Director Ameer: போதைப்பொருள் வழக்கு.. இயக்குநர் அமீர் அலுவலகம், வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
இயக்குநர் அமீர் அலுவலகம், வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறார்கள்.
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
மேலும் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட சென்னையில் 25 இடங்களில் வருமான அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
கொடுங்கையூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் திரைப்பட அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ரகு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இறைவன்
ஜாஃபர் சாதிக் தயாரித்த, இன்னும் வெளியாகாத ‘இறைவன் மிகப்பெரியவன்’ திரைப்படத்தை அமீர் இயக்கி உள்ளார். இதனால் அமீருக்கு போதை பொருள் வழக்கில் சமந்தம் இருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் எழுந்தது.
இதனையடுத்து விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் மேலாக விசாரணை செய்யப்பட்டது.
போதைப் பொருள் கடத்தல் பின்னணி என்ன?
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மாதம் 15 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி காவல் துறையினரும் சோதனை செய்தார்கள். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 50 கிலோ மதிப்பிலான வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு பதுங்கி இருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.
திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திமுக நீக்கியது.
ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர்.
மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9 ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்