ஆசானுக்கே அல்வா கொடுத்த 'ஐட்டக்காரன்'.. வில்லன் லுக்கில் இருக்கும் காமெடி கிங்.. HBD டைரக்டர் சுராஜ்..
தன்னை நம்பி சினிமா பார்க்க வரும் மக்களை எப்போதும் சிரித்த மனநிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவோடு இருக்கும் இயக்குநரான சுராஜிற்கு இன்று பிறந்தநாள்.
தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ரத்தத்தின் ரத்தமாய் கலந்து நிற்பதற்கும் காரணம் சினிமா மக்களின் வாழ்க்கையில் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது தான். அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு தான், தமிழ் சினிமா பிளாக் அண்ட் காலம் தொட்டு தற்போது வரை காமெடிகளுக்கும் காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
சுராஜின் விருப்பம்
இந்த காமெடி நடிகர்களை எல்லோரும் தங்கள் படத்தில் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஆனால், சில இயக்குநர்கள் மக்களின் மகிழ்ச்சி தான் தங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதா புரிந்து கொண்டு, சில சமயம் கதாநாயகர்களையே காமெடி கதாப்பாத்திரமாக மாற்றுவதும் உண்டு. இப்படி, மேலே சொன்ன இரண்டு சிந்தனைகளையும் கொண்டவர் தான் இயக்குநர் சுராஜ்.
சுந்தர்.சியிடம் பணி
இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் சுந்தர்.சி-ன் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.சுராஜ், சுந்தர்.சி-யின் முதல் படமான முறைமாமன் படம் தொடங்கும் போதில் இருந்தே அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ஜானகி ராமன், அருணாச்சலம் போன்ற படங்களில் சுந்சர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். இயல்பாகவே காமெடி விரும்பியான சுராஜ், தான் வேலை செய்த அனைத்து படங்களிலும் மக்களை கவரும் வகையிலான காமெடி இருக்க வேண்டும் என நினைத்து அதற்கு தகுந்தாற் போல வசனங்களை எழுதுபவர்.
சுந்தர்.சியின் படங்கள் பெரும்பாலும் காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டதற்கு சுராஜ் போன்ற உதவி இயக்குநர்கள் அவ்வப்போது கொடுக்கும் ஐடியாக்களும் ஒரு காரணம்.
இப்படி, முறைமாமன் படத்தில் தொடங்கிய இவரது காமெடி பயணம், அப்படியே தொடர்ந்து வின்னர் படத்தில் வடிலேலுவின் கட்டபொம்மன் கதாப்பாத்திரம் வரை செதுக்கி தந்திருப்பார்.
சரத்குமார் வழங்கிய வாய்ப்பு
இப்படி உதவி இயக்குநராகவே இருந்து கொண்டு பணியாற்றிய சுராஜை அழைத்து நாம் ஒரு படம் பண்ணுவோம் என்று கூறியது நடிகர் சரத்குமார் தான். ஜானகி ராமன் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தினாலும் சுராஜ் மேல் கொண்ட நம்பிக்கையாலும் இந்த வார்த்தைகளை அவர் கூறி இருப்பார். இதையடுத்து சரத்குமார் நாட்டாமை படம் முடித்த பிறகு சுராஜின் முதல் படமான மூவேந்தரில் நடிகக் கமிட் ஆகினார்.
இந்தப் படம் வசூல் ரீதியாக ஹிட் அடிக்கவில்லை. காரணம், நாட்டாமை படத்தில் ஊர் மக்கள் போற்றும் நபராக இருக்கும் சரத்குமாரை இந்தப் படத்தில் தாத்தா, அப்பாவுடன் சேர்ந்து அராஜகம் செய்யும் நபராக காட்டி இருப்பார் சுராஜ். இதை ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள் மூவேந்தர் படத்திற்கு சரியான ஆதரவினைத் தரவில்லை.
