'அவன் பொருள எடுத்து அவனையே போடனும்' சம்பவம் செய்யும் விக்கி நயன் ஜோடி! பற்றி எரியும் இன்ஸ்டாகிராம்
நடிகர் தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவைப் பதிவிட்டு வாழு வாழ விடு எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இது தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷை விமர்சித்து போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை
"நாம ஒருத்தர் மேல வைக்குற அன்பு இன்னொருத்தர் மேல வெறுப்பா மாறும். அப்படி மாறினா அதுக்கு அர்த்தமே கிடையாது. இந்த உலகம் மிக மோசமாக போய்ட்டு இருக்கு. அவ்ளோ நெகட்டிவிட்டி. யார் நல்லா இருந்தாலும் யாருக்கும் பிடிக்கல. இதெல்லாம் என்னென்னே புரியல. வாழுங்க வாழ விடுங்க. யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எதுக்காக ஒருத்தர் இன்னொருத்தர வெறுக்கணும். ஒருத்தர பிடிச்சிருக்கா கொண்டாடுங்க. பிடிக்கலையா தள்ளிப் போங்க அவ்வளவு தான். சிம்பிள். இது பெரிய ராஜதந்திரம் எல்லாம் கிடையாது. "என தனுஷ் பேசிய வீடியோவை பதிவிட்டு, தனுஷ் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸை இணைத்துள்ளார்.
அப்பாவி ரசிகர்களுக்காக
மேலும், தனுஷ் மேடைகளில் அதிகம் பயன்படுத்தும் வாழு வாழ விடு, ஸ்பெரட் லவ், ஓம் நமசிவாய எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறைந்த பட்சம் இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி தீவிர ரசிகர்களுக்காக! நான் கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன்! மக்கள் மாறுவதற்கு எனக் குறிப்பிட்டு தனுஷ் பேசுவதை எல்லாம் நம்பும் அவரது ரசிகர்களுக்காக வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பிறரின் சந்தோஷத்தில் நம்முடைய மகிழ்ச்சியை அடைய வேண்டும் எனவும் சூசகமாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகை நயன்தாரா தனுஷை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராமில் தனுஷுக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
நயன்தாராவிற்காக பாடல்களை செதுக்கிய விக்கி
விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியில் நானும் ரவுடி தான் எனும் படத்தை இயக்கினார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் காதல் ஏற்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "தங்கமே உன்னத்தான்" "கண்ணான கண்ணே" "எனை மாற்றும் காதலே"போன்ற பாடல்களை விக்னேஷ் சிவன் முழுக்க முழுக்க நயன்தாராவிற்காகவே எழுதியிருப்பார்.
நயன்தாரா: பியாண்ட் தி பேரிடேல்
இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் விக்னேஷ் சிவன் தன் காதலை நயன்தாராவிடம் வெளிப்படுத்தும் விதமாக அமைத்திருப்பார். இந்நிலையில், நடிகை நயன்தாரா தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, நயன்தாரா: பியாண்ட் தி பேரிடேல் எனும் ஆவணப்படத்தை வெளியிட விரும்பினார். இந்த அறிவிப்பை தனது திருமணம் முடிந்த உடன் அறிவித்தார்.
நயன்தாரா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் நானும் ரவுடி தான், தன் காதல் கதை தொடங்கிய இந்தப் படத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கொண்டாடினர். ஆனால், அந்தப் படத்தின் பாடல்களையோ, காட்சிகளையோ இவர்களால் பொது வெளியில் பயன்படுத்த முடியாது.
10 கோடி கேட்ட தனுஷ்
காரணம் இந்தப் படத்தை தயாரித்தது நடிகர் தனுஷ். இவர்கள் இந்த படத்தின் கிளிப்பிங்ஸை உபயோகப்படுத்த காப்பி ரைட்ஸ் வாங்க வேண்டும்.
இந்நிலையில், நயன்தாரா தனது ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் கிளிப்பிங்க்ஸை பயன்படுத்த விரும்பினார். இதற்காக தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடமாக காத்திருந்தார். ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து பதில் வராததால், அந்த ஆவணப்படத்தில் படப்பிடிப்பு சமயத்தில் எடுத்த படத்தில் வராத 3 வினாடி காட்சியை மட்டும் இணைத்திருந்தனர்.
உடனே, தனுஷ் தரப்பில் இருந்து ரூ. 10 கோடி ரூபாய் கேட்டு வக்கீல் கடிதம் வந்தது.
குரல் கொடுத்த நயன்தாரா
இதையடுத்து, தனுஷ் தனது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவும் பழிவாங்கும் குணத்தாலும் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்.
தனுஷ் எங்கள் மீது கொண்ட வன்மத்தால் நாங்கள் பல இடங்களில் பாதித்துள்ளோம். பொது இடங்களில் அன்பை பரப்புவோம் எனக் கூறிவரும் தனுஷ் அதை கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
எனது அறிக்கையை திருத்து வேறு ஏதேனும் பட விழாவில் நீங்கள் பேசவும் வாய்ப்புள்ளது. என் அறிக்கையை பார்த்தாவது சிலவற்றை நீங்கள் கடைபிடியுங்கள் என நயன்தாரா காட்டமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.