14 Years of Goa: மூன்று பேர் மூன்று காதல்! இயக்குநர் வெங்கட் பிரபுவின் ஜாலி பயணமாக அமைந்த கோவா
ஆக்ஷன், செண்டிமென்ட் போன்ற விஷயங்களை இல்லாமலேயே சிறந்த பொழுதுபோக்கு படத்தை ரசிக்கும் விதமாக கோவா படம் மூலம் உருவாக்கி காட்டினார் இயக்குநர் வெங்கட் பிரபு.
சென்னை 600028, சரோஜா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பின்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியான படம் கோவா. ஒரு பொழுதுபோக்கு படமாகவும், அதே நேரத்தில் ஜாலியாகவும், ரசிக்கும் விதமாகவும் சொன்ன விதத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது இந்த படம்.
இந்திய இளைஞர்களில் பெரும்பாலோனோர் செல்ல விரும்பும் சுற்றுலாதலமாக கோவா இருந்து வருகிறது. அதற்கு காரணமாக வெளிநாட்டினர் இந்தியாவில் அதிகம் வரும் இடம், அழகிய கடற்கரை, இரவு நேர பார்ட்டிகள், மதுபோதை என விடுமுறையை ஜாலியாக கொண்டாடுவதற்கான இடமாக கோவா இருப்பதுதான்.
தேனி அருகே பண்ணைபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊரின் கட்டுப்பாட்டை மீறி வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என கோவாவுக்கு செல்வதும் அங்கு நிகழும் சுவாரஸ்ய திருப்பங்களுமே படத்தின் கதை. இதை எந்த அளவுக்கு காமெடியாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் சொல்ல முடியுமா அதை செய்திருப்பார்கள்.
வெங்கட் பிரபுவின் படங்களில் அவரது கம்பெனி நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்கள் முதல் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் வருவது வழக்கம். அந்த வகையில் இந்த படத்தில் ஜெய், வைபவ் ரெட்டி, பிரேம்ஜி பிரதான கதாபாத்திரங்களிலும் சம்பத் ராஜ், அரவிந்த ஆகாஷ், விஜயகுமார், வாகை சந்திரசேகர், சண்முகசுந்தரம், ஆனந்தராஜ். ரவிகாந்த் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
ஹீரோயின்களாக சிநேகா, பியா பாஜ்பாய், மெலனி மரி ஆகியோர் நடித்திருப்பார்கள். சிம்பு, நயன்தாரா, பிரசன்னா உள்பட பலரும் கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்கள்.
கிராமம் பின்னணி காட்சிகளை பழைய படங்களின் காட்சிகளுடன் நய்யாண்டி செய்தும், கோவா தொடர்பான காட்சிகளை மிகவும் கலர்புல்லாகவும் படமாக்க ரசிக்க வைத்திருப்பார்கள். சிம்பிளான கதை என்பதால் திரைக்கதையில் ஆங்காங்கே சிறு சிறு டுவிஸ்ட்களை வைத்து கலகலப்பூட்டியிருப்பார்கள்.
படத்தில் ரவிகாந்த் புரோகிதர், லாரி டிரைவர், போலீஸ், காசினோ வீரர், சர்தார்ஜி, கஸ்டம்ஸ் ஆபிசர் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றுவார். ஒரு மிஸ்ட்ரி மேனாக வரும் இவர் கதையோட்டத்தில் நன்கு பயணப்படுவதுடன் திருப்புமுனை ஏற்படுத்துவது போல் தோன்றி காணாமல் போகும் விதமாக வித்தியசமான கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் வெங்கட் பிரபு
ஓரின சேர்க்கையாளர்களாக சம்பத் ராஜ், அரவிந்த் ஆகாஷ் நடித்திருப்பார்கள். இவர்கள் தொடர்பான காட்சிகள் எவ்வித விரசமும் இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தாலும், இந்த பாலினம் குறித்து காட்டியதற்காக படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தில் சம்பத் ராஜ் நடிப்பு வெகுவாக பாராட்டுகளை பெற்றதுடன், இப்படியொரு விஷயத்தை போல்டாக சொன்னதற்கு வெங்கட் பிரபுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானதுடன், படத்தின் மூட்க்கு ஏற்றார் போல் பின்னணி இசையும் ரசிக்கும் விதமாக இருந்தது.
ஆண்ட்ரியா குரலில் இடம்பிடித்திருக்கும் இதுவரை பாடல் சிறந்த மெலடியாகவும், பலரது ரிங் டோனாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதுவரையில் வந்திராத வகையில் காமெடி, காதல் ஜாலியாக சொன்ன சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருந்த கோவா வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்