்றைக்கு ரூ.10 கோடி பிசினஸ் ஆகிறது என்றால் 10 தயாரிப்பாளர்கள் செத்தபிறகுதான், ஒரு நடிகர் உச்சத்துக்குப் போகிறார்.
அந்த தயாரிப்பாளர்களை மதிக்காத எவரும் உச்சத்தில் சென்று ஜொலித்தது எல்லாம்கிடையாது. எத்தனையோ பேர் கீழே போனதை எல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஒரு இயக்குநர் இத்தனை வருஷமாகப் போராடி படம் எடுத்திருக்கார். அவர் கதை பிடிச்சுதானே நடிக்க வந்தீங்க. ஒரு ரெண்டு மணிநேரம் புரோமோஷனுக்கு கேட்டால், சொல்றோம்.. சொல்றோம்னு சொல்லி ஒரு பதிலும் இல்லை. ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுத்தால் தாங்க ஒரு நடிகர் சூட்டிங் ஸ்பாட்டுக்கே கிளம்பி வரமுடியும். வீட்டுக்கு அனுப்புற காரில் இருந்து, பெட்ரோல் இருந்து, கேரவனில் இருந்து, சாப்பாடில் இருந்து வீட்டுக்குப் போறது வரைக்கும் ஒரு தயாரிப்பாளர் கொடுக்கிற பணம்.
’அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்’:
உனக்கு உங்கள் அப்பா, அம்மா பணம் கொடுக்கலையே. உங்கள் அப்பா, அம்மாவுக்கு கார் வாங்கிக் கொடுக்கிறீயே. அது ஒரு தயாரிப்பாளர் கொடுக்கிற பணம். அவங்க எத்தனை சொத்து, தாலியைத் தவிர வித்து கொடுக்கிறாங்கன்னு யாருக்குத் தெரியும்.
ஒரு நடிகன் படத்துக்கு வந்து புரோமோட் பண்ணனும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தால்கூட படம் சூப்பர் ஹிட் ஆகும். ஒவ்வொரு படத்துக்கும் இசைவெளியீட்டில் அவர் வந்து நிற்கிறார். வாழ்த்துறார். அதற்கடுத்து எல்லா புரோமோஷன்லயும் வர்ற அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் மட்டும் தான். கன்டென்ட் பேசுறார். படத்தைக் கொண்டுபோய் சேர்க்கிறார். அதற்கப்புறம் பார்க்கிறேன் தனுஷ். ஒவ்வொரு படத்திலேயும் முன்னாடி போய் நிற்கிறார். ஒரு படம் வெளியே வந்து கோடிகளை சம்பாதிக்கப்போறது ஒரு நடிகன் மட்டும் தான்.
இது இந்தப் படத்துக்காக மட்டும் பேசலைங்க. ஒரு இயக்குநருக்கு பெரிய பக்கபலமே நடிகர்கள் தான். இவங்க எல்லாம் இருந்தால் தான், ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய உத்வேகம் வரும்.
படத்தின் வெற்றிக்குப் பின் தான் நடிகர்கள் இவ்வளவு சம்பளம் என கேட்கிறார்கள் என்றால், அது படத்தின் வெற்றியால் தான்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கிற பாலாஜி நல்லமுறையில் படத்தை இயக்கவில்லை என்றால், எப்படி ரூ.2 கோடி சம்பளம் உனக்கு வரும். பலகோடி போட்டு படத்தை எடுத்துட்டு, டிஜிட்டல், சேட்டிலைட்டுனு விற்கமுடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டுக்கிட்டு இருக்கிறோம். இங்க ஜெயிக்கணும்னு நினைக்கிறவங்களை சிலர் தோற்கடிச்சுட்டுப் போயிடுறாங்க.
நிவாஸ் பிரசன்னா மாதிரியான மியூஸிக் டைரக்டர் அவ்வளவு பிளஸ். அசோக் செல்வன் டப்பிங் முடியுறதுக்கு முன்னாடி பணம் கேட்கிறார். வேறவழியில்லாம நைட்டோட நைட்டாக அரெஞ்சு பண்ணி பணத்தைக் கொடுத்தோம்.
ஒவ்வொரு நடிகரும் திரைப்படத்தின் புரோமோஷனின்போது எல்லா இடத்திலும் வந்து பக்கபலமாக நிற்கணும். போன் எடுக்காத நடிகர் எதுக்குங்க? அப்போது மேனேஜரை பேச சொல்லுங்க. இது எல்லாமே வேதனையில் உச்சத்தில் பேசுறேன். ஸ்கிரிப்ட்டை எடுத்துக்கிட்டு பாலாஜி எத்தனை வருஷமாகப் போராடுறார். கடைசி வரை இருக்கிறாரே. நான்கு வருஷமாக தூங்கும்போது இது படம் நல்ல படம்; எப்படியாவது வெளியில் கொண்டுவரணும்னு சொல்லி, நான் உட்பட பலர் யோசிச்சிட்டு இருக்கோம். எந்த நடிகரும் படத்தின் புரோமோஷனில் நிற்கவேண்டும் என்பதை தீர்மானமாக சொல்கிறேன்’’ என முடித்தார்.
நன்றி: தி சினிமாஸ்
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்