சமாதானம் செய்த சுந்தர்.சி
தன் முதல் படமே தோல்விப் படமாக போனதால் மிகவும் மனம் உடைந்துபோன சுராஜ் ஒரு வருடம் பொது வெளிக்கு வரவே இல்லையாம். பின் அவரை சமாதானம் செய்து, ஊக்கப்படுத்தியது எல்லாம் சுந்தர்.சி தானாம். மேலும், இவரின் முதல் பட தயாரிப்பு நிறுவனமான கங்கா கௌரி இவர் மேல் நம்பிக்கை வைத்து அடுத்த படத்தையும் இயக்க வாய்ப்பு கொடுத்தது.
பெயரை மாற்றி ஹிட் தந்த டைரக்டர்
அப்போது தான் இவர சத்யராஜ், ரம்பா, கவுண்டமனி கூட்டணியில் குங்கும பொட்டு கவுண்டர் படத்தை இயக்கி இருப்பார். இந்தப் படத்தில் இயக்குநரின் பெயர் சுராஜ் என இல்லாமல் சாய் சுரேஷ் என இருக்கும். சுராஜ் என்ற பெயரை மாற்றினால் ஒருவேளை படம் ஓட வாய்ப்பிருப்பதாக அவரை சுற்றி உள்ளவர்கள் நினைத்ததால் அவரும் ஒரு பரிட்சை செய்து பார்த்துள்ளார். இந்தப் படம் ஓரளவுக்கு அவருக்கு வெற்றியை தந்தது.
இந்த வெற்றிக்குப் பின், மீண்டும் சுந்தர். சியிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு மீண்டும் மிலிட்டரி படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.
ஆசானுக்கே அல்வா
இதனால், இவர் தலை நகரம் படத்தை பல முயற்சிகளுக்குப் பின், தனது ஆசானான இயக்குநர் சுந்தர்.சியை வைத்தே இயக்கினார். இது கதாநாயகனாக சுந்தர்.சிக்கு முதல் படம். இதனால் படம் நடிக்க வரும் ஒவ்வொரு நாளும் சுராஜிடம் கதையை கேட்டு ஆலோசித்து அதன் பின்னர் தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே செல்வாராம்.
இந்தப் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து பிளாப் இயக்குநர் என்ற பெயரிலிருந்து தப்பித்தார் சுராஜ். ஆனால் இந்தப் படம் ஒரு மலாயாள படத்தின் தழுவலி என்பதே பல ஆண்டுக்கு பின் தான் சுந்தர்.சிக்கே தெரியுமாம். இப்படி ஒரு விஷயத்தை சொல்லாமலே தன் ஆசானுக்க அல்வா கொடுத்துள்ளார் சுராஜ்.
அடுத்தடுத்த படங்கள்
இவர் தலைநகரம் வெற்றிக்குப் பின் மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன், கத்தி சண்டை, நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படங்களை இயக்கினார்.
இந்தப் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இருப்பினும், இந்தப் படங்களில் இவர் காமெடியன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தே படத்தின் கதையை வடிவமைத்திருப்பார். அவர்களுடன் கதாநாயகனும் காமெடி வசனம் பேசி கூலாகவே இருப்பர். இது காமடி கலந்த மசாலா ஆக்ஷன் படமாக கொடுக்க நினைத்திருந்தார் இயக்குநர் சுராஜ்.
நாய் சேகர் ரிட்டன்ஸில் பிரச்சனை
இவர் கடைசியாக இயக்கிய நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் கொரானா, படத்தின் தலைப்பு பிரச்சனை, பிரஸ் மீட்டில் பெண்கள் உடை பற்றி பேசிய பிரச்சனை என பல விஷயங்களை சுராஜை தாக்கியது. இதையடுத்து அவர் கடந்த 2 வருடங்களில் எந்தப் படமும் இயக்காமல் இருக்கிறார்.
இப்படி மக்களை சிரிக்க லைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட இயக்குநர் சுராஜின் பிறந்தநாள் இன்று.