"அந்த நாரவாயன் அப்போவே சொன்னான்னு சொல்லிடுவாங்க" உஷாரான சுந்தர்.சி.. என்ன ஆச்சு?
சினிமாவில் தனக்கு மிகப் பெரிய குருவாக இருந்தது சத்யராஜ் தான். அவரால் தான் நான் சினிமாவில் பல இடங்களில் தப்பித்திருக்கிறேன் என இயக்குநர் சுந்தர்.சி பேசியுள்ளார்.
!["அந்த நாரவாயன் அப்போவே சொன்னான்னு சொல்லிடுவாங்க" உஷாரான சுந்தர்.சி.. என்ன ஆச்சு? "அந்த நாரவாயன் அப்போவே சொன்னான்னு சொல்லிடுவாங்க" உஷாரான சுந்தர்.சி.. என்ன ஆச்சு?](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/09/550x309/sunder_c_sathyaraj_1733731624280_1733731648569.png)
தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயரைச் சொன்னாலே நம் மனதிற்குள் அவர் பற்றிய சில நினைவுகள் வந்து செல்லும். அப்படி சுந்தர்.சி பெயரைச் சொன்னாலே எவர்கிரீன் காமெடிகள் தான் நியாபகம் வரும்.
இவரின் முதல் படமான முறைமாமன் தொடங்கி அவர் சினிமாவில் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பல அரசியல் கதைகள் பேசும். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த இவருக்கு இந்த வித்தை எல்லாம் கைவந்த வண்ணமாகத் தானே இருந்திருக்கும்.
சுந்தர்.சி- சத்யராஜ் காம்போ
இவர், மணிவண்ணனிடம் வேலை பார்த்த காலத்தில் இருந்தே, நடிகர் சத்யராஜூடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் சத்யராஜை வைத்து படங்களை இயக்கியதுடன் அவருடன் சேர்ந்து படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சத்யராஜ், ஊர்வசி, ஆர்.ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வீட்ல விஷேசம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர்.சி, நடிகர் சத்யராஜ் தன் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி உள்ளார் எனப் பேசி இருப்பார்.
குருநாதர் சத்யராஜ்
அந்த நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்.சி, "வாழ்க்கையில் என்னோட குருநாதர்ன்னா அது சத்யராஜ் சார் தான். நான் அவர பாத்து அப்படியே ஈ அடிச்சாங் காப்பி தான் பண்ணுவேன். நானும் சத்யராஜ் சாரும் ஒரு படத்தோட ப்ரிவியூ ஷோவுக்கு போறோம்.
பயங்கர அறுவைப் படம். எங்களால படத்த இதுக்கு மேல பாக்க முடியல. வேற வழி இல்லாம படத்த பாத்துட்டு வெளிய வந்தா அந்த படத்தோட டைரக்டர், புரொடியூசர் எல்லாம் படம் எப்படி இருக்குன்னு கேக்குறாங்க. உள்ள கதறிட்டு இருந்த சத்யராஜ் சார் வெளிய வந்து படம் மாஸ்.. பக்காவா இருக்கு.. சான்ஸே இல்லன்னு சொல்லிட்டு இருக்காரு.
அந்த மனசு தான்
நான் ஷோ முடிச்சுட்டு அவரோட கார்ல போகும் போது என்ன தலைவா இது படத்த நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கன்னு கேட்டேன். அப்போ அவரு சொன்னாரு, அவரு படத்த எடுக்குறதுக்கு முன்னாடி நம்மகிட்ட கேட்ருந்தா எதாவது ஐடியா கொடுத்திருக்கலாம். படத்த எடுத்து முடிச்சு அடுத்த வாரம் ரிலீச வச்சிட்டு இருக்காரு இப்ப போய் நல்லா இல்லன்னு சொன்னா இந்த வாரம் முழுக்க சோகமா இருப்பாரு.
நாரவாயன்னு சொல்லுவாங்க
அதுமட்டுமில்லாம, இப்போ நான் உண்மைய சொல்லிடலாம். நாளைக்கு படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் யாராவது வந்து படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டாங்கன்னா கூட அதுக்கும் நம்பள தான் திட்டுவாங்க. அந்த நாரவாயன் அப்பவே சொன்னான். அவன் வாய வச்ச நேரம் படம் ஓடலன்னு சொல்லுவாங்க.
நம்ம பேருக்கு டேமேஜ் இல்ல
ஆனா நான் இப்போ படம் நல்லா இருக்குன்னு சொன்னதால, யாருக்கு பிடிக்கலன்னா என்ன படம் சத்யராஜ் சாருக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாருன்னு நம்பள பத்தி பெருமையா பேசுவான். எப்படி பாத்தாலும் நம்ம பேருக்கு டேமேஜ் வராதுன்னு அசால்டா சொல்லிட்டாரு. இது என் வாழ்க்கயில நான் கத்துக்கிட்ட பெரிய பாடம். ஆனா நான் அவர மாதிரி படத்த பாத்துட்டு பொய் சொல்றது இல்ல. அதுக்கு பதிலா படம் பாக்க போறதையே விட்டுட்டேன்.
லைம் லைட் முக்கியம் இல்ல
அதேமாதிரி இன்னொரு கதை சொல்லனும். நான் படத்துக்கு புரொடியூஸ் பண்ண ஆரம்பிச்ச போது, ஒரு பார்ட்டி நடக்குது. எல்லாம் லைம் லைட் முன்னாடி பார்ட்டிய என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க. அந்த பார்ட்டியில யாரு கண்ணுக்கும் படாம ஒரு ஓரத்துல சத்யராஜ் சார், கே.எஸ்.ரவிக்குமார் சார் இன்னும் சில பேர் இருந்தாங்க. அப்போ வந்த ஒரு ஹீரோ பார்ட்டிய என்ஜாய் பண்ணிட்டு டேன்ஸ் எல்லாம் ஆடிட்டு இருக்கும் போதே அப்படியே மயங்கிட்டாரு.
இதுதான் நல்லது
அவர சில பேர் தூக்கிட்டு போறாங்க. அந்த நடிகர அடுத்த வருஷம் பார்ட்டிக்கு கூப்டவே இல்ல. இந்த வருஷம் அதே மாதிரி வேற ஹீரோ வராரு. அப்போ தான் புரிஞ்சது நாம லைம் லைட்ல இல்லைன்னா காணம போறதுக்கு ஒரு ஓரமா இருக்குறது நல்லதுன்னு என பேசியிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்