Story of the scene: வெற்றி போட்ட ஸ்கெட்ச்.. சாமியானாவில் விழுந்த ஓட்டை.. வடசென்னை இடைவேளை காட்சி! - எப்படி உருவானது?
வெற்றிமாறன் வட சென்னை திரைப்படத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற இடைவேளை காட்சி குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு கடந்த 4 வருடம் முன்னர் வெற்றி மாறன் கொடுத்த பேட்டியில், “எனக்கு பொதுவாக நான் எடுக்கும் காட்சிகளில் லாஜிக் இருப்பது மிக மிக முக்கியம். எனக்கு அந்த இடைவேளை காட்சியில், அன்பு செந்திலை குத்த வேண்டும். ஆனால் அன்பு குத்தியதை யாரும் பார்க்க கூடாது.
அப்படியானால், ஒன்று செந்தில் தூங்கும்பொழுது அவனை குத்த வேண்டும். ஆனால், அப்படி குத்தும் பட்சத்தில், புதிதாக அந்த பிளாக்கிற்கு வந்த அன்பு தான் இதனை செய்தான் என்பது ஈஸியாக தெரிந்து விடும்.
அதனால் நாங்கள் அந்த மாதிரி யாருக்கும் தெரியாமல் செந்திலை அன்பு குத்துவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்தோம். அதற்கேற்ப, செந்திலை வெளியே கொண்டு வருவது போல காட்சிகளை வடிவமைத்தோம்.
பொதுவாக கேரம் போர்டை வெளியில் வைத்து விளையாட மாட்டார்கள். ஆனால், அந்தக் கேள்வியே வராத அளவிற்கு, அவனை வெளியே கூட்டு வருவதையே ஒரு கேமாக மாற்றினோம். அப்படி செய்த போது, அய்யோ அவன் வெளியே வருகிறானே என்ற பயம் நமக்கு தொற்றிக் கொள்ளும்.
உண்மையில் அது லாஜிக்கலாக தவறுதான். இப்போது அன்பு செந்திலை குத்த வேண்டும். சரி அப்படியானால் அந்த சாமியானா கீழே இழுத்து விடலாம் என்று முடிவு எடுத்து, அதனை கீழே இழுத்தோம்.
முழுவதுமாக சாமியானவை இழுத்து விட்டால், யாருக்குமே அங்கு கண் தெரியாது. அதனால் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சாமியானாவில் ஓட்டை போட்டுக் கொள்ளலாம் என்று என்னிடம் சொன்னார். அப்படித்தான் ஓட்டை போட்டு, சில லைட்டுகளை வைத்து அந்த காட்சியை எடுத்தோம்
எனக்கு இன்று லாஜிக்காக இருக்கும் விஷயம், அடுத்த தலைமுறைக்கு லாஜிக்காக தெரியாது. எனக்கு முந்தைய தலைமுறை செய்தது எனக்கு லாஜிக்காக தெரியாது. ஆனால் எனக்கு என்னுடைய பர்சனல் லாஜிக் என்பது மிக மிக முக்கியம். ஒரு இயக்குனர் ஒரு படத்தை எப்போதுமே எடுப்பதில்லை என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.
படம் நடப்பதற்கான கருவி மட்டுமே ஒரு இயக்குனர். எனக்கு ஒரு ஷாட்டை எடுத்த பின்னர்தான், இன்னொரு ஷாட் என்ன என்பது தெரியும். பத்து ஷாட்களை ஒன்றாக திட்டமிடுவதெல்லாம், எனக்கு தெரியாது. அந்த தருணத்தில் என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதை கேட்டு வேலை செய்வது என்னுடைய பழக்கமாக இருக்கிறது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்