த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின் பொதுமேடையில் தோன்றப்போகும் விஜய்.. குட்டி ஸ்டோரி கன்ஃபார்ம்.. எங்க.. எப்போது..
த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின் பொதுமேடையில் தோன்றப்போகும் விஜய்.. குட்டி ஸ்டோரி கன்ஃபார்ம்.. எப்போது எங்கு என்னும் தகவல்கள் குறித்துப் பார்ப்போம்.
த.வெ.க முதல் மாநாட்டுக்குப் பின் பொதுமேடையில் தோன்றப்போகும் விஜய், எங்கு எப்போது என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.
அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கை:
தொடங்கிய மூன்றே நாட்களில் அந்தக் கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.
மூன்று தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜய்:
மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தென் மாவட்டங்களுக்கு சென்று, அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.
அதன் அடுத்தகட்டமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் செயல்திட்டங்கள் குறித்துப் பேசிய பேச்சு வைரல் ஆகியது.
அம்பேத்கர் பற்றிய நூலை வெளியிடும் நடிகர் விஜய்:
குறிப்பாக, அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன் (முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும் என்றும், அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும் என்றும்; அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார். மேலும், அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் விகடன் பிரசுரம் வெளியிடும் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் கலந்துகொள்கின்றனர். நூலைப் பெற்றுக்கொள்கிறார், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே. சந்துரு. இந்நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அனுமதியும் நுழைவுச்சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க. முதல் மாநாட்டுக்குப் பின் நடக்கும் முதல் பொதுநிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார், என்பதால், அந்த மேடையில் நிச்சயம் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
டாபிக்ஸ்