62 Years of Nenjil Or Aalayam: ஒரே செட்டில் உருவான காதல் காவியம்! முக்கோண காதல் கதைக்கு உரமிட்ட நெஞ்சில் ஓர் ஆலயம்
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நெஞ்சை பிழியும் அளவில் எத்தனையோ முக்கோண காதல் படங்கள் வந்தாலும் அந்த ட்ரெண்டுக்கான உரமிட்ட படமாக நெஞ்சில் ஓர் ஆலயம் உள்ளது.
தமிழ் சினிமாவின் வழக்கமான பாணியிலிருந்து வேறு பாதையில் பயணித்து தரம் மிக்க அற்புதமான படைப்புகளால் ரசிகர்களின் ரசனையை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் இயக்குநர் சி.வி. ஸ்ரீதர். இவரது இயக்கத்தில் கல்யாண் குமார், முத்துராமன், தேவிகா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக் அண்ட் ஓயிட் படங்களின் கிளாசிக் காவியமாக நெஞ்சில் ஓர் ஆலயம் உள்ளது.
இந்த படத்தில் நாகேஷ், மனோரமா, விஎஸ் ராகவன், குட்டி பத்மினி உள்பட பலரும் துணை கதாபாத்திரங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். சினிமா படங்கள் எடுக்க தொடங்கிய தொடக்க காலத்தில் இருந்து நடித்து வரும் அமெரிக்க நடிகரான மிக்கி ரூனியின் படத்தின் கதையால் ஈரக்கப்பட்டு இயக்குநர் ஸ்ரீதர், நெஞ்சில் ஓர் ஆலயம் கதையை உருவாக்கினார்.
ரூனியின் படம் சிறைச்சாலையில் நடப்பதாக இருக்கும் நிலையில், அதை மருத்துவமனையில் நடப்பது போன்றி மாற்றி திரைக்கதையை உருவாக்கினார். அந்த காலகட்டத்தில் தங்களது நடிப்பால் கவனத்தை ஈர்த்த முத்துராமன், கன்னட நடிகர் கல்யாண் குமாரை பிராதான காதபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். இவர்களுடன், தேவிகா இணைந்து படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தாங்கி பிடித்திருப்பார்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கதாநாயகியின் கணவருக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அவரது முன்னாள் காதலனாக இருக்கிறார். இதில் மூவருக்கும் இடையே நிகழும் மூக்கோண காதலும், உணர்ச்சி போராட்டங்களும் இறுதியில் எதிர்பார்த்திராத திருப்பம் ஏற்படுவதும் தான் படத்தின் ஒன்லைன்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனையின் பின்னணியில் அமைந்திருப்பதால், ஒரே செட்டில் சுமார் நான்கு வாரங்களில் மொத்த படத்தையும் எடுத்து முடித்தார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரே செட்டில் எடுக்கப்பட்ட முதல் படமே நெஞ்சில் ஓர் ஆலயம் தான் எனவும் கூறப்படுகிறது. பார்வையாளர்களுக்கு இந்த படம் புதுவித அனுபவத்தை தந்ததோடு பேசவும் வைத்தது.
படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருப்பார்கள். கண்ணதாசன் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானதுடன், சிறந்த கிளாசிக் பாடல்களாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
எங்கிருந்தாலும் வாழ்க, முத்தான முத்தல்லவோ, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், சொன்னது நீ தானா, ஒருவர் வாழும் ஆலயம், என்ன நினைத்து ஆகிய அனைத்து பாடல்களும் பட்டி தொட்டிங் எங்கும் ஒலித்தன.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிவாஜி கணேசனை, திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா எங்கிருந்தாலும் வாழ்க என்று பேசியதை பாடல் வரியைாக்கினார் கண்ணதாசன். இது போல் படத்தின் ஒவ்வொரு பாடலிலும் பல சுவாரஸ்ய கதைகள் இருக்கின்றன.
நெஞ்சில் ஓர் ஆலயம் ஜனவரி 26, 1962இல் வெளியானது. முதல் வாரத்தில் ரசிகர்களை பெரிதும் ஈர்க்காமல் போன இந்த படம் பின்னர் வாய்வழி, செவிவழி செய்தியால் பிக்கப் எடுத்து 175 நாள்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. தமிழில் பெற்ற மாபெரும் வெற்றியால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் சிறந்த காதல் காவியமாகவும், முக்கோண காதல் கதை ட்ரெண்டுக்கு உரமிட்ட படமாகவும் இருந்து வரும் நெஞ்சில் ஓர் ஆலயம் வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்