Bhavatharani Last Photo:'இதுதான் பவதாரிணி உடனான கடைசி போட்டோ'..வெங்கட் பிரபு உருக்கம்..கண்கலங்கிய ரசிகர்கள்!
RIP Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிப்பட்டிருந்த அவர் அதற்காக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 47 வயதான பவதாரிணி மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு இளையராஜாவுக்கு சொந்தமான குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பவதாரிணி உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு முன்பு, அவர் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை அவரது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பாடினர். இந்த வீடியோ பார்ப்பவர் மனதை கலங்கச் செய்வதாக இருந்தது.
இந்த நிலையில், இயக்குநரும் பவதாரணியின் சகோதருமான வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பவதாரிணியுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் 'பவதா உடனான எங்களது கடைசி புகைப்படம்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
பின்னணி பாடகரான பவதாரிணி 1984 ஆம் ஆண்டு வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். இதனிடையே விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது. 2000-ம் ஆண்டில் வெளியான 'பாரதி' என்ற திரைப்படத்தில் 'மயில் போல பொண்ணு ஒண்ணு' என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